திரைக் கதிர்

பாலிவுட் மீள் நுழைவு: குஷ்புவின் உற்சாக நடிப்பு பயணம்
திரைக்  கதிர்

35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் "கார்டர் 2' படத்தை இயக்கிய அனில் ஷர்மா இப்படத்தை இயக்க இருக்கிறார். "ஜர்னி' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் "காலா' பட வில்லன் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் நடிப்பது குறித்து குஷ்பு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் ஹிந்திப் படங்களில் நடித்து 35 ஆண்டுகளாகிவிட்டன. "ப்ரேம் தான்' என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு 1989-இல் நிறைவடைந்தது. இப்போது மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------

ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன். "பெங்களூர் டேஸ்' மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார்.

இப்படம் தமிழில், "பெங்களூர் நாட்கள்' என ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஞ்சலி, தனது அடுத்த படம் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் இதை கேஆர்ஜி தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். ""இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளர்களை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத,

சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்'' என்றார்.

--------------------------------------------------------------------------------------


விஜய்யின் முழுநேர அரசியல் என்ட்ரிக்கு முன்னதாக அவரின் கடைசி படமான "தளபதி 69' படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார், கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் எனச் சொல்லி வந்த நிலையில் இப்போது டோலிவுட் இயக்குநர் திரிவிக்ரம் இயக்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நல்ல கதை அம்சத்தோடு, விஜய்யின் இமேஜையும் உயர்த்தும் படமாக "தளபதி 69'யை கொடுக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். இதற்கான சரியான இயக்குநர் ஷங்கர்தான் என விஜய்யிடம் அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் சொல்லி வருகின்றனர்.

--------------------------------------------------------------------------------------


கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் படம் "அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

தேசத்திற்காக வீர மரணமடைந்த மேஜர் முகுந்த்தின் கதையைத் திரையில் காண அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மேஜர் முகுந்த்தின் மனைவி இந்து, "அமரன்' படம் குறித்து உருக்கத்துடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு நன்றி தெரிவித்துள்ள "அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "என்னையும் எங்கள் குழுவையும் நம்பி இந்தப் பெரிய பொறுப்பைக் கொடுத்த இந்து ரெபேக்கா மேம் அவர்களுக்கு நன்றி. மேஜர் முகுந்த வரதராஜன் சார் மற்றும் அவரது குடும்பத்தாரின் தன்னலமற்ற சேவைக்காக என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்!' என்று நெகிழ்ச்சியுடன்பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com