இந்திய அரசால் உயரும் இளம் தலைமுறை...

'மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
இந்திய அரசால் உயரும் இளம் தலைமுறை...
Updated on
3 min read

'மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அவர்கள் ஸ்கிரீன் டயமை ஸ்கில் டயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு மணிநேர விளையாட்டுக்குப் பதிலாக, ஒரு மணி நேரம் கோடிங், டிசைனிங், படிக்க என நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும். இளம் வயது என்பது வாய்ப்புகளை உருவாக்கும் காலம்; வீணடிக்கும் காலம் அல்ல. இன்று அவர்கள் செலவிடும் நேரமே, நாளை அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்கும்' என்கிறார், சென்னை, பூந்தமல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் புவியரசன் முத்துகுரு.

இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி. கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர். பொருள்சேர் உற்பத்தியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் இவரது சிறப்புத் துறைகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆறு காப்புரிமைகள் வெளியிட்டுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அனைவருக்கும் எட்டியிருக்க வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 - வன்பொருள் பதிப்பில், 'சுரங்க நடவடிக்கைகளில் சூரிய சக்தியில் இயங்கும் நீர் வெளியேற்றும் அமைப்பின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்துதல்' என்ற தலைப்பின் கீழ், ஒடிசா மாநிலம், குனுப்பூர் என்ற இடத்தில் டிசம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், பனிமலர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அணி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளது.

புவியரசன் முத்துகுரு.
புவியரசன் முத்துகுரு.

இந்தத் திட்டத்தை உருவாக்கி வெற்றிபெற்ற 'மெக் -மயின்ட்ஸ்' அணியில் தலைவராக சே.மதியழகன், உறுப்பினர்களாக சு.செ.தரண்சுரேந்தர், மு.ஜ.ராகுல், வெ.சஞ்சீவி மீனாட்சி, ச.மீனாட்சி, பா.பாண்டிபிரியா ஆகியோர் இரவு பகலாக கடுமையாக உழைத்தனர். இவர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, வழிகாட்டி, ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர்களுள் ஒருவரான முனைவர் புவியரசன் முத்துகுருவிடம் பேசியபோது:

'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் முக்கிய நோக்கம், வேலை தேடுபவர்களை உருவாக்குவது அல்ல; வேலை வழங்குபவர்களை உருவாக்குவதே. இது இந்திய அரசால் முன்னெடுக்கப்படும், உலகின் மிகப்பெரிய புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளை மையப்படுத்திய ஒரு மாதிரி ஆகும். நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்கு மாணவர்கள் புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் தேசிய அளவிலான போட்டியாகும். இதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், குழுப்பணி, தொழில்நுட்பத் திறன் ஆகியவை மேம்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் அரசு இணைந்து நாடு வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளை உருவாக்கும் முக்கிய மேடையாக இது செயல்படுகிறது.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025-இல் பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்திய அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கிய பிரச்னைக்கான புதுமையான, நடைமுறை சார்ந்த மற்றும் செலவுக்குறைவான தீர்வை குறுகிய காலத்தில் உருவாக்கி வெற்றியைப் பெற்றுள்ளனர்.

போட்டிக்காக பனிமலர் அணியினர் சூரிய சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டரை இணைத்த உயர் திறன் கொண்ட ஹைபிரிட் சக்தி அமைப்புடன் கூடிய ஒரு புரோடோடைப் மாதிரியை உருவாக்கி, செயல்படுத்திச் சமர்ப்பித்தனர். இந்த புரோடோடைப், சுரங்கங்களில் ஏற்படும் நீர் தேக்கப் பிரச்னைகளை சீராகக் கையாள உதவும் ஒரு நிலையான ஆற்றல் சேமிப்பு சார்ந்த தொழில்நுட்பத் தீர்வாக அமைந்துள்ளது.

தற்போது பல சுரங்கங்களில் நீர் வெளியேற்றத்துக்கு டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, சூரிய ஆற்றல் அடிப்படையிலான சுரங்க நீர் வெளியேற்றும் அமைப்பாகும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள டீசல் முறையை சூரிய ஆற்றலுடன் இணைத்து இந்த மாடல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிகப்படியான சூரிய பலகைகளை நிறுவ இடம் இருப்பின், டீசலை சாராமல் சுய சார்புள்ள நீர் வெளியேற்றும் முறையையும் செயல்படுத்தலாம். இதனால் டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டு எரிபொருள் செலவும் மாசுபாடும் குறைகிறது.

தானியங்கிக் கட்டுப்பாடு முறையால் தேவையான நேரத்தில் மட்டும் பம்ப் இயங்கி, ஆற்றல் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மிதக்கும் பம்ப் தொழில்நுட்பம் மாறும் நீர்மட்டத்திலும் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்கிறது. சுரங்கங்களில் நீர் தேக்கம் காரணமாக ஏற்படும் விபத்துகளைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, மடிக்கக்கூடிய மற்றும் நகர்த்தக்கூடிய சூரிய பலகை அமைப்பு, மின்கம்பி வசதி இல்லாத மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் பயன்படுகிறது. குறைந்த செலவு, ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கே உறுதி செய்யும் மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் கண்டுபிடிப்பாக இது விளங்குகிறது.

3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 500-க்கு மேற்பட்ட அணிகள் 140 ஆலோசகர்கள் என பிரம்மாண்டமான முறையில் கல்லூரி அளவில் போட்டி நடத்தப்பட்டு, அதிலிருந்து சிறந்த 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தங்களது 100 புதுமையான கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்தனர்.

கடினமான ஆய்வுக்குப் பின் அவற்றிலிருந்து ஏழு அணிகளுக்கு தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் எங்கள் 'மெக்-மயின்ட்ஸ்' குழு முதலிடம் பெற்றது. இது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, குழுப்பணி மற்றும் பிரச்னை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகும்.

இதற்காக மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வழிகாட்டியதோடு, மென்டர்-மாணவர் கலந்துரையாடல்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் மூலம் அவர்களைத் தயார்படுத்தினோம்.

இதற்கு கல்லூரியில் பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ.சி.டி.இ-ஐடியா லேப் மற்றும் உயர்தர ஆய்வகங்களும் மிக உதவியாக இருந்தன. முக்கியமாக மாணவர்களிடம், வெற்றியா, தோல்வியோ எதுவானாலும் முழுமுயற்சி அவசியம். 'தோல்வியிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்' என்ற மனப்பாங்கை வளர்த்தோம்.

இத்தகைய போட்டிகள் மூலம் நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்கு இளம் தலைமுறை தீர்வுகளை வழங்குகிறது. சமூக வளர்ச்சி, தொழில்நுட்ப சுயநிறைவு மற்றும் புதுமை கலாசாரம் ஊக்குவிக்கப்படுகிறது. இது தன்னிறைவு பெற்ற இந்தியா நோக்கில் ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.

இந்த சாதனையில் கல்லூரி நிர்வாகத்தினருக்கும், தாளாளர் மற்றும் செயலாளர், முனைவர் ப.சின்னதுரை, இயக்குநர், முனைவர் சி. சக்திகுமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்குண்டு' என்கிறார் முனைவர் புவியரசன்

முத்துகுரு.

-மு.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com