கயிறு சார்ந்த தொழிலில் கலக்க ஆசையா?

கரோனா நோய்த் தொற்றால் மனிதர்களின் வாழ்க்கைப் பயணமே மாறி வருகிறது. வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும்.
கயிறு சார்ந்த தொழிலில் கலக்க ஆசையா?

கரோனா நோய்த் தொற்றால் மனிதர்களின் வாழ்க்கைப் பயணமே மாறி வருகிறது. வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும். வெளி மாநிலங்களில், மாவட்ட தலைநகரங்களுக்கு சென்று சுகமாக வாழ வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருபவர்கள் கூட, நாம் இருக்கும் ஊரிலேயே தொழிலைத் தொடங்கி, நாம் உயர்வதுடன் சிலருக்கு வேலையும் கொடுப்போம் என்ற மன நிலைக்கு மாறி வருகின்றனர்.

கிராமத்திற்குச் சென்று விவசாயத்தைக் கையில் எடுப்போம் என பல பொறியில்துறை பணியாளர்கள் நகரத்திலிருந்து , கிராமம் நோக்கி நகர்ந்து வருகின்றனர். இப்படி, விவசாயத்தை முன்னெடுக்க நகரத்திலிருந்து, இடம் பெயர்ந்து வருபவர்களுக்கும், கிராம வாழ்க்கையிலிருந்து, நகர வாழ்க்கைக்குச் செல்ல நினைத்து, தற்போது அது வேண்டாம் என நினைத்து, கிராமத்திலேயே செட்டிலாக விரும்புபவர்களுக்கும் கைகொடுக்க தயாராக இருக்கிறது "கயிறு தொழில் முனைவோர் திட்டம்'.

காயர் உத்யமி யோஜனா என்ற பெயரில் அழைக்கப்படும் கயிறு தொழில் முனைவோர் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். விவசாயத்தை மட்டுமே மேற்கொண்டு வரும் பலர், அதில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், விவசாயத்தின் இணை தொழிலான இந்த கயிறு தொழில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உதவும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அதிக அளவு இளைஞர்கள் இதில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கயிறு தொழில் என்பது அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யக் கூடியதுமாகும். பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த தொழிலாகும். தென்னையிலிருந்து கிடைக்கும் அனைத்துமே பலன்தரக்கூடியது என்ற நிலையில், தேங்காய் நார் மூலமும் பெரும் தொழில் வாய்ப்புகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

இது ஒரு கிராமப்புறத் தொழில் என்ற வகையில், கிராமத்தினரும் பெரும் வியாபாரிகளாக , தொழில் முனைவோர்களாக உயருவதற்கு இத்தொழில் ஒரு வர பிரசாதமாகும். கயிறு தொழிலில் இந்திய அளவில் கேரளா மாநிலம் முன்னோடியாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் தமிழகம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.

புதிதாக தொழில் செய்ய விரும்புவர்களுக்காக மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகம் கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கும், தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும் "காயர் உத்யமி யோஜனா' என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

கிராமப்புறங்களில் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். கிடைக்கும் தேங்காய் மட்டை மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வழியையும் ஏற்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க வகை செய்ய வேண்டும். தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பிப்பதன் மூலம் உற்பத்தித் திறன் மற்றும் தரம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
தொழிலின் திட்ட மதிப்பு : தொழிலுக்கான திட்ட மதிப்பு ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி என்றால் காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் சேர்த்துப் பெற முடியும். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும். காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.

நாம் ஏதாவது தொகையை முதலீடாகச் செலுத்தினால்தான் அத்தொழில் மீது முழு ஈடுபாடு வரும் என்பது எல்லா தொழில்களிலுமே உண்டு. அந்த வகையில், இத்தொழிலிலும் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% பங்கை முதலீடு செய்ய வேண்டும்.

வங்கிக் கடன்: வங்கி மூலம் அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55 சதவீதம் கடன் பெற முடியும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இதற்கென்று எந்தவித வருமான வரம்பும் கிடையாது. தென்னை நார் சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் 40 சதவீத மானியம் கிடைக்கும்.

தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் இன்ஸ்டிடியூஷன்ஸ் ரிஜிஸ்டர்டு அன்டர் சொசைட்டிஸ் ரிஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் 1860, புரடக்ஷன் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டீஸ், ஜாயின்ட் லயாபிலிட்டி குரூப்ஸ் அண்ட் சாரிட்டபிள் ட்ரஸ்ட் போன்றவையும் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு : 1800 115 565 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பொள்ளாச்சி, பெங்களூரு, புவனேஷ்வர், திருவனந்தபுரம், ராஜமுந்திரி ஆகிய மண்டல அலுவலகங்களையோ, கண்ணூர், சிவகங்கை, கவுகாத்தி, கொல்கத்தா,தஞ்சாவூர் ஆகிய துணை மண்டல அலுவலகங்களையோ தொடர்பு கொள்ளலாம்.

காயர் உத்யமி யோஜனா என்ற திட்டத்தை தாண்டி வேறு சில திட்டங்களும் உள்ளன.

இத்தகைய திட்டங்களைப் பார்வையிடவும், விண்ணப்பிக்கவும் விரும்புபவர்கள் http://coirservices.gov.in/என்ற இணையதளத்தில் நுழைந்து அந்தந்த திட்டத்தின் கீழுள்ள அப்ளை நவ் என்ற பட்டனை கிளீக் செய்து விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com