

மருத்துவம் வணிகமயமாகி விட்ட இன்றைய நாளில் மருத்துவச் சேவை என்றால் என்னவென்று உணர்த்தியவர் டாக்டர்.வி.சாந்தா.
புற்றுநோய் என்றாலே உயிர் போய்விடும் என பலரும் பயந்து நடுங்கிய காலகட்டத்தில், புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது என்ற நம்பிக்கையை விதைத்து, புற்றுநோய் மருத்துவத்தில் சத்தமின்றி யுத்தம் செய்த ஈடு இணையற்ற வரலாறாக வாழ்ந்தவர்.
நோயாளிகளிடம் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று தனது வசிப்பிடத்தையும் மருத்துவமனை வளாகத்திலேயே மாற்றியமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். டாக்டர்.வி.சாந்தாவின் மறைவு, மருத்துவ உலகம் மட்டுமன்றி, புற்றுநோயால் மீண்டவர்களின் மனதிலும் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வாழ்க்கைப் பயணத்தை சற்றே அறிவோம்:
சேவையில் அன்னை தெரசாவுக்கு இணையாக போற்றப்படும் எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவச் சேவை ஆகியவை தான் டாக்டர் சாந்தாவின் 68 ஆண்டுக்கால அடையாளம்.
நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி.ராமன், சுப்பிரமணியம் சந்திர சேகர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சாந்தா. 1927-இல் மார்ச் 11-இல் சென்னை விஸ்வநாதன் - பாலாபார்வதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பிற்கு பிறகு, 1949 -இல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். படிப்பை முடித்த இவர், 1952-இல் சென்னை பல்கலைகழகத்தில் மகளிர் மருத்துவத்தில் டிப்ளமோ படித்தார். அதனை தொடர்ந்து, 1955-இல் மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
ஒரு வருடம் கனடாவில் பணிபுரிந்த பின்னர், சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய புற்றுநோய் மருத்துவ மனையின் நிலைய மருத்துவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 12 படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அங்கு 450 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையாக விளங்குகிறது. அங்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகன் கிருஷ்ண மூர்த்தியை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அடையாறு புற்றுநோய் மையத்தை உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார்.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்குப் பின்னர் 1984- இல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் டாக்டர் சாந்தா. புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதிய அவர் புற்றுநோய் சம்பந்தமான ஏராளமான விரிவுரைகளை எழுதியுள்ளார்.
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் சாந்தா, விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும், தான் சேவையாற்றிய புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார்.
உலகில் எங்கே புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உடனே அறிமுகம் செய்வதில் ஈடுபாடு காட்டியவர் டாக்டர் சாந்தா.
எளிமை, பணிவு, அன்பு ஆகியவற்றைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டு, புற்றுநோயாளிகளுக்காக முக்கியமாக ஏழைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் இரவு பகல் பாராமல் உழைத்தும், புற்றுநோய்த் துறையில், பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
தன்னுடைய சேவைப் பணிக்கு எந்த இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்வதை விரும்பவில்லை. சேவையே தனது உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவர். குடும்ப விழாக்களில் மட்டும் சொந்த பந்தங்களைச் சந்திப்பார். தனது தங்கை சுசீலா மீது மட்டும் அளவு கடந்த அன்பை காட்டி வந்தார். தனது ஓய்வு நேரத்தை புத்தக வாசிப்பிலேயே கழித்து வந்தார்.
நகைகளின் மீது துளியும் நாட்டமில்லாதவர். மெல்லிய தங்க செயின் ஒன்றை மட்டும் எப்போதும் அணிந்திருப்பார். அன்னை தெரசாவின் வெள்ளை நிற புடவை போன்று பழுப்புநிற காட்டன் புடவைகளை மட்டுமே அணிவார். புற்றுநோயாளிகளுக்காக உதவுபவர்களிடம் அதிகம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
காலம் முழுவதும் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்து வந்த இந்த அடையாறு ஆலமரம் இம்மாதம் 19- ஆம் தேதி சாய்ந்தது. இவரின் புகழ், காலம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்கின்றனர் அவருடன் புற்றுநோய் களத்தில் நின்ற மருத்துவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.