சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஓவியர் சில்பி என் மானசீக குரு!

ஓவியர் சில்பியை மானசீக குருவாக ஏற்று, கறுப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்து வருபவர்  சென்னையைச் சேர்ந்த ஓவியர் பிரியா நடராஜன்.

News image
ஓவியர் சில்பி என் மானசீக குரு!
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

எஸ். சந்திர மௌலி

ஓவியர் சில்பியை மானசீக குருவாக ஏற்று, கறுப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்து வருபவர்  
சென்னையைச் சேர்ந்த ஓவியர் பிரியா நடராஜன்.

லலித் கலா அகாதெமி, சி.பி.ஆர்ட் சென்டர்,  அடையாறு கேலரி என்று சென்னையின் புகழ் பெற்ற கலைக்கூடங்களில் இவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்றுள்ளன. இவரது கோட்டுச் சித்திரங்கள் சென்னையின் பிரபல ஆர்ட் கேலரி களில் விற்பனைக்கும் கிடைக்கின்றன. பொது முடக்க காலத்தில் தன் வழக்கமான கோட்டுச்  சித்திரங்களும் வண்ண ஓவியங்களுமாய்  வலம் வந்ததுடன், இணையம் மூலமாக ஏராளமானவர்களுக்கு ஓவியமும் கற்றுக் கொடுத்துக் வருகிறார் இவர். அவருடன் ஒரு உரையாடல்:

Story image

நீங்கள் ஓவியப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரா? அல்லது ஓவியக்கல்லூரியில் பயின்றவரா?

இரண்டும் இல்லை. எனக்கு சிறு வயது முதலே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உண்டு. பள்ளிக்கூட நாள்களில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஓவிய வகுப்பும் ஒன்று. எங்கள் ஓவிய ஆசிரியர் நான் வரையும் ஓவியங்களை திருத்தம் செய்து கொடுப்பார். ஆக, என் முதல் குரு என்று என் ஓவிய ஆசிரியரைத்தான் சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்தபோது, ஓவியக் கல்லூரியில் சேரும் அளவுக்கு எனக்கு ஓவியத் திறமை இல்லை என்று நினைத்தேன். அந்த அவநம்பிக்கை காரணமாகவே நான் ஓவியக் கல்லூரியில் சேரவில்லை. 

அப்படியென்றால் நீங்கள் ஓவியரானது எப்படி?
கல்லூரிப் படிப்பு, திருமணம், குழந்தை என்று வழக்கமான பாதையில்தான் என்னுடைய  வாழ்க்கையும் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள், மறுபடியும் படம் வரையலாமே? என்ற எண்ணம் வர சில ஓவியங்களை வரைந்தேன். குடும்பத்தினர் பாராட்ட. அந்த உற்சாகத்தில் மீண்டும் வரையத் துவங்கினேன். கூடவே, லோக குரு  என்ற ஓவியரிடம் வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் நுட்பங்களை கற்றேன். ஆனாலும், சில்பியின் கோட்டுச் சித்திரங்களால் பெரிதும் கவரப்பட்டு, கறுப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்கள் மீதே என் கவனம் சென்றது. நான் வரைந்த தஞ்சை பெரிய கோயில் ஓவியம் பல தரப்பினரது பாராட்டையும் பெற்றது. சென்னை அண்ணாசாலை வி.ஐ.டி. கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை ஒரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணி  இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்கு லட்சம் ரூபாய் போல இருந்தது.

பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று, அங்கேயே நீண்ட நேரம் அமர்ந்து ஓவியங்களை வரைகிறீர்களா?

சில்பி எனது மானசீக குரு என்றாலும், அவரைப்போல நான் கோயில்களிலேயே பல நாள்கள்  தங்கி "ஸ்பாட் ஸ்கெச்சிங்" செய்வது இல்லை. காரணம், தற்காலத்தில், எங்கே சென்றாலும் மக்கள் கூட்டம் உள்ளது. அங்கே நீண்ட நேரம் அமர்ந்து வரைவது என்பது பிராக்டிகலாக முடிவதில்லை. எனவே, ஸ்பாட்களில் சில மணி நேரம் அமர்ந்து அவுட்லைன் ஸ்கெட்ச்சை மட்டும்  முடித்துவிட்டு, பல்வேறு கோணங்களிலும் நுட்பமாக போட்டோ எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். அவற்றை வைத்து, நிதானமாக ஓவியத்தை வரைந்து முடிப்பேன். 

கடந்து வந்த ஓவியப் பாதையைத் திரும்பிப் பார்க்கிற
போது, உங்கள் நினைவுக்கு வரும் சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..


ஏனோ தெரியவில்லை, நான் வரைந்த அத்தனை கோட்டுச் சித்திரங்களிலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. தஞ்சை பெரிய கோயில்தான். இதுவரை பெரிய கோயிலை பல்வேறு கோணங்களிலுமாக அறுபது தடவைகளுக்கு மேல் வரைந்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எட்டு அடிக்கு ஆறு அடி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தை வரைந்தது ஒரு அசாதாரணமான அனுபவமாக இருந்தது. அதை வரைந்து முடிக்க எனக்கு ஒரு மாதம் ஆனது.  அது ஒரு அமெரிக்கா வாழ் தமிழர் கேட்டுக் கொண்டதன்பேரில்  வரையப்பட்டது என்பதால், வரைந்து முடித்தவுடன், பத்திரமாக ஓவியத்தை சுருட்டி, ஒரு உருளை வடிவ அட்டைப் பெட்டியில் அதீத கவனத்துடன் பேக் செய்து, கூரியர் மூலம் அனுப்பி வைத்தேன். அவர்  அதை அமெரிக்காவில் தன் வீட்டில் அழகாக ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறார். 

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு பகலில் சென்று படம் வரைந்தாலும், பெüர்ணமி இரவில் சென்று பார்த்துக் கொண்டே இருப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். எழும்பூர் மியூசியம் வளாகத்தில் உள்ள நவீன கலைக்கூடத்தின் முன்னே அமர்ந்து ஆள் அரவமற்ற அமைதியான சூழ்நிலையில் நிதானமாக வரைந்து முடித்தபோது அலாதியான அமைதி கிடைத்தது. தாஜ்மகாலை பல்வேறு கோணங்களில் வரைந்திருந்தாலும் கூட, யமுனை நதியின் மறு கரையில் இருந்து வரைந்தது வித்தியாசமான ஒன்று.  

மைசூர் நந்தி ஹில்ஸ் பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால், மைசூர் மகாராஜாவால் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் கம்பீரம் அலாதியானது.  அந்த மலை சூழ்நிலை என் மனதுக்கு பெரும்  ஆனந்தத்தைக் கொடுத்தது. கம்பீரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்! ராஜகோபுரத்தை எட்ட நின்று வரைந்தாலும், அது எனக்குள்ளே ஏற்படுத்திய அதிர்வுகளை மறக்க முடியாது. கர்நாடகாவில் ஹொய்சாள மன்னர்கள் உருவாக்கிய கலைப்பொக்கிஷங்கள் பேளூரும், ஹளேபீடும். நான் ஹளபீடு  சென்றிருந்தபோது, நான் அமர்ந்திருந்த இடத்துக்கு வெகு அருகில் ஒரு தூணில் பிரம்மாண்டமான பிள்ளையார் சிற்பமும், வெகு தூரத்தில் கோயிலும் தெரிந்தன. வித்தியாசமான கோணத்தில் அந்தச் சூழலை வரைந்தேன். 

பொதுமுடக்க ஓவிய அனுபவங்கள் பற்றி?

பொதுமுடக்கம் அமலானது முதல், வெளியில் எங்கும் போக முடியாமல் வீட்டிலேயே இருந்தாலும், அந்த கூடுதல் நேரத்தை ஓவியம் வரைவதற்கும், ஜூம் மூலமாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுக்கவும் உருப்படியாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஜூனில் உலக புலிகள் தினம் வந்தபோது புலி ஓவியங்கள் சில வரைந்தேன். புத்த பூர்ணிமாவின்போது புத்தர் ஓவியங்கள் வரைந்தேன். அன்னையர் தினத்தை ஒட்டி தாயும் சேயும் வரைந்தேன். என்னிடம் தற்போது ஜூம் மூலமாக ஏழு வயது முதல் எழுபது வயது வரை பலரும் ஓவியம் கற்றுக் கொள்கிறார்கள். பல வருடங்களுக்கு முன், அமெரிக்காவில் இருந்து ஒரு சிலர் ஸ்கைப் வழியாக வரையக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று கேட்டபோது, "அதெல்லாம் சாத்தியமில்லை"  என்று அவநம்பிக்கையோடு மறுத்த நான், இன்று ஜூம் மூலமாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பதை காலத்தின் கட்டாயம் என்றே நினைக்கிறேன்.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.