விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அறிவோம்... வரிக்குதிரை

வரிக்குதிரைகளை மிருகக் காட்சிசாலைகளில் பார்த்திருப்பீர்கள்! அவற்றைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி - இந்தக் குதிரைகளுக்கு ஏன் இப்படி வரிகளாக இருக்கிறது? என்பதுதான்! இந்தக் கேள்விக்க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:40 pm

அபி

வரிக்குதிரைகளை மிருகக் காட்சிசாலைகளில் பார்த்திருப்பீர்கள்! அவற்றைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி - இந்தக் குதிரைகளுக்கு ஏன் இப்படி வரிகளாக இருக்கிறது? என்பதுதான்! இந்தக் கேள்விக்குப் பலரும் பலவிதமான பதில்களைக் கூறியிருந்தாலும் இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!

ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். அடிப்படைக் காரணமாக அவர்கள் கூறுவது அபாயகரமான விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காகத்தான் இப்படி வரிகள் உள்ளன என்கிறார்கள்.

ஆப்பிரிக்கக் காடுகளில் காற்றில் எந்நேரமும் அசைந்து கொண்டிருக்கும் நீண்ட கோரைப் புற்களின் நடுவே வரிக்குதிரைகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது!

இந்தப் புற்களின் நடுவே ஒரு வரிக்குதிரை அசையாமல் எவ்வளவு நேரமானாலும் நிற்க முடியும். அப்படி நிற்பது அதைத் தாக்க வரும் சிங்கத்துக்குத் தெரியவே தெரியாதாம்!

அதெப்படி? வரிக்குதிரையின் வரிகள் கருப்பு நிறத்திலும் சுற்றியுள்ள புற்கள் பச்சை வண்ணத்திலும் இருக்கும்போது எப்படித் தெரியாமல் போகும் என்று வியப்பாக இருக்கிறதல்லவா? நிறக் குருடு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! பல நிறங்களைப் பகுத்தறிய முடியாமல் எல்லாமே கறுப்பு-வெள்ளையாகத் தெரியும் நிலைதான் நிறக்குருடு. பல மிருகங்களைப் போலவே காட்டு ராஜா சிங்கமும் ஒரு நிறக்குருடு! ஆகவே, அதற்குப் புற்களுக்கும் வரிகளுக்கும் வித்தியாசம் தெரியாது!

அதெல்லாம் சரி! ஒரு குதிரை நின்றால் வித்தியாசம் தெரியாது... கூட்டம் கூட்டமாக நின்றால்? இங்கேதான் இயற்கை விளையாடுகிறது!

வரிக்குதிரைகள் எங்கே சென்றாலும் கூட்டமாகத்தான் செல்லும்! கூடவே ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் நெருக்கித் தள்ளிக்கொண்டுதான் போகும்! இப்படிப் போகும் போது வரிகள் எல்லாம் சேர்ந்து ஒரு புது டிசைனை உருவாக்கும்! இந்த டிசைன் தூரத்தில் பார்க்கும் சிங்கத்துக்கு மிகவும் குழப்பத்தைத் தரும். அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாது! அது மட்டுமல்லாமல் இந்தக் கூட்டம் எந்தப் பக்கம் நகருகிறது என்பதுகூடத் தெரியாது!

ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாகக் கைரேகை இருப்பது போல, வரிக்குதிரைகளின் வரிகளும் வேறு வேறாகவே இருக்கும். (டிசைனர் சட்டை போல!) ஒன்றின் வரி அமைப்பு போல இன்னொரு குதிரையில் பார்க்கவே முடியாது.

இதில் மற்றொரு அதிசயம் என்னவென்றால், நமக்குத்தான் ஒரு வரிக்குதிரையைத் தனியாக அடையாளம் காண முடியாதாம்! வரிக்குதிரைகள் தங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ இந்த வரிகளை வைத்துதான் அடையாளம் கண்டு கொள்கின்றனவாம்! தாய்க்குதிரை தனது குட்டிகளை இனம் கண்டுகொள்ள இந்த வரிகள்தான் உதவுகின்றன.

வரிக்குதிரைகளில் இம்பீரியல், சாதாரண வரிக்குதிரை மற்றும் மலை வரிக்குதிரை என்று மூன்று வகைகள் உள்ளன. மலை வரிக்குதிரைதான் அளவில் சிறியது! நான்கு அடி உயரம்தான் இருக்கும்! இவற்றின் உடலில் உள்ள வெள்ளை நிறம் வெள்ளியைப் போல பளபளக்கும். கறுப்பு வரிகள் உடலெங்கும் இருந்தாலும் வயிற்றுப் பகுதி மட்டும் வெள்ளையாகவே இருக்கும்!

சாதாரண வரிக்குதிரைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே செல்கின்றன. இவற்றின் உடம்பு சற்றே வெளிர் மஞ்சள் நிறத்திலும் அகலமான கறுப்புப் பட்டைகளையும் கொண்டிருக்கும்.

4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சி பெற்ற வரிக்குதிரைகள் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் அதிகமாக உள்ளன. மிகக் கூர்மையான பார்வையும் (இருட்டில்கூட கண் தெரியும் என்கிறார்கள்) சிறிய ஒலியைக்கூடத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய செவித்திறனும் கொண்டவை. இவைகளுக்கு வண்ணங்களை அறியும் ஆற்றலும் உள்ளது. குதிரைகளைப் போல நின்று கொண்டே தூங்கக்கூடியவை! புற்கள்தான் முக்கிய உணவு என்றாலும் இலை தழைகளையும் உணவாகக் கொள்ளும்.

மனிதன் மற்ற குதிரையைப் போலவே, இவற்றுக்கும் பயிற்சி கொடுத்து பயன்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டது.

இப்போது இன்னொரு சந்தேகத்துக்கு வருவோம்! கறுப்பிலே வெள்ளையா அல்லது வெள்ளையிலே கறுப்பா என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுகின்றதல்லவா?

கறுப்பு நிறத்தில்தான் வெள்ளை வரிகள் உள்ளன என்று ஆப்பிரிக்கர்களும், வெள்ளை உடம்பில்தான் கறுப்பு வரிகள் அமைந்துள்ளன என்று மற்ற நாட்டினரும் நம்புகின்றனர்.

எப்படி இருந்தாலும் கம்பீரமான உடலசைவுகளைக் கொண்டதும் மிகவும் வேகமாக ஓடக்கூடியதுமான வரிக்குதிரைகள் அதிசய விலங்குகள்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.