பறவையைத் தொடர்வோம்...
ஆசியாவின் பல பகுதிகளில் வயல் வெளிகளில் காணப்படும் இந்தப் பறவையை, இதன் அழகுக்காக வீடுகளிலும் கூண்டுகளில் வளர்ப்பார்கள்.


சிவப்புச் சில்லை
சிவப்புச் சில்லை என்பது குருவி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை. ஆசியாவின் பல பகுதிகளில் வயல் வெளிகளில் காணப்படும் இந்தப் பறவையை, இதன் அழகுக்காக வீடுகளிலும் கூண்டுகளில் வளர்ப்பார்கள். முழுவதும் சிவப்பு நிறத்தில் இருப்பதால் இப் பறவையை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். கண் இருக்கும் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். உடலெங்கும் ஆங்காங்கே வெண்புள்ளிகள் காணப்படும்.
வங்காள தேசம், இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் இந்தப் பறவையைப் பார்க்கலாம். ஸ்பெயின், ப்ரூனே, ஃபிஜி, எகிப்து, மலேசியா, போர்ச்சுகல், சிங்கப்பூர் மற்றும் ஹவாய் தீவுகளிலும் இதை வீட்டுப் பறவையாக வளர்ப்பதைப் பார்க்கலாம்.
எப்பொழுதும் சிறுசிறு குழுக்களாகக் காணப்படும் இந்தப் பறவை மிக வேகமாகப் பறக்கும். இதன் குரலும் இனிமையாக இருக்கும். புல்லின் விதைகளையும் புழு பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
புற்களைக் கொண்டு உருண்டை வடிவத்தில் கூடுகளைக் கட்டும். ஒரு சமயத்தில் 5 முதல் 6 முட்டைகளை இடும். குஞ்சுகளின் அலகுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக முதலில் மாறும். சற்றே வளர்ந்த பிறகு கருப்பாக மாறிவிடும்.
வெண்தொண்டைச் சில்லை
வெண்தொண்டைச் சில்லையும் குருவி இனப் பறவைதான். அளவில் சிறியது. 11 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு வெள்ளி நிறத்தில் இருக்கும். உடலின் மேல் பகுதி பழுப்பாக இருக்கும். கருப்பு நிற சிறகுகளைக் கொண்டிருக்கும். தொண்டைப் பகுதியில் இருந்து வயிற்றின் அடிப்பாகம் வரை வெண்மையாக இருக்கும். வால் சற்றே கூராக இருக்கும்.
விவசாய நிலங்களிலும் நீர் நிலைகளிலும் காணப்படும். பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், இந்தியா, ஸ்ரீலங்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் அதிகம் இருக்கும்.
மேலும் ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அமெரிக்கா நாடுகளிலும் இப் பறவைகள் வளர்க்கப்படுகின்றன.
ஒரு குழுவில் 60 பறவைகள் வரை சேர்ந்து வாழும். புல்லின் விதைகளை விரும்பிச் சாப்பிடும்.
ஒரு சமயத்தில் 4 முதல் 8 முட்டைகளை இடும். 11 நாட்களில் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரும்.
வெண்முதுகுச் சில்லை அல்லது
வெண்முதுகு முனியா
வெண்முதுகுச் சில்லையும் குருவி இனத்தைச் சேர்ந்ததுதான். ஆசியப் பறவை.
10 முதல் 11 செ.மீ. நீளம் இருக்கும். அலகு சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் நீண்டு கருத்திருக்கும். முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பறவையின் முதுகில் சிறியதாக வெள்ளை நிறம் காணப்படும். இதனால்தான் இதற்கு இந்தப் பெயர்.
தெற்கு ஆசியா, சீனா, தைவான் மற்றும் சுமத்ராவில் அதிகம் காணப்படும். இந்தியாவிலும் இந்தப் பறவையை ஆங்காங்கே பார்க்கலாம்.
மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் புல்வெளிகளிலும் வசிக்கும். தானியங்களை விரும்பிச் சாப்பிடும்.
இதன் கூடு பெரிதாக இருக்கும். 3 முதல் 8 முட்டைகளை இடும்.
கருந்தொண்டைச் சில்லை
இதுவும் சிறிய பறவைதான். தொண்டைப் பகுதி மட்டும் கருப்பாக இருப்பதால் கருந்தொண்டைச் சில்லை என்ற பெயர்.
தானியங்களை விரும்பிச் சாப்பிடும். மரங்களில் பெரிய கூடுகளைக் கட்டி வசிக்கும். 3 முதல் 8 முட்டைகள் வரை இடும்.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும்.
12 செ.மீ. நீளம் இருக்கும் இந்தப் பறவையின் வால் மட்டும் நீண்டு அழகாக இருக்கும். அலகு சாம்பல் நிறத்திலும் உடலில் பழுப்பு நிறமும் கருப்பு நிறமும் சேர்ந்து காணப்படும். தலை முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
கருந்தலைச் சில்லை
தலை மட்டும் மிகவும் கருப்பாக இருப்பதால் கருந்தலைச் சில்லை என்ற பெயர்.
11 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அலகு வெள்ளையாக, தடித்து இருக்கும். உடல் பகுதி பழுப்பாக இருக்கும். முதுகுப் பகுதியில் சற்று சிவப்பாகக் காணப்படும்.
புற்களையும் தானியங்களையும் சாப்பிடும். புல்வெளிகளில் வசிக்கும். இதுவும் பெரிய கூடுகளைக் கட்டி வசிக்கும். ஒரு சமயத்தில் 4 முதல் 7 முட்டைகள் வரை இடும்.
இந்தியா, வங்காளதேசம், ப்ரூணே, கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, பர்மா, நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளில் மிகுதியாக வசிக்கும் பறவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...