

காட்சி-1
இடம் - சங்கர் வீடு
மாந்தர் - சங்கர், கவிதா, அப்பா, அம்மா.
அம்மா: சங்கர்! டிபன் சாப்பிட வா!
சங்கர்: வேண்டாம்! வேண்டாம்னா வேண்டாம்தான்!
அம்மா: என்ன கோபம் இவனுக்கு?
கவிதா: அறிவியல் பேச்சுப் போட்டியிலே அவனுக்குப் பரிசு கிடைக்கலே! அந்தக் கோபம்! எங்க பள்ளிக்கூடத்திலே எனக்குக் கிடைச்ச பரிசைக் கூட அவன் பார்க்கலே!.., பாராட்டலேம்மா...
அப்பா: சங்கர்! இதுக்கா கோபமாயிருக்கே? இன்னும் பல போட்டிகள் நடக்கத்தான் போறது....முயற்சி பண்ணா கிடைக்காமலா போயிடும்?
சங்கர்: கிடைக்காது...!
அப்பா: கிடைக்கும் சங்கர்! நம்பிக்கையோட இரு! கண்ணைத் துடைச்சிக்கிட்டு வா! பொருட்காட்சிச் சாலை பார்க்க ஆசைப்பட்டுக் கிட்டிருக்கே! இன்னிக்குப் போகலாம்!
காட்சி-2
இடம்-பொருட்காட்சி சாலை
மாந்தர்-சங்கர், அப்பா, கவிதா, நீலா, மணி. போட்டி நடத்துனர்.
சங்கர்: அப்பா! அங்கே பாருங்க...,ஒலி பெருக்கியிலே ஏதோ சொல்றாங்க...
ஒலிபெருக்கி: வாங்க, வாங்க, குழந்தைகளே! வாங்க! விதவிதமான போட்டிகள்...கண்ணுக்கும் மூளைக்கும் சவால் விடும் போட்டிகள்! அறிவியல் போட்டிகள்! பங்கேற்புக் கட்டணம் ஒரு போட்டிக்குப் பத்து ரூபாய்தான்! ஆனால் பரிசா கிடைக்கப் போறது இருநூறு ரூபாய்! வாங்க...,வாங்க!
அப்பா: என்ன போட்டியிலே கலந்துக்க ஆசையா?
சங்கர்: ம்!...நான் ரெடி! பெரிய பரிசு! விடக்கூடாது!
கவிதா: பேசாதே! செய்து காட்டு! அப்பா! அங்க பாருங்க நம்ம எதிர்வீட்டு மணியும், நீலாவும் வராங்க...,வா நீலா!
நீலா: கவிதா! நாங்களும் போட்டியிலே கலந்துக்கப் போறோம்!
போட்டி நடத்துனர்: குழந்தைகளே வாங்க! உட்காருங்க! நல்லா கேட்டுக்குங்க! இந்த வரிசையிலே பலவிதமான போட்டி அறைகள் இருக்கின்றன. எல்லாமே சுவையான போட்டிகள்! முதல் போட்டியிலே உங்களுக்குப் பதினைந்து அடி தூரத்திலே, ஒரு வாளி இருக்கும். ஒரு பூப்பந்தை அந்த வாளிக்குள்ளே குறிபார்த்துப் போடணும்! ஒவ்வொருவரும் மூன்று முறை மட்டுமே முயற்சி செய்ய வேண்டும்.
சங்கர்: போட்டுட்டா உடனே பரிசு கிடைச்சுடுமா?
போட்டி நடத்துனர்: ஆ! தாராளமா கிடைக்கும்! அடுத்த போட்டி இதுதான்! ஒரு மேஜை மேலே ஐம்பது மெழுகுவர்த்திகள் இருக்கும்...ஒரே ஒரு தீக்குச்சியைப் பத்த வச்சு அந்த ஐம்பதையும் ஏத்தணும்!.....மூணாவது போட்டி கேட்டுக்குங்க....ஒரு நிலைக் கண்ணாடியிலே மூன்று பூக்களின் பெயர்கள் இடம் வலமா தெரியும்...,அந்த மூணும் என்னன்னு கண்டுபிடிச்சு ஒரு தாளில் எழுதிக்குடுக்கணும்!
சங்கர்: ரொம்ப ஈஸி!
போட்டி நடத்துனர்: அடுத்தது...,ஒரு மேஜையிலே பதினைந்து புகைப்படங்கள் இருக்கும்! அவை எல்லாம் பிரபல விஞ்ஞானிகளின் புகைப்படங்கள்! அவர்களின் பெயர்களை வெளியில் சொல்லாமல் ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுக்க வேண்டும். எல்லாப் பெயர்களும் சரியாயிருந்தால் பரிசு! இதுக்கப்புறமும் ரொம்ப சுவையான கடைசி போட்டி இருக்கு! அதைப் பத்தி அங்கே சொல்வாங்க! இப்போ நீங்க போட்டிக்குப் புறப்படுங்க!
காட்சி: 3
இடம்: கண்காட்சி சாலை
மாந்தர்: சங்கர், கவிதா, நீலா, மணி.
அப்பா: சங்கர், போட்டிக்குப் போகலாமா?
சங்கர்: போப்பா! நான் கலந்துக்கப் போறதில்லே! எல்லாப் போட்டியிலேயும் கவிதாதான் "வின்' பண்ணிக்கிட்டு வரா.
அப்பா: நீயும் சரியா பண்ணு...,வின் பண்ணலாம்! வெற்றி தோல்வி நம்ம கிட்டேதான் இருக்கு.
மணி: ஆமாம் சங்கர்! நம்பிக்கையோடு கலந்துக்க சங்கர்!
சங்கர்: சரி!
போட்டி நடத்துனர்: இந்த போட்டி அறிவியல் சம்பந்தப்பட்டது...,இதோ பாருங்க, இந்த மேஜை மேலே ஒரு பிளாஸ்டிக் டப்பா! டப்பா நிறைய குண்டூசிகள். பக்கத்துலே என்ன இருக்கு சொல்லுங்க!
நீலா: நான்கு இடுக்கிகள் வச்சிருக்கீங்க. இவை எதுக்கு?
போட்டி நடத்துனர்: சொல்றேன். இந்தப் போட்டிக்கு நான்கு நிபந்தனைகள். முதலாவதா போட்டியிலே கலந்துக்கறவங்க மட்டும்தான் அறையிலே இருக்கணும். மத்தவங்க மூணு பேரும் வெளியிலே நிக்கணும்.
சங்கர்: அது ஏன்?
போட்டி நடத்துனர்: அதுக்குக் காரணம் இருக்கு...,இரண்டாவது நிபந்தனை....,ஒரே ஒரு இடுக்கியோட உதவியாலதான் அத்தனை குண்டூசிகளையும் வெளியே எடுக்கணும்! அப்புறம் இந்த காலி டப்பாவுக்குள்ள போடணும். மூன்றாவது நிபந்தனை...,குண்டூசிகளைக் கையால் அள்ளிப் போடக்கூடாது. நாலாவது...,மூணு நிமிஷ நேரத்துல இதைச் செய்யணும். நீங்க எப்படி இந்தப் போட்டியை எதிர்கொள்றீங்கன்னு தெரிஞ்சுக்க, செல்ஃபோன்லே வீடியோவாப் பதிவு செய்திடுவோம்! சரி! இப்போ (நீலாவை) நீ வாம்மா! மத்தவங்க அறைக்கு வெளியிலே போய் நில்லுங்க...
கவிதா: நீலா! ஆல் தி பெஸ்ட்!
(போட்டியில் நீலாவும், மணியும் தோற்று வெளியே வருகிறார்கள்)
கவிதா: சங்கர்!...,நீ போ! கவனமா செய்.
(மூன்று நிமிடங்களுக்குப் பின் சங்கர் வருகிறான்)
மணி: என்ன சங்கர்! என்ன ஆச்சு?
சங்கர்: இடுக்கியால கொஞ்சம் கொஞ்சமா பாதி அளவு குண்டூசிகளை எடுத்துட்டேன்....அதுக்குள்ளே நேரமாயிடுச்சு.
மணி: எனக்கும் அப்படித்தான் ஆச்சு! கஷ்டமான போட்டிதான்!
நீலா: கவிதா அக்கா! இப்போ உள்ளே போயிருக்காங்க...,என்ன ஆகப்போகுதோ?
(இரண்டு நிமிடங்களில் கவிதா மகிழ்ச்சியுடன் வெளியே வருகிறாள்)
நீலா: கவிதா அக்கா, என்ன வெற்றியா? கை கொடு!
மணி: இரண்டு நிமிஷத்துலே எப்படிக்கா "வின்' பண்ணிட்டு வந்திருக்கீங்க?
போட்டி நடத்துனர்: (வெளியே வந்து) அதுக்கான விடையை இந்த வீடியோவிலே பாருங்க...புரிஞ்சுக்குவீங்க...இங்கே பாருங்க, நீங்க மூணு பேரும் எதையுமே யோசிக்காம ஏதோ ஒரு இடுக்கியை எடுத்து குண்டூசிகளைக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கிட்டுருக்கீங்க...இது சரியான முறை இல்லை. அதனால நேரமும் ஆயிடுச்சு. இப்போ கவிதா என்ன செய்யறா பாருங்க...! மேஜை மூலையிலே ஒரு சின்ன ஆணி இருக்கறதையும் பாக்கறாங்க! மேஜை மூலையியிலே ஒரு சின்ன ஆணி இருக்கறதையும் பார்க்கறாங்க! கொஞ்சம் யோசிக்கறாங்க! இப்போ அந்த ஆணியை ஒவ்வொரு இடுக்கிப்பக்கமா காட்டறாங்க...,கடைசி இடுக்கிப்பக்கம் வந்ததும் சின்ன ஆணி வேகமாப் பாய்ந்து இடுக்கியிலே ஒட்டிக்கிறது. இந்த இடுக்கியை நீங்க யாருமே தொடல்லே.
சங்கர்: ஓ! அப்படீன்னா அதுல காந்த சக்தி இருக்கு.
போட்டி நடத்துனர்: ஆமாம்! அதைப் புரிஞ்சிக்கிட்டு அந்த இடுக்கியை குண்டூசி டப்பாவிலே மூணு முறை விட்டாங்க....,இதோ பாருங்க...குண்டூசியெல்லாம் கொத்துக் கொத்தா ஒட்டிக்கிட்டு மேல வரது.
மணி: சபாஷ் கவிதாக்கா!
போட்டி நடத்துனர்: இந்தக் கொத்து ஊசிகளை இன்னொரு சாதா இடுக்கியால் காலி டப்பாவிலே தட்டிவிடறாங்க! காந்த ஊசியைக் கண்டுபிடிக்கத்தான் நாங்க அந்த ஆணியையும் அங்கே வச்சிருந்தோம்! அதைக் கவிதா கண்டுபிடிச்சுட்டாங்க!
நீலா: கவிதா! உன்னால எப்படி இப்படி எல்லா போட்டியிலேயும் ஜெயிக்க முடியறது?
கவிதா: ம்!...,அது ஒரு கண்ணாடி ரகசியம்!
நீலா: கண்ணாடி ரகசியம்னா?
கவிதா: நாளைக்குப் பகல் பன்னிரண்டு மணிக்கு எங்க வீட்டு மொட்டை மாடிக்கு வாங்க, சொல்றேன்!
அப்பா: சரி, வாங்க, எல்லாருக்கும் "ஐஸ் கிரீம்' வாங்கித் தரேன்!
காட்சி-4
இடம்- மொட்டை மாடி
மாந்தர்- கவிதா, சங்கர், நீலா, மணி.
கவிதா: வாங்க!...வாங்க!
நீலா: கண்ணாடி இரகசியத்தை இப்போ சொல்றியா?
கவிதா: ம்....இது என்ன சொல்லுங்க.
மணி: "கான்வெக்ஸ் லென்ஸ்' தானே...அதாவது ரெண்டு பக்கமும் லேசா குவிஞ்சா மாதிரி இருக்கும்.
கவிதா: ஆமாம்! குவி ஆடின்னு தமிழிலே சொல்லுவாங்க! இந்த ஆடியும் ஒருவகைக் கண்ணாடிதான்! இப்போ இந்தக் கண்ணாடிக்குக் கீழ்ப்பக்கம் தரையிலே ஒரு பேப்பர் துண்டை வைக்கிறேன். பேப்பர் மேல என்ன தெரியுதுன்னு பாருங்க!
நீலா: ஏய், பிரகாசமா ஒரு ஒளிப்புள்ளி தெரியறது..
கவிதா: அதோ அங்கேயும் ஒரு வெள்ளைத்தாள் கிடக்கு...,அதுக்கு மேல என்ன தெரியறது?
மணி: சாதாரணமா சூரிய வெளிச்சம் பரவலா பட்டுக்கிட்டிருக்கு!
கவிதா: சரி, இப்போ இந்த காகித்ததுக்கு மேல இருக்கிற ஒளிப்புள்ளியைப் பாத்துக்கிட்டே இருங்க.
சங்கர்: எதுவும் நடக்கல்லையே...
கவிதா: பொறு!....பொறு...
நீலா: ஆ...,இதோ புகைய ஆரம்பிக்குது.
சங்கர்: பாருங்க...ஒளிப்புள்ளி பட்ட இடம் எரிய ஆரம்பிக்கிறது.
கவிதா: ஆனா...,தள்ளி இருக்கிற காகிதம் எரியாம அப்படியே கிடக்கு. கண்ணாடி கீழே இருந்த இது எரிஞ்சுடுத்து. இதுதான் கண்ணாடி இரகசியம்!
நீலா: இதுக்கும் உன் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்?
கவிதா: சொல்றேன். தன் மேல் பக்கத்துல பரவலா பட்ட சூரிய ஒளிக்கதிர்களை இந்தக் கண்ணாடி தன் கீழ் பக்கத்திலே ஒரு பிரகாசமான புள்ளியா மாத்திடுச்சி. அதனால அதிக ஒளி, சூடு உண்டாகி காகிதமும் எரிஞ்சுடுத்து. இது போலத்தான் நாமும் நம் மன எண்ணங்களை ஒழுங்கு படுத்தணும்...., ஒருமைப் படுத்தணும்...எந்த வேலை செய்தாலும் அதுலே முழுக் கவனத்தையும் குவிக்கணும். உதாரணமா, ஒரு போட்டியிலே கலந்துகிட்டா, அந்த போட்டி விவரங்களை அலசிப் பார்க்கணும். சூழ்நிலையைக் கவனிக்கணும். ஆழமா ஒரு மனதோடு சிந்திக்கணும்...இதனாலதான் மேஜை மூலையிலே அவங்க வச்சிருந்த ஆணியை என்னால் கவனிக்க முடிஞ்சது.
சங்கர்: நாங்களும்தான் கவனமா விளையாடினோம்!
கவிதா: இல்லை சங்கர்! வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டிய எண்ணங்கள் குவியலே! மேஜையிலே என்னென்ன இருக்குன்னு கவனிக்கலே...அதைப் பத்தி, ஏன்..., எதுக்குன்னு சிந்திக்கலே. நாம தேர்வுகள்ளே வெற்றி பெறணும்னாகூட, இப்படித்தான் கவனம் சிதறாம பாடங்களைப் படிக்கணும்! புரிஞ்சுண்டு படிக்கணும். விஷயங்களைத் தெரிஞ்சுக்கற ஆசையோடு படிக்கணும். நான் சொன்னது சரிதானே?
சங்கர்: ஆமாம் கவிதாக்கா! கவனமும் யோசனையும் முக்கியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!

அம்மு அபிராமியின் ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

