/

மரங்களின் வரங்கள்!: குருந்த மரம்!

நான் தான்  குருந்த மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் என்பதாகும். நான் ரத்தாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 10:26 am

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

நான் தான்  குருந்த மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் என்பதாகும். நான் ரத்தாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  நான் முல்லை நிலத்திற்குரிய மரம். குவிந்த என் பூக்கள் வெண்மை நிறத்தில் நறுமணத்துடன் காணப்படும்.   என் இலைகள் பச்சையும், வெளிறிய வெள்ளையும் கலந்தது போல் காணப்படும். என் மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகள் காணப்படும். சங்க இலக்கியத்தில் என் மலரினை குரா, குரவு, குருந்தம் எனவும் அழைத்துள்ளனர். என்னுடைய இலை, பழம் மருத்துவ குணமுடயவை. என் கனியை நீங்கள் உணவாக உண்ணலாம். அது  உடல் வெப்பத்தை நீக்கி, பசியைத் தூண்டி வயிற்று வாயுவை அகற்றும்.  

வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் என் மரத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்னு சொல்றாங்க.நான் ஆற்றோரங்களில் அதிகமாக வளருவேன்.

நமக்கெல்லாம் படி அளக்கும் இறைவன், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள என் மரத்தடியில் தான் குருவாக இருந்து மாணிக்கவாசகப் பெருமானுக்கு உபதேசம் செய்தார்.  அதாவது குரு இருந்த மரம் குருந்த மரமாயிற்று. இம்மரத்தில் உள்ள இலைகள் பல்வேறு வாசனைகளை உடையதாக இருக்கும். ஒரு இலை நார்த்த இலை வாசனை என்றால், இன்னொரு இலை ஆரஞ்சு இலை மணம் தரும். 

சோதியே சுடரே சூழொளி விளக்கே, கரிகுழற் பணைமுலை மடந்தை, பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய், பங்கயத் தயனும்மா லறியா, நீதியே செல்வத் திருப்பெருந் துறையில், நிறைமலர்க் குருந்தமே வியசீர், ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால், அதெந்துவே என்றரு ளாயே (திருவாசகம் அருட்பத்து 1) --என குருந்த மரத்தின் கீழிருந்து தனக்கு அறிவு விளக்கம் செய்த குருவாகிய இறைவனை பாடுகிறார் மாணிக்கவாசகர். 

நான் மலர்களுடன் எப்போதும் செழிப்பாக இருப்பேன் என்பதால், என் மர நிழலில் குருமார்கள் கல்வி போதிப்பதை பண்டைத் தமிழினம் மரபாகக் கொண்டிருந்தது. குழந்தைகளே, நீங்கள் நல்லா படிக்கனும்னா, என் மரத்தடியில் வந்து படிங்க. 

நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில், அருள்மிகு ஆத்மநாதசுவாமி,  திருப்புனவாயில் அருள்மிகு விருத்தப்புரீஸ்வரர் என்கிற பழம்பதிநாதர்,  கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை – அத்திக்கடவு அருகே உள்ள அருள்மிகு குருந்தைமலை முருகன்,  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, அருள்மிகு நீள்நெறிநாதர் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். என் ராசி சிம்மம். மானுடத்தை வழிநடத்தும் பண்புகளில் மரங்களின் பங்கு மிகப் பெரியது.  ஆன்மிகத்திலும் அவை ஆற்றிய பங்கு அளப்பரியது.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.