/

மரங்களின் வரங்கள்!: அகத்தி மரம்

நான் தான் அகத்தி மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டி புளோரா என்பதாகும்.  

News image
Updated On :7 ஜூன் 2019, 6:30 pm


என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் அகத்தி மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டி புளோரா என்பதாகும்.  நான் ஃபாபேசி செஸ்பேனியாகுடும்பத்தைச் சேர்ந்தவன். என் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருக்கும். என் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். நான் ஆண்டின் எல்லா பருவத்திலும் வளரக் கூடியவன்.  நான் ஒரு சிறந்த மூலிகை மரம். என்னிடம் 63 வகைச் சத்துகள் உள்ளன.   "அகத்திக்குப் பெரும்பாடு தீரும், அகத்திக்கு வேக்காடுதனையகற்றும்' எனும் பழமொழிகள் என் பெருமைதனை உணர்த்தும். 

என் இலை,  பூ பட்டை மற்றும் வேர் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டவை. நான் கொடுக்கும் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும், 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் உள்ளன.  மேலும், என்னிடம் மாவுச் சத்து, இரும்பு சத்து, விட்டமின் ஏ சத்து ஆகியவையும் உள்ளன.  

உடலில் உள்காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவ குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் நான் வைத்திருக்கிறேன்.  என் இலையிலும், பூவிலும் அதிக விட்டமின்கள் சத்துள்ளது. அகத்தி கீரை இரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும்.

நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் என் இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டி பருகினால் மாலைக் கண் நோய் குணமாகும். என் இலையிலிருந்து சாறை எடுத்து ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் குணமாகும்.  என் கீரையைப் பொடியாக்கி நீர் அல்லது பாலில் கலந்து பருகினால் நாள்பட்ட வயிற்று வலி குணமாவதோடு வயிற்றில் உள்ள புழுக்களையும் நீக்கும்.  இலையை அரைத்துப் பசை போலாக்கி காயங்களுக்குக் கட்டினால், புண்கள் விரைவில் ஆறும், சீழ் பிடிக்காது. 

அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிந்தால் கண் வலி குணமாகும். சாறெடுத்து நெற்றிப் பொட்டில் பூச, தலைவலி நீங்கும். பூக்களை கஷயாமாகவும் அருந்தலாம். பூவை சமைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும். என் வேர்ப்பட்டையை நீரிலிட்டு குடித்து வந்தால்  ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் நீக்கும். என் மரப்பட்டையை தோல் தொழிலுக்கும் பயன்படுத்தறாங்க. குழந்தைகளே, என் கீரையை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கி விடும். 

நான் தரும் கீரையை நீங்கள் வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் உஷ்ணம், காப்பி, தேநீர் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.  என் இலைகள் கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகிறது.  என் மரப்பட்டையின் சாறை நாள்பட்ட சிரங்கின் மீது தடவினால் அது போன இடம் தெரியாது.  

என் மரப்பட்டை தோல் தொழிலுக்கும் பயன்படுகிறது.  என் பட்டையிலிருந்து உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது. என் வேரை அரைத்து மூட்டுகளின் மீது தடவினால் மூட்டு வலி குணமாகும். என் இலையிலிருந்து இப்போதெல்லாம் தைலமும் தயாரிக்கிறாங்க.  என் மரக் குச்சிகள்  கூரை வேய்வதற்கும்,  வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும், வெடிமருத்து செய்யவும் பயன்படுகின்றன. 

குழந்தைகளே, கால்நடை தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் அகத்தி மரக் கன்றுகளை இலவசமாக வழங்கறாங்க. வாங்கி பயன் பெறுங்க.  மரம் மனிதனுக்கு தருது வரம். மண்ணுக்கு அளிக்குது புது உரம். அதை வெட்ட உயரக் கூடாது  உன் கரம். அதுவே உன் தரம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.