விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரங்கம்: தகுதித் தேர்வு!

ராணி - அரசே!... அமைச்சரவையில் புதிதாக ஒருவரை நியமிக்க இருப்பதாகச் சொன்னீர்களே.... 

News image
Updated On :8 மார்ச் 2019, 6:30 pm

புலேந்திரன்

காட்சி - 1
இடம் - அரண்மனை,
மாந்தர் - மன்னர், ராணி

ராணி - அரசே!... அமைச்சரவையில் புதிதாக ஒருவரை நியமிக்க இருப்பதாகச் சொன்னீர்களே.... 
மன்னர் - ஆமாம்....
ராணி - அந்தப் பதவியில் யாரை நியமிக்க எண்ணியிருக்கிறீர்கள்?.... 
மன்னர் - மறைந்த நமது மூத்த அமைச்சரின் மகன் மதிவாணனைத்தான்.... 
ராணி - என் சகோதரன் சந்திரஹாசன் இருக்கும்போது ஏன் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்?...
மன்னர் - அப்படியா சொல்கிறாய்?....அமைச்சர் ஆவதற்கான தகுதி அவனுக்கு இருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாதே!....
ராணி - சந்திரஹாசனுக்கு தகுதி இல்லை என்று நினைக்கிறீர்களா?..... அவன் மிகவும் புத்திசாலி!.... நீங்கள அவனைப் பற்றி அறிந்திருக்கவில்லை.... மிகவும் கீழ்ப்படியும் குணம் கொண்டவன்.... நமக்கும் நம் சொந்தத்தில் இருப்பவர்கள் பக்கத்தில் இருந்தால்.... அதுவும் முக்கிய பதவியில் இருந்தால் நல்லதுதானே....
அரசன் - அப்படியில்லை ராணி,..... ராஜாங்க விஷயம்!...... கீழ்ப்படிதலைவிட சமயோசிதமாகச் செயல்படுவது மிக முக்கியம்!...... உறவினர் என்பது தகுதியில்லை... மேலும், நாமும் அவனிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள முடியாது!.....  தகுதியிருந்தால் அவனை அமைச்சராக நியமிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.... நான் மதிவாணனையும் நாளை காலை  11 மணிக்கு  வரச் சொல்லியிருக்கிறேன்.... சந்திரஹாசனை காலை 10 மணிக்கு வரச்சொல்லேன்...
ராணி - சரி,.... அவன் புத்திசாலி!.... நாளை வரச்சொல்கிறேன்!....

காட்சி - 2
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, சந்திரஹாசன்.

(சந்திரஹாசன் பத்து மணிக்கு முன்னதாகவே வந்து அரண்மனையில் காத்திருக்கிறான். அரசர் ராணியுடன் வருகிறார்...)
சந்திரஹாசன் - வணக்கம்!
மன்னர் - (கையமர்த்தி) வணக்கம்! நலமா?
சந்திரஹாசன் - நலம்.... அக்கா சொன்
னாங்க.... அதனாலதான் வந்தேன்.... 
(சந்திரஹாசன் தன் கல்வித்தகுதி, திறமைகள் பற்றிப் பெருமையோடு விளக்குகிறான்....மன்னர் புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறார்....- அப்போது தெருவில் மணிகளின் ஒலியோடு வண்டிச் சத்தமும், மாடுகளை தே!... தே!... என்று விரட்டும் சத்தமும் கேட்கிறது---)
மன்னர் - (சந்திரஹாசனைப் பார்த்து) சாலையில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கிறது.... என்ன என்று அறிந்து வா!.... 
(சந்திரஹாசன் வெளியேறுகிறான்)

காட்சி - 3
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, சந்திரஹாசன்.

(சந்திரஹாசன் வேகமாகச் சென்று, விசாரித்துவிட்டுத்  திரும்பி வருகிறான்.... )
சந்திரஹாசன் - அரசே!.... சாலையில் ஒருவர் மாட்டு வண்டியில் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு போகிறார்....
மன்னர் - அப்படியா?.... அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?....
சந்திரஹாசன் - அதை நான் கேட்கவில்லை..... இதோ அறிந்து வருகிறேன்..... 
(வேகமாக வெளியேறுகிறான்)

காட்சி - 4
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, சந்திரஹாசன்.

சந்திரஹாசன் - அரசே!.... அனைத்தும் நெல் மூட்டைகளாம்!.... 
மன்னர் - அப்படியா? சரி, அந்த வண்டியில் எத்தனை மூட்டைகள் ஏற்றிப் போகிறாராம்?....
சந்திரஹாசன் - நான் அதை எண்ணவில்லையே..... பொறுங்கள் அரசே, இதோ போய் விசாரித்து வருகிறேன்....
(சந்திரஹாசன் வேகமாக வெளியேறுகிறான்)

காட்சி - 5
இடம் - அரண்மனை
 மாந்தர் - மன்னர், ராணி, சந்திரஹாசன்.

சந்திரஹாசன் - அரசே!.... அந்த வண்டியில் பத்து நெல்மூட்டைகள் இருந்தன....விசாரித்துவிட்டேன்!.... நானும் எண்ணிவிட்டேன்!.... 
மன்னர் - பத்து மூட்டைகளா!.... நல்லது.... எங்கே கொண்டு செல்கிறாராம்?.... 
சந்திரஹாசன் - இதோ நான் விரைவில் கேட்டு வருகிறேன் அரசே!....
(சந்திரஹாசன் மறுபடியும் வேகமாக வெளியேறுகிறான்)

காட்சி - 6
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, சந்திரஹாசன்.

சந்திரஹாசன் - அரசே!... அந்த வண்டி மூட்டைகளோடு சந்தைக்குப் போகிறதாம்!.... 
மன்னர் - ரொம்ப சந்தோஷம்!....நீ  போகலாம்!....
சந்திரஹாசன் - (தனக்குள்) அவர் சொன்னதையெல்லாம்  உடனே செய்துவிட்டோம்.... அக்காவின் சிபாரிசு  வேறு இருக்கிறது....
நமக்கென்ன கவலை!....
(சந்திரஹாசன் வெளியேறுகிறான்)

காட்சி - 7
 இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, காவலன், மதிவாணன்.

மன்னர் - (காவலரிடம் ) மதிவாணன் என்பவர், என்னைப் பார்க்க  இப்போது வருவார்.... உடனே என்னைப் பார்க்க வரச்சொல்
காவலர் - உத்தரவு அரசே....
(மதிவாணன் அரசரைப் பார்க்க அரண்மனைக்கு வருகிறார்.... அவரைக் கண்ட காவலர் அவரை அரசரிடம் அனுப்புகிறார்..... மதிவாணன் அரசரைச் சந்திக்கிறார்)

காட்சி - 8
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், அரசி, மதிவாணன்.

மதிவாணன் - அரசே, வணக்கம்!....
மன்னர் - வாருங்கள் மதிவாணரே!.... நலமா?....
மதிவாணன் - நலம் அரசே!.... 
மன்னர் - அமருங்கள்!.... 
(மதிவாணன் அமர்கிறார்....-அப்போது மறுபடியும்  தெருவில் மணிகளின் ஒலியோடு மாட்டுவண்டிச் சத்தமும், மாடுகளை தே!... தே!... என்று விரட்டும் சத்தமும் முன்போலவே கேட்கிறது-)
மன்னர் - சாலையில் ஏதோ ஒரு வண்டிச் சத்தம் கேட்கிறது.... அது என்ன என்று விசாரித்து வாருங்கள்!.... 
மதிவாணன் - இதோ சென்று விசாரித்து வருகிறேன் அரசே!.... 
(மதிவாணன் வெளியேறுகிறார்)

காட்சி - 9
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி, மதிவாணன்.

மதிவாணன் - அரசே!.... பக்க்தது கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்னும் விவசாயி, தனது வயலில் விளைவித்த கட்டைச் சம்பா நெல் பத்து மூட்டைகளை, அடுத்த ஊரில் நடக்கும் சந்தையில் விற்று வருவதற்காக தனது பார வண்டியில் ஏற்றிக்கொண்டு போகிறார்!....
மன்னர் - சரி,....நீங்கள் போகலாம்....நாளை என்னை சபையில் வந்து சந்திப்பீர்!

காட்சி - 10
இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், ராணி.

(மன்னர் ராணியின் முகத்தைப் பார்க்கிறார்)
ராணி - என்னை மன்னித்து விடுங்கள் அரசே!.... அமைச்சர் ஆவதற்கான தகுதி மதிவாணனுக்கே உள்ளது!.... சந்திரஹாசனுக்கு இல்லை என்பது இப்போது மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது!.... ஆகவே நீங்கள் மதிவாணனையே அமைச்சராக நியமியுங்கள்!.... என் ஆசையைவிட நாட்டின் நலமே மிக முக்கியம்!....
(ராணி புன்னகைக்கிறாள்)
மன்னர் - (புனுமுறுவலுடன்...) நல்லது ராணி!.... நீ இப்படிச் சொல்வாய் என்பதை நான் அறிவேன்.... நாளை மதிவாணனுக்குப் பதவி ஏற்பு விழா!....
ராணி - அவருக்கு எனது வாழ்த்துகள்!
மன்னர் - (கையைத் தட்டிக் காவலரிடம்...) அந்த வண்டிக்கார கோவிந்தனை இங்கே வரச்சொல்!
(கோவிந்தன் வருகிறார்.... - மன்னர் அவரிடம் 100 பொற்காசுகளைக் கொடுக்கிறார் அரசர்)
மன்னர் - நான் நடத்திய தகுதித் தேர்வுக்கு ஒத்துழைத்ததற்கு நன்றி!....
(அரசருக்கு நன்றி கூறிவிட்டுப் பொற்காசுகளுடன் மகிழ்ச்சியோடு  கோவிந்தன் வெளியேறுகிறார்....)
ராணி - (சிரித்துக் கொண்டே) இதுவும் உங்கள் நாடகமா?......
மன்னர் - ஆமாம்!.... பின்னே?....நாம் நினைத்தபோது ஒரு வண்டிக்காரர் வருவாரா என்ன? 
(சற்று பலமாகவே சிரிக்கிறார் அரசர்)

(திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.