அருட்சுடர்!
பீட்டர் நான்கு மெழுகு வர்த்திகள் வைத்திருந்தான். அதில் மூன்று மெழுகு வர்த்திகளுக்கு அமைதி, அன்பு, அறிவு, என்ற பெயர்களைச் சூட்டினான்.


பீட்டர் நான்கு மெழுகு வர்த்திகள் வைத்திருந்தான். அதில் மூன்று மெழுகு வர்த்திகளுக்கு அமைதி, அன்பு, அறிவு, என்ற பெயர்களைச் சூட்டினான். ஒரு மெழுகுவர்த்திக்குப் பிறகு பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். அறையில் இருந்த அன்னை மேரியின் படத்திற்கு முன் அவற்றை ஏற்றி வைத்தான். அவை எரிந்து கொண்டிருந்தன. பீட்டர் தன் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் மனம் உருகிப் பிரார்த்தனை செய்தான்.
காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது. "அமைதி' என்ற பெயருடைய மெழுகுவர்த்தி, ""ஐயய்யோ!..... நாம் அணைந்து விடுவோம் போலிருக்கிறதே!...'' என நினைத்தது.
அது பயந்தபடியே அணைந்தும் விட்டது. சிறிது நேரத்தில் "அன்பு' என்ற மெழுகுவர்த்தியும் அணைந்து விட்டது! சிறிது நேரம் படபடத்துக் கொண்டிருந்த "அறிவு' என்ற மெழுகுவர்த்தியும் அணைந்து விட்டது!
பிரார்த்தனை முடிந்து பீட்டர் தன் கண்களைத் திறந்தான். ஒரு மெழுகு வர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருப்பதையும், தான் பெயர் சூட்டிய மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதையும் கவனித்தான். தான் பெயர் சூட்டாத ஒரு வர்த்தி மட்டும் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். "ச்சே!... நான் பெயர் வைத்த வர்த்திகள் அணைந்து விட்டனவே!' என நினைத்து வருத்தப்பட்டான் பீட்டர்.
எரிந்து கொண்டிருந்த மெழுகு வர்த்தி பீட்டரைப் பார்த்து, ""கவலைப்படாதே!..... பத்திரமாக என்னை உன் கைகளால் அணைத்தபடி காற்று அதிகம் வீசாத இடத்திற்கு எடுத்துச் செல்!'' என்றது.
பீட்டருக்கு ஆச்சரியாமாய் இருந்தது! மெழுகுவர்த்தி பேசுகிறது!
மெழுகு வர்த்தி கூறியபடியே அதை காற்று அதிகம் வீசாத பகுதிக்கு எடுத்துச் சென்றான். அது அமைதியாய் எரிந்து கொண்டிருந்தது.
""மற்ற மெழுகு வர்த்திகளை இங்கு எடுத்து வா!'' என்றது அந்தப் பெயரிடப்படாத மெழுகுவர்த்தி!
பீட்டருக்கு திகைப்பாக இருந்தது. அது சொன்னபடியே மற்ற மெழுகுவர்த்திகளை எடுத்து வந்தான்.
""என்னைப் போலவே அவற்றையும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைப்பாய்!.... என் ஒளியிலிருந்து அவற்றை ஏற்றுவாய்!'' என்றது அந்த மெழுகு வர்த்தி! அப்படியே செய்தான் அவன்.
மற்ற மெழுகுவர்த்திகளிடம் அதற்கு இருந்த அன்பை ஆச்சரியத்தோடு பார்த்தான் பீட்டர்! அது மட்டும் இல்லாமல் தன் ஒளியிலிருந்து அவற்றை ஏற்றவும் அறிவோடு ஒரு யோசனை சொல்கிறதே இந்த மெழுகுவர்த்தி! பீட்டருக்கு வியப்பு தாங்கவில்லை! இந்த மெழுகுவர்த்திக்குத்தான் பெயர் வைக்கவில்லை..... இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தான் பீட்டர்.
""என்ன யோசிக்கிறாய்?.... எனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றுதானே!...''
திகைப்புடன், ""ஆமாம்!'' என்றான் பீட்டர்.
எனக்கு, "நம்பிக்கை' என்று பெயர் வை என்றது அந்த மெழுகு வர்த்தி.
பீட்டரின் மனம் பரவசத்தில் ஆழ்ந்தது! கண்களில் நீர்! அன்னை மேரியைப் பார்த்தான்! அன்னையின் முகத்தில் அருட்சுடர்!
அந்த அறையில் நம்பிக்கையால் அமைதியும், அன்பும், அறிவும் ஒருங்கே சுடர் விட்டுக்கொண்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...