காட்சி -1
இடம்: வீடு
மாந்தர்: அம்மா விமலா, ராஜா.
(கிராமத்தில் பெரியதாகத் தெரிந்த ஓர் ஓட்டு வீடு. சுற்றிவர சுப்பு தாத்தா போட்ட விதையில் உருவான அடர்ந்த, உயரமான மரங்கள். வீட்டிலிருந்து ஓடி வந்த ஆறு வயது சிறுவன் தன் நண்பர்களுடன் தெருவில் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அப்போது...)
தாய் விமலா: ராஜா.. கண்ணா ராஜா.. (கூப்பிட்டுக்கொண்டே வருகிறார்)
ராஜா: என்னம்ம்மா... (என்றபடி ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக் கொள்கிறான்)
விமலா: வாடா ராஜா சாப்பிடலாம். நேரமாயிடுச்சுல்ல...
ராஜா: இரும்மா... இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்.
விமலா: இப்ப நீ வரலன்னா தாத்தா சாப்பிட்டுத் தூங்கப் போடயிடுவாரு... அப்புறம் உனக்கு யாரு கதை சொல்வா... யாரு சாப்பாடு ஊட்டுவா?''
ராஜா: என்ன... தாத்தா தூங்கப் போயிடுவாரா? இதோ வந்துட்டேன்... (வீட்டுக்குள் ஓடுகிறான்)
காட்சி - 2
இடம்: வீடு
மாந்தர்: தாத்தா சுப்பு, அம்மா, ராஜா.
(வீட்டுக்குள் ராஜா ஓடிப் போய் ஈசி சேரில் படுத்திருந்த தாத்தாவின் காலைக் கட்டிக் கொள்கிறான். அவரும் அவனை அணைத்தவாரே...)
தாத்தா: வாடா செல்லம் சாப்பிடலாம்...
(இருவருக்கும் விமலா சாப்பாடு பரிமாற தாத்தா கதை சொல்லிக்கொண்டே உணவை அவனுக்கு ஊட்ட... அவனும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே சாப்பிடுகிறான். பிறகு தாத்தா தன் அறையில் உள்ள ஜன்னல் கம்பிக்கு வெளியே ஒரு மண் சட்டியில் தண்ணீரும், பிஸ்கட்டுகளையும் வைக்கிறார்)
ராஜா: தாத்தா... நான்தான் வைப்பேன்... ம்ம்... கொடுங்க எங்கிட்ட... (என்று கட்டளையிடுகிறான்)
தாத்தா: (சிரித்துக்கொண்டே) இந்தா... நீயே உன் பிஞ்சுக் கையால வை... (என்று அவன் கையில் கொடுக்கிறார். அதை வாங்கி ஜன்னலுக்கு இடுக்கில் கையை விட்டு பிஸ்கட் துண்டுகளைப் போட்டு, மண் சட்டியில் தண்ணீரை ஊற்றுகிறான்ராஜா. அதற்காகவே காத்திருந்தது போல இரண்டு காகங்கள் வேகமாகப் பறந்து வந்து ஜன்னலுக்கு வெளியே அமர்கின்றன)
தாத்தா: (அதைப் பார்த்ததும்) வந்துட்டீங்களா? வாங்க... வாங்க... இன்னிக்குக் கொஞ்சம்
லேட்டாயிடுச்சா...?
(என்று தன் நண்பர்களிடம் பேசுவது போலப் பேசுகிறார். என்ன வியப்பு! இரண்டு காக்கைகளும் அவரைப் பார்த்து கா..கா.. என்று அவர் கேள்விக்கு பதில் கூறின. அதன் பிறகுதான் சாப்பிட ஆரம்பித்தன. இது இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாக இதைப் பார்க்கிறான் ராஜா.)
ராஜா: தாத்தா... இந்தக் காக்கா எல்லாம் எப்படி நம்ம வீட்டுக்குக் கரெக்டா வருது...?
தாத்தா: பறவைகளும் மனுசங்க மாதிரிதான் கண்ணா... "மதியாதார் தலைவாசல் மிதியாதே'ன்னு ஒளவைப் பாட்டி சொன்ன மாதிரி தன் கிட்ட யாரு அன்பா இருக்காங்களோ, யாரு மதிச்சுக் கூப்பிட்றாங்களோ... அவங்ககிட்டதான் பறவைகளும் மற்ற விலங்குகளும் அன்பா இருக்கும். (என்று கூறி தாத்தா புன்னகைத்தார்.
ராஜா: சரி தாத்தா... நாமதான் சாப்பிட்ட உடனே தண்ணி குடிக்கிறோம். இந்தப் பறவையெல்லாம்கூட அப்படித்தானா தாத்தா...?
தாத்தா: (தலையாட்டியபடி) ஆமான்டா கண்ணா... நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்தா உடனே அவங்களுக்குக் குடிக்க தண்ணி குடுக்கறது எப்படி நம்ம பாரம்பரிய பழக்கமோ, அதுபோலத்தான் இந்தப் பறவைகளுக்கும் தாகம் எடுக்குமில்லையா...? அதுக்குத்தான் தண்ணி வைக்கிறோம்... வெயில் காலத்தில் பாவம் அதுங்க எங்க போய் தண்ணி குடிக்கும் சொல்லு...?
(என்று வருத்தமாகக் கூறியவர் தன் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்)
ராஜா: ஏன் தாத்தா... அழறீங்க...?
தாத்தா: ஒண்ணுமில்லப்பா... பாரம்பரியமா இருந்ததெல்லாம் இப்போ கட்டாயமாயிடுச்சு... வறட்சியால இந்த ஜீவன்களெல்லாம் தண்ணி கிடைக்காம அலையுதுங்க... நான் சின்ன பையனா இருக்கும்போது இந்த ஊர்ல மரம், செடி, கொடியெல்லாம் வளர்ந்து பசுமையா இருக்கும். இந்த வீட்டைச்சுத்தி இருக்கிற மரங்களெல்லாம் நான் போட்ட விதைதான். அன்னிக்கி திரும்பிப் பார்க்கிற இடமெல்லாம் ஏரி, குளம், குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வழியும்... பறவைகளும் விலங்குகளும் அங்கே போய் தண்ணீர் குடிச்சிட்டு மகிழ்ச்சியோடு போகும்... ஆனா இப்ப காடுகளை அழிக்கிறதாலையும், ஏரி, குளங்களில் வீடு கட்டுறதாலயும் மழையும் குறைஞ்சு போச்சு... மழை நீரை தேக்கி வைக்க ஏரி, குளம் இல்லாததால தண்ணீர் பஞ்சமும் தலை விரித்தாடுது. பணம் கொடுத்து கேன் கேனா தண்ணிய வாங்கி குடிச்சிகிட்டு இருக்கோம். (என்று வேதனையோடு சொன்னார்)
ராஜா: ஆமா தாத்தா... நீங்க அடிக்கடி ஒன்னு சொல்வீங்களே... அது இப்ப எனக்கு ஞாபகத்துக்கு வருது... சொல்லவா...?
தாத்தா: ஓ... பரவாயில்லையே... சொல்லு கண்ணு கேட்கறேன்...
ராஜா: ""ராஜா கண்ணா... குறைஞ்சபட்சம் ஒரு விதை அல்லது ஒரு செடியையாவது நாம இந்த மண்ணுல விதைத்து அதை விருட்சமாக்கணும்... அதுதான் நாம அடுத்த தலைமுறைக்கு செய்யற மிகப் பெரிய உதவி''ன்னு சொல்வீங்களே... நான் சொன்னது சரியா தாத்தா...?
தாத்தா: அட... கரெட்டா சொல்றியே... அதுமட்டுமில்லப்பா... நம்ம சுயநலத்துக்காக காட்டை அழிச்சு, ஏரி குளங்களை ஆக்கிரமிச்சு பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மிகப் பெரிய கேடும், துரோகமும் செய்துகிட்டிருக்கோம்... அதனாலத்தான் ஏதோ என்னால முடிஞ்ச இந்தப் பரிகாரத்தை நான் தினமும் செய்யறேன். தங்குவதற்கு மரம் இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் கஷ்டப்படும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இப்படி எல்லோரும் தண்ணியும் சோறும் வைக்கத் தொடங்கினால் மற்ற உயிர்களும் மகிழ்ச்சியா வாழுமே...
(சொல்லிக்கொண்டே தாத்தா சட்டியில் தண்ணீரை ஊற்றினார். உடனே காகங்கள் நீரினுள் தங்கள் அலகை நுழைத்து நீர் அருத்தின)
காட்சி -3
இடம்: வீடு
மாந்தர்: ராஜாவின் அப்பா ரவி, அம்மா விமலா, ராஜா.
(தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் ரவி மட்டும் மிகவும் கவலையாகத் திரும்பி வந்தார்)
விமலா: என்னாச்சுங்க... மாமா எங்கே...?
ரவி: அப்பாவுக்கு சளி அதிகமாகிட்டதால மூச்சுத் திணறல் அதிகமாயிடுச்சு... உடனே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்னு சொன்னதுமே சரின்னு அட்மிட் பண்ணிட்டேன்... அவரோட துணிகளை எடுத்து ஒரு பையில வை.. நீயும் உடனே கிளம்பு... ராஜா வீட்டுலயே இருக்கட்டும்...
விமலா: சரிங்க... இதோ கிளம்பறேங்க...
ராஜா: நானும் தாத்தாவைப் பார்க்க வரேம்பா...ப்ளீஸ்...
ரவி: கரோனா தொற்று நேரத்துல நீ அங்கெல்லாம் வரக்கூடாது கண்ணா... தாத்தாவுக்கு சரியானதும் வீட்டுக்கு வந்துடுவாரு... நீ சமத்தா இங்கேயே இரு... நாங்க சீக்கிரமா வந்துடுவோம்...
காட்சி -4
இடம்: வீடு
மாந்தர்: ரவி, விமலா, ராஜா.
(தாத்தா இல்லாமல் வீடே வெறுச்சோடிக் கிடப்பதாக ராஜா உணர்ந்தான். தினமும் காகங்களுக்குத் தண்ணீரும் பிஸ்கட்டும் வைத்தான். அவை அவனைப் பார்த்து கா.. கா... என்று கத்தியபடி இருந்தனவே தவிர தண்ணீரைக் குடிக்கவோ, பிஸ்கட்டை கொத்தவோ இல்லை... காக்கா தாத்தாவைத் தேடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். இந்த ஐந்தறிவு ஜீவன்களைக்கூட தாத்தா எப்படி அன்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் என்று வியப்புடன் அவற்றைப் பார்த்தான். இரண்டு நாளுக்குப் பிறகும் தாத்தா வரவில்லை. சாப்பிடக்கூட பிடிக்காமல் தாத்தா அறையில் இருந்த அந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். காகங்கள் தினமும் ஜன்னலருகே வந்து தாத்தாவின் குரலைக் கேட்காமல் எட்டிப் பார்த்துவிட்டு பறந்தன. நான்கு நாள்களுக்குப் பிறகு...)
ராஜா: அம்மா.. தாத்தா எப்பத்தாம்மா வருவாரு...?
விமலா: சீக்கிரம் வந்துடுவாருப்பா... உடம்பு சரியானதும் வீட்டுக்கு அனுப்புவாங்க...
ராஜா: அவர் இல்லாம போர் அடிக்குதும்மா... இங்க பாரு காக்கா கூட நாளு நாளா தண்ணி குடிக்க மாட்டேங்கிது...
ரவி: ராஜா கண்ணு... தாத்தா அன்னிக்கே உங்கிட்ட கொடுக்கச் சொல்லி இதைக் கொடுத்தார். நான்தான் மறந்துட்டேன். இந்தா (என்று அவன் கையில் எதையோ கொடுத்தார்)
ராஜா: என்னப்பா இது...?
(என்று ஆவலுடன் கையில் இருந்த சிறு பொட்டலத்தைப் பிரித்தான். அதில் சில விதைகள் இருந்தன. ராஜாவுக்குப் புரிந்துவிட்டது. வேகமாக தோட்டத்துக்கு ஓடினான். அங்கிருந்த கலைகொற்றை எடுத்தான். ஓரிடத்தில் சிறு சிறு குழிகளாக வெட்டினான். அதில் அந்த விதைகளைப் போட்டு மூடினான். தாத்தா செய்வதைப் போலவே அதன் மீது தண்ணீரைத் தெளித்தான். இப்போது அவனுக்குப் புதுத்தெம்பு வந்தது. நிச்சயம் தாத்தா வீட்டுக்கு வருவார் என்று உறுதியான நம்பிக்கையோடு வாசலை நோக்கி ஓடினான் தாத்தாவை வரவேற்க...)
-திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

