இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கபடி... கபடி..!

புதுக்கோட்டையிலிருந்து தமிழகத்துக்கு ஒரு கபடி நட்சத்திரம் கிடைத்திருக்கிறார். அவரது பெயர் பாப்பாத்தி. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் பாப்பாத்தி கபடி விளையாட்டில் வேகமாக முன்னேற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:50 am

வா.சங்கர்

புதுக்கோட்டையிலிருந்து தமிழகத்துக்கு ஒரு கபடி நட்சத்திரம் கிடைத்திருக்கிறார். அவரது பெயர் பாப்பாத்தி. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் பாப்பாத்தி கபடி விளையாட்டில் வேகமாக முன்னேறி வருகிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பயிற்சியிலிருந்த அவரைச் சந்தித்தோம். அவருடன் ஒரு மினி பேட்டி:

எப்போது கபடி விளையாடத் துவங்கினீர்கள்? எதனால் ஆர்வம் வந்தது?

எனது சொந்த ஊரான புதுக்கோட்டையிலுள்ள சேதுராபட்டி கிராமத்தில் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்கள் கபடி விளையாடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஆனால் விளையாடியதில்லை. சென்னைக்கு வந்தபிறகுதான் கபடி விளையாடக் கற்றுக்கொண்டேன். அப்போதுதான் அந்த விளையாட்டில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர், பயிற்சியாளரும், சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளருமான கோல்டு ராஜேந்திரன் போன்றோரிடம்  பயிற்சி  பெற்று, 2008-ம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறேன்.



உங்களின் பயிற்சி முறைகளைப் பற்றிக் கூறுங்கள்?

சென்னை ராணி மேரி கல்லூரியில் பயிற்சியாளர் கோல்டு ராஜேந்திரன், நடராஜ் ஆகியோர் மேற்பார்வையில் காலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் இடைவிடாத பயிற்சியைப் பெற்று வருகிறேன். இதனால் எதிராளியிடமிருந்து தப்பித்தல், எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்தல் போன்ற கபடி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு தேறி வருகிறேன்.

படிப்பு...?

தற்போது ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு (உடற்கல்வி) படித்து வருகிறேன். இதில் பட்டமேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது.

தற்போது எந்தெந்த அணிகளுக்காக  விளையாடி வருகின்றீர்கள்?

நான் படித்து வரும் ராணி மேரி கல்லூரி, சென்னை மாவட்டம், தமிழக ஜூனியர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறேன்.



பெற்ற வெற்றிகள் குறித்து...?

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதில் சிறந்த கபடி வீராங்கனை விருது எனக்குக் கிடைத்தது. சென்னை மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது. யானங்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபடி  போட்டியில்   நான் பங்கேற்ற தமிழக அணி 2-ம் இடம் பெற்றது.

சென்னிமலையில் நடைபெற்ற போட்டியில் ராணி மேரி கல்லூரி அணி 2-ம் இடம் பிடித்தது. மாநில அளவிலான பல  போட்டிகளில் எங்கள் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

கபடியில் உங்கள் நிலை (பொசிஷன்) என்ன?

கபடியில் கேச்சர், டிஃபண்டர் எனப் பல வகை உண்டு. எனக்குப் பிடித்த நிலை கேச்சர்தான். பாட்டுப் பாடியபடி வரும் எதிரணி வீராங்கனையை வளைத்துப் பிடிக்கும் பணிதான் கேச்சருடையது. அதை சிறப்பாகச் செய்து வருகிறேன்.

உங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார் யார்?

எனது வெற்றிக்குக் கல்லூரியின் முதல்வர் அம்புஜம், உடற்கல்வித்துறை ஆசிரியை உமா, பயிற்சியாளர் கோல்டு ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்களின்  ஊக்கம்தான் எனக்கு மென்மேலும் வெற்றிகளைப் பெற்று தந்து வருகிறது.

போட்டிகளுக்காக வெளியூர் செல்லும்போது தேவையான உதவிகள், தங்குமிட வசதிகள், உணவு ஏற்பாடுகளைப் பயிற்சியாளர் கோல்டு ராஜேந்திரன் செய்து தருகிறார்.

இதனால் எனது வெற்றியில் அவருக்குக் கணிசமான பங்குண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் போன்ற ஏராளமான கபடி வீரர், வீராங்கனைகளை அவர் உருவாக்கியுள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற கபடி வீரர், வீராங்கனைகள் தற்போது போர்ட் டிரஸ்ட், காவல்துறை, ரயில்வே எனப் பல அரசு துறைகளில்  பணியாற்றி வருகிறார்கள்.

பெற்ற முக்கியமான வெற்றியைச் சொல்ல முடியுமா?

மணப்பாறையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ராணி மேரி கல்லூரி அணி மிகுந்த சவால்களுக்கு இடையே 2-ம் இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைத் தவற விட்டாலும் சிறப்பாக விளையாடி 2-ம் இடத்தைப் பெற்றோம். இந்த வெற்றியை எங்களால் மறக்க இயலாது.

எதிர்காலத் திட்டம் குறித்து...?

பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்படுவதுடன் தேசிய அணியிலும் இடம்பெறவேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டம். அதற்காக கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். கபடியின் தாயகமான தமிழகத்திலிருந்து உலக அரங்கில் நிச்சயம் சாதனை படைப்பேன் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.