ஒலிம்பிக்கில் சாதிக்க ஆசை!
எறிபந்து விளையாட்டுகளில் புதிய சரித்திரமாக உருவாகி வருகிறார் தமிழக அணியின் கேப்டன் அம்ரித்தா ராஜ். சமீபத்தில் நடைபெற்ற 21-வது தேசிய ஜூனியர் எறிபந்து (த்ரோபால்) போட்டியில் பலம்வாய்ந்த டெல்லி அணியை வீழ்


எ றிபந்து விளையாட்டுகளில் புதிய சரித்திரமாக உருவாகி வருகிறார் தமிழக அணியின் கேப்டன் அம்ரித்தா ராஜ். சமீபத்தில் நடைபெற்ற 21-வது தேசிய ஜூனியர் எறிபந்து (த்ரோபால்) போட்டியில் பலம்வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அம்ரித்தா ராஜின் அபாரமான ஆட்டம்தான் என்றால் அது மிகையல்ல.
30-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டி
களில் பங்கேற்று சர்வதேச வீராங்கனையாக உருவெடுத்து வருகிறார் அம்ரித்தா.
எந்த வயதில் எறிபந்து விளையாடத் துவங்
கினீர்கள்?
6-வது படிக்கும்போது விளையாடத் துவங்கினேன். பெற்றோர் அந்தோனிராஜ்-ஜெயராணி ஆகியோரின் ஊக்கம் காரணமாக தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டேன். தற்போது 5-வது ஆண்டாக விளையாடி வருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி தற்போது தமிழக அணியின் கேப்டனாக உயர்வு பெற்றுள்ளேன்.
சமீபத்தில் பாட்னாவில் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் எனது தலைமையிலான தமிழக அணி பட்டம் வென்றதை மறக்க முடியாது.
போட்டியின்போது பலம் வாய்ந்த பிகார், டெல்லி அணிகளை வீழ்த்தி பட்டம் வென்றோம். அணி வீராங்கனைகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறேன்.
பங்கேற்ற முதல் தேசியப் போட்டி ஏது?
மத்திய பிரதேச மாநிலம் போபாலில்
2006-ம்ஆண்டு நடந்த தேசிய ஜூனியர் எறிபந்து போட்டிதான் என்னுடைய முதல் தேசிய போட்டி. அதை எப்போதும் என்னால் மறக்க முடியாது.
ஒரு எறிபந்து வீராங்கனைக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
மற்ற விளையாட்டுகளைப் போலவே எண்ணங்களை ஒருமுகப்படுத்துதல், மனவலிமை, நேரம் தவறாமை, சமயோசிதப்புத்தி, ஆர்வம், உடல் பலம், நவீன யுக்திகள்.. இவை அனைத்துமே எறிபந்து வீராங்கனைக்குத் தேவையான அடிப்படைத் திறன்கள். இவற்றை வளர்த்துக் கொண்டால் எறிபந்தில் தேசிய நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க
தமிழக அணி எவ்விதம் தேர்வு செய்யப்படுகிறது?
தமிழக எறிபந்து கழகம் பத்திரிகைகளில் தமிழக அணிக்கான தேர்வு குறித்து அறிவிப்பு செய்யும். தமிழகத்திலுள்ள அனைத்து எறிபந்து வீரர்கள், வீராங்கனைகள் வயதிற்கேற்ப இந்தத் தேர்வில் கலந்துகொள்வர். அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறும் பன்னிரெண்டு வீரர், வீராங்கனைகள் தமிழக அணிக்காகத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாமும் நடைபெறும்.
தமிழக அணிக்காக கலந்துகொண்ட தேசிய
போட்டிகள்...?
இதுவரை தமிழக அணிக்காக 12 முறை விளையாடியிருக்கிறேன். பாட்னாவில் நடந்த போட்டியில் பங்கேற்றது 13-வது முறையாகும்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது குறித்து...?
சென்னையில் நடைபெற்ற இந்தோ-ஸ்ரீலங்கன் டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்கிறேன். 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா வெற்றி கண்டது. எதிர்காலத்தில் பல்வேறு வெளிநாட்டு அணிகளுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் எறிபந்து கழகத்தின் தலைவர் சைலேந்திரபாபுவும், பொதுச் செயலாளர் பாலவிநாயகமும் ஈடுபட்டுள்ளனர்.
எறிபந்து தவிர மற்ற துறைகளில் உங்களுக்குள்ள ஈடுபாடு...?
இசை, நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உள்ளது. ஹேண்ட்பாலில் சிறந்த கோல்கீப்பருக்கான விருதையும் பெற்றுள்ளேன். எறிபந்து விளையாட்டுகளில் நான் இந்த உயரத்துக்கு வருவதற்கு சங்க நிர்வாகிகள் சைலேந்திரபாபு, பாலவிநாயகம் மற்றும் எனது பெற்றோர்தான் காரணம்.
எனது சகோதரி அஷித்தா ராஜ்கூட எறிபந்து விளையாட்டு வீராங்கனைதான். நான் ஒவ்வொரு முறை போட்டியில் பங்கேற்கும்போதும் நான் கல்வி பயிலும் திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் அளிப்பர். அதை எப்போதும் மறக்க முடியாது.
எதிர்காலத் திட்டம்....?
எறிபந்து விளையாட்டில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுவிட்டோம். விரைவில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதுதான் எனது எதிர்காலத் திட்டம். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடவேண்டும. விளையாட்டைப் போலவே கல்வியிலும் பரிமளிக்கவேண்டும். படிப்பில் எனது பள்ளி அளவில் நான்தான் முதலிடம் பிடித்து வருகிறேன். எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்பதும் எனது கனவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...