இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெற்றி தொடரும்!

அசாத்திய உயரம். அபாரமான ஆட்டத்திறன். எவரையும் பிரமிக்கவைக்கும் விளையாட்டு நுணுக்கங்களுடன் அனைவரையும் கவர்கிறார் தேசிய வாலிபால் வீராங்கனை தேவிகா. சென்னை, எத்திராஜ் கல்லூரியில் படித்துவரும் இவர், இவ்விள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:25 pm

வா.சங்கர்

அசாத்திய உயரம். அபாரமான ஆட்டத்திறன். எவரையும் பிரமிக்கவைக்கும் விளையாட்டு நுணுக்கங்களுடன் அனைவரையும் கவர்கிறார் தேசிய வாலிபால் வீராங்கனை தேவிகா. சென்னை, எத்திராஜ் கல்லூரியில் படித்துவரும் இவர், இவ்விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வருகிறார். சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவருடன் பேசியதிலிருந்து...

வாலிபால் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே வாலிபால் மீது ஆர்வம். என் வயதை விட பெரிய வீராங்கனைகள் விளையாடுவதை ஆர்வமாகப் பார்ப்பேன். பின்பு ஒருநாள் பள்ளி பி.டி. மாஸ்டரிடம் வாலிபால் விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டு வாலிபால் அணியில் சேர்த்துக்கொண்டார்.

கேரளத்தில் பள்ளியில் படித்தபோதுதான் என்னுள் முழுமையாக வாலிபால் ஆர்வம் துளிர்விட்டது. முறையாகப் பயின்று இப்போது தேசியப் போட்டிகள் வரை முன்னேறிவிட்டேன்.

மாவட்ட, மாநில, தேசிய, மண்டலங்களுக்கு இடையிலானப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளேன். நான் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவள். அப்போது கேரள அணிக்காக விளையாடியிருக்கிறேன். இப்போது எத்திராஜ் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழக அணிக்காக 2 முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

யாரிடம் பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கேரளத்தில் படித்தபோது செüகத் அலி மாஸ்டர் எனக்குப் பயிற்சியளித்தார். இப்போது கேசவன் மாஸ்டரிடம் பயின்று வருகிறேன்.

உங்களுக்கு இந்த விளையாட்டில் ஊக்கமளிப்பவர்கள் யார்?

எனது தந்தை தேவராஜன், தாய் லத்திகா. இருவரும் எனக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வால்டர் தேவாரம், பயிற்சியாளர் கேசவன், சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகி சித்திரைப்பாண்டியன், கல்லூரி முதல்வர் ஜோதி, உடற்கல்வி இயக்குநர் செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வருகின்றனர். தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். நான் ஒவ்வொரு போட்டிக்கு விளையாடச் செல்லும்போதெல்லாம் எனக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

தற்போது எந்தெந்த அணிகளுக்காக விளையாடி வருகிறீர்கள்?

எத்திராஜ் கல்லூரி அணி, சென்னை அணி, தமிழக அணி, சிவந்தி அணிகளுக்காக விளையாடி வருகிறேன்.

இதுவரை விளையாடியிருக்கும் தேசியப் போட்டிகள் எத்தனை?

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியர் வாலிபால் போட்டி, புவனேஸ்வரத்தில் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜூனியர் தேசிய போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்றேன்.

கேரள மாநிலத்துக்காக ஜூனியர் பிரிவில் மினி தேசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய சப்-ஜூனியர், மகளிர் தேசிய வாலிபால் போட்டி, தேசிய மினி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இதில் 2 போட்டிகளில் வெள்ளியும், 3 போட்டிகளில் வெண்கலமும் பரிசாகக் கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் ஏராளமான மாநில அளவிலான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள், கிளப் போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்று அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன்.

படிப்பிற்கு இடையே பயிற்சிக்கு நேரம் கிடைக்கிறதா?

காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடுமையான பயிற்சி உண்டு. 2009-ஆம் ஆண்டில் இந்திய ஜூனியர் அணி பயிற்சி முகாமில் பங்கேற்றேன். மேலும் பல தேசிய அளவிலான பயிற்சி முகாம்களில் பங்கேற்க ஆசை. வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வேன். தேசிய முகாம்களில் பங்கேற்கும்போது சர்வதேச பயிற்சியாளர்களின் டிப்ஸýம், சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

வாலிபால் போட்டியில் உங்களது நிலை (பொசிஷன்) என்ன?

நான் "செட்'டராக களமிறங்கி விளையாடுவேன். இது எனக்கு பிடித்தமான பொசிஷனும் கூட. செட்டராக விளையாடுவதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி எப்போதும் உண்டு.

வாலிபாலில் வெற்றி பெறவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது எப்படி?

என் தந்தை தேவராஜன். கட்டடத் தொழிலாளி. தாயார் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வார். வறுமையான குடும்பப் பின்னணி எங்களுக்கு. இருந்தபோதும் வாலிபால் மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை. வீட்டுக்கு அருகில் இருந்தவர்களும், உறவினர்களும் "உனக்கெதற்கு வாலிபால்? பேசாமல் படித்துவிட்டு வீட்டு வேலையைச் செய்' என்றார்கள். என்னை உதாசீனம் செய்தார்கள்.

இதனாலேயே வாலிபாலில் வெற்றி பெற்று தேசிய வீராங்கனையாக உருவாகவேண்டும் என்ற வெறி எனக்குள் எழுந்தது.

7 வருடங்களாக கடுமையான பயிற்சி. விடா முயற்சி. இதன்மூலம் தொடர்ச்சியான வெற்றிகள் கிடைத்தன. இன்னும் வெற்றி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. பலரின் உதாசீனங்கள், சிலரின் சீண்டல்கள்தான் எனக்கு வெற்றிப் படிக்கட்டுகளாக அமைந்தன.

மறக்க முடியாத சம்பவங்கள்...

ஜூனியர் வீராங்கனையாக இருந்தபோதே பல சீனியர் வீராங்கனைகளுக்கு ஈடுகொடுத்து பயிற்சியில் ஈடுபடுவேன். இதனால் அவர்களாகவே எனக்கு ஆட்டநுணுக்கங்களைக் கற்றுத் தந்தனர். போட்டிகளில் எங்களது அணி வெற்றிபெறும்போது அவர்களது பாராட்டு எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

தேசிய சீனியர் வாலிபால் அணிகளில் தமிழக அணி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருமுறை பஞ்சாப் அணிக்கெதிராக தேசியப் போட்டியில் விளையாடினோம். அது ஒரு முக்கியமான ஆட்டம். பஞ்சாப் அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால் போட்டியில் பஞ்சாப் அணியினர் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தனர். அப்போது எங்கள் அணி வீராங்கனைகள் ஒன்றுகூடிப் பேசினோம். ஆக்ரோஷமாக விளையாடத் துவங்கினோம். எங்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அதிக புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினோம். இந்தப் போட்டியை எங்களால் மறக்கவே முடியாது.

"கூடி வாழ்ந்தால்; கோடி நன்மை' என்றொரு பழமொழி உண்டு. "கூடி அடித்தால் கோடிப் பரிசு' என்னும் வாலிபால் மொழியையும் அன்றைக்கு நாங்கள் நேரடியாக உணர்ந்தோம்.

இதேபோல தேசிய சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்று வெள்ளியை வென்றோம். மிகவும் போராடி பெற்ற வெற்றியாகும் இது. இந்தப் போட்டியையும் மறக்கமுடியாது.

உங்களுக்குப் பிடித்த வீராங்கனை?

ரயில்வே அணிக்காக விளையாடும் வைஷாலியின் ஆட்டம் அபாரமாக இருக்கும். அவரது ஆட்டத்தைப் பின்பற்றி நான் விளையாடுவேன்.

எதிர்காலத் திட்டம்?

இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள். அந்த லட்சியக் கோட்டையை நிச்சயம் எட்டிப் பிடிப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.