வெற்றிக்கான படி - கபடி!
சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் கபடிப் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை ராஜலட்சுமி. சென்னையில் நடந்த


சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் கபடிப் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை ராஜலட்சுமி. சென்னையில் நடந்த 4-வது மாநில பீச் கபடி போட்டியில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டம். விழுப்புரத்தில் நடைபெற்ற 57-வது மாநில கபடிப் போட்டியில் சென்னை துறைமுக அணிக்கு 2-வது இடம். ஸ்டார் கபடி கிளப் நடத்திய போட்டியில் சென்னை துறைமுக அணிக்கு 2-வது இடம். பவானியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் எனப் பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியின் விளையாட்டுத் திடலில் அடுத்து வரும் போட்டிகளுக்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். பயிற்சி முடித்து வந்தவரைச் சந்தித்தோம். இனி அவரின் "மூச்சு விடாத' பேச்சு...
* எந்த வயது முதல் கபடி விளையாடி வருகிறீர்கள்? இதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
17வயது முதல் கபடி விளையாடி வருகிறேன். பள்ளியில் படிக்கும் போது தடகளப் போட்டிகளில்தான் ஆர்வம். ஆனால் சென்னையில் 12-ம் வகுப்பு படித்தபோது பள்ளியில் கபடிப் போட்டியில் சேருமாறு பயிற்சியாளர் சொன்னார்.
இதையடுத்தே கபடிப் போட்டியில் பங்கேற்றேன். அதன்பிறகு இவ்விளையாட்டு மிகவும் பிடித்துப் போனது. அன்றுமுதல் கபடி என் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. இப்படித்தான் இதன் மீது ஆர்வம் வந்தது.
* இப்போது விளையாடி வரும் அணிகள்...?
சென்னை கபடி ஸ்டார், சென்னை துறைமுகம், தமிழகம் மற்றும் தமிழக பீச் கபடி அணிகளுக்காக விளையாடி வருகிறேன்.
* உங்களுடைய பயிற்சி நேரம்....?
இப்போது சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளராக உள்ள கோல்டு எம். ராஜேந்திரன் என்பவரிடம் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் பயிற்சி பெற்று வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் தமிழக கபடி சங்க செயலர் சமியுல்லா.
* பெற்ற வெற்றிகள்...?
தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியில் கபடி ஸ்டார் அணிக்காக விளையாடி 3-வது இடம் பெற்றோம். இப்போட்டியில் சிறந்த வீராங்கனை விருது எனக்குக் கிடைத்தது. பவானியில் நடைபெற்ற மாநில கபடிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினேன். பெங்களூரில் நடைபெற்ற தேசிய சீனியர் கபடிப்போட்டியில் கால் இறுதி வரை முன்னேறினோம்.
விழுப்புரத்தில் நடந்த 57-வது மாநில கபடியில் சென்னை துறைமுக அணிக்காக விளையாடி 2-ம் இடமும், 4-வது மாநில பீச் கபடிப் போட்டியில் சென்னை துறைமுக அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றோம். சமீபத்தில் நடந்த தேசிய பீச் கபடிப் போட்டியில் 2-வது இடத்தை தமிழக அணி பிடித்தது. தேசிய பீச் கபடியில் முதல்முறையாக தமிழக அணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
* தேசிய பீச் கபடிப் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து...?
மற்ற கபடிப் போட்டிகளைப் போல அல்லாமல் பீச் கபடிப் போட்டி சற்று வித்தியாசமானது. கபடிப் போட்டியிலிருந்து பீச் கபடிப் போட்டி விதிகள் வேறானவை. இப்போட்டியில், கால் இறுதியில் தென் மத்திய ரயில்வே அணியையும், அரை இறுதியில் இமாச்சலப் பிரதேச அணியையும் வென்றோம். இறுதி ஆட்டத்தில் ஹரியானாவிடம் நூலிழையில் தோல்வியுற்றோம். ஆனால் அடுத்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம்.
* பிடித்த வேறு விளையாட்டுகள்....?
கபடியைத் தவிர, தடகள விளையாட்டுகளில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
* இவ்விளையாட்டில் உங்களுடைய முன்மாதிரி வீராங்கனை...?
தமிழக அணிக்காக விளையாடி வரும் பிரியாவின் ஆட்டம் மிகவும் பிடிக்கும். அவரையே என் முன்மாதிரியாகக் கொண்டுள்ளேன்.
* கபடியில் உங்களது நிலை (பொசிஷன்) என்ன...?
கபடியில் ரைடர், கேட்ச்சர், ஆல்-ரவுண்டர் எனப் பல நிலைகள் உண்டு. நான் ரைடர். ஆனால் ரைடர், கேட்ச்சர், ஆல்-ரவுண்டர் என அனைத்திலும் திறமையாக இருந்தால் மட்டுமே கபடியில் நிலைக்க முடியும். அது மட்டுமல்லாமல் எந்த எதிரணியையும் ஜெயிக்கவேண்டும் என்ற போராடும் குணமும் இருக்கவேண்டும்.
* உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?
எதிர்காலத் திட்டம் என்றால், இந்திய அணிக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும். அதற்காக எனது ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்துவைக்கிறேன். அவை வெற்றிக்கான படிக்கட்டுகளாக இருக்கும்.
படங்கள்:பா. ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...