மனம் சொல்வதை உடல் கேட்கும்!
வில்லாய் வளையும் உடல். துறுதுறுவென சாதிக்கத் துடிக்கும் கண்கள். அசாத்திய துணிச்சல். எதையும் முடிக்கும் நம்பிக்கை. இவற்றின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறார் நிஹாரிகா. உருகுவே நாட்டின் அழகான கடற்கரை நகர


வில்லாய் வளையும் உடல். துறுதுறுவென சாதிக்கத் துடிக்கும் கண்கள். அசாத்திய துணிச்சல். எதையும் முடிக்கும் நம்பிக்கை. இவற்றின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறார் நிஹாரிகா.
உருகுவே நாட்டின் அழகான கடற்கரை நகரம் மான்டிவிடியோ. யோகாசன கலைக்கும், யோகாசனப் போட்டிகளுக்கும் புகழ்பெற்ற விளையாட்டரங்கத்தில் உலக யோகா போட்டி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த அரங்கத்தில் தலைகீழாக நின்று கால்களை சம்மணம் போட்டு ஆசனம், கைகளை ஊன்றிய நிலையில் காலை மேல்தூக்கி நிறுத்தும் ஆசனம் போன்ற கடுமையான யோகாசனங்களை செய்து காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்து பதக்கங்களை அள்ளுகிறார் சென்னையைச் சேர்ந்த 16 வயதான யோகா வீராங்கனை நிஹாரிகா.
தடகளம், ஸ்குவாஷ், நீச்சல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்தவர் இப்போது தனது பதக்க வேட்டையை யோகா போட்டிகளிலும் துவங்கியுள்ளார்.
""விளையாட்டுத் துறையில் நான் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனக்கு நிஹாரிகா (நட்சத்திரக் கூட்டம்) என்ற பெயரை வைத்தாராம் என் தந்தை. மூன்று வருடங்களுக்கு முன்தான் யோகாவைப் பழகத் துவங்கினேன். முதலில் நான் நீச்சல், ஸ்குவாஷ் விளையாட்டுகள் மீது ஆர்வம் காட்டினேன். அக்கா ராஷிகாவும் நீச்சலில் தேசிய சாம்பியனாக இருந்தார். மேலும் தந்தையும் விளையாட்டு வீரர் என்பதால் எனக்குள் விளையாட்டு எளிதாக வந்துவிட்டது. நீச்சல் கற்றுக்கொண்டேன். ஸ்குவாஷும் விளையாடி வந்தேன். பின்னர் ஜிம்னாஸ்டிக்ஸ் மீது ஆர்வம் கொண்டு அதைப் பயிலத் துவங்கினேன். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் வாங்கினேன்.
இந்த நிலையில்தான் நீச்சல் பயிற்சி செய்ய போதுமான உடல்வலு இல்லாமல் இருந்தது. இதற்காக நான் யோசனை கேட்டபோது என்னை யோகா பக்கம் திருப்பியவர் தந்தைதான். இப்படித்தான் எனக்குள் வந்தது யோகா'' என்று தன் யோகா மூலத்தை அழகாய் சொல்லத்தொடங்கும் நிஹாரிகா, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? நிஹாரிகாவின் தந்தை பிரேம்குமார் முன்னாள் தேசிய குதிரையேற்ற வீரர். அக்கா ராஷிகா நீச்சலில் தேசிய வீராங்கனை. முன்னாள் தேசிய சாம்பியனும்கூட!
சர்வதேச யோகா போட்டிகளில் 6 பதக்கங்கள், தேசிய அளவில் 20 பதக்கங்கள், மாநில அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்கள் என தொடர்ந்து கொண்டிருக்கும் பதக்க பட்டியல்களுக்குக் காரணம் தன்னுடைய முறையான பயிற்சியே என்கிறார்.
""சென்னையில் மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் யோகா கற்று வருகிறேன். இவர் யோகாசன புகழ் ஆசனா ஆண்டியப்பனின் சிஷ்யர். தினமும் 3 மணி நேரம் யோகா பயிற்சியைத் தவறாமல் செய்வேன்.
யார் வேண்டுமானாலும் யோகாசனத்தை எளிதில் பயில முடியும். மனதை
ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டும். அப்போதுதான் நம் மனம் சொல்வதை உடல் கேட்கும்.
நூறுக்கும் மேற்பட்ட யோகாசன முறைகள் உள்ளன. இதில் நான் 50-க்கும் மேற்பட்ட யோகாசனங்களைச் செய்வேன். பேக்பெண்டிங், பேலன்ஸிங், ஃபார்வர்ட், டிவிஸ்ட், ஹேண்ட் பேலன்ஸ் போன்ற யோகாசனங்களைத் தினமும் பழகுவேன். அதுமட்டுமல்லாமல் திரிவிக்ரம் ஆசனம் (கொடி), விருஷ்சிகாசனா (தேள்), குரோ அண்ட் கிரேன், மயூராசனா (மயில்), நடராஜாசனா போன்ற மிகக் கடுமையான ஆசனங்களையும் பழகி வருகிறேன்...'' என்றபடி சில கடினமான யோகாசனங்களைச் செய்துகாட்டி பிரமிக்கவைக்கிறார்.
யோகாசனப் போட்டிகள் பொதுவாக ஐந்து விதமான முறைகளில்தான் உலகம் முழுவதும் நடக்கிறதாம் என்ற நிஹாரிகா அந்த முறைகளை விளக்கவும் செய்தார்.
""5 விதமான முறைகளில் யோகாசனப் போட்டிகள் உள்ளன. முதலாவது ஆர்டிஸ்டிக் யோகா. இது தனியாக செய்யக்கூடியது. இரண்டாவது, ஜோடியாக செய்யக்கூடியது. 3-வது வகை தனியாகச் செய்யக்கூடியது. 4-வது ரிதமிக் - ஜோடியாக செய்யக்கூடியது. இதில் 10 போஸ்கள் வரை செய்யலாம்.
ஜோடியாக செய்தாலும் ஒருவர் மீது ஒருவர் படாமல் செய்யவேண்டும். பின்னணியில் ஒலிக்கும் இசைக்கேற்ப இதைச் செய்வது முக்கியம். ஐந்தாவதாக அக்ரோ யோகா. இதையும் ஜோடியாகச் செய்யவேண்டும். இதில் ஜோடி சேரும் நபருடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கலாம். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று யோகாசனங்கûளைச் செய்யலாம்...'' என்று விளக்கிய நிஹாரிகாவுக்கு யோகாசனம் தவிர பாலே நடனமும் பிடிக்குமாம். ஐந்து வருடம் பாலே நடனத்தைக் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாராம்!
""ஏராளமான மாநில போட்டிகள், தேசியப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 2011-ல் தாய்லாந்தில் நடைபெற்ற உலக யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். இதே ஆண்டில் உருகுவே நாட்டின் மான்டிவிடியோ நகரில் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றேன். இந்தப் போட்டியை என்னால் மறக்கவே முடியாது.
நான் பதக்கம் வென்றதும் அரங்கில் கூடியிருந்த அனைவரும் கைதட்டியதை என்னால் மறக்கவேமுடியாது. என் தந்தை பிரேம்குமார், தாய் சுனிதா இருவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்த நாள் என்னுடைய வாழ்நாளில் பொன்னாள் ஆகிவிட்டது.
இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் யோகாசனம் இடம்பெறவில்லை. அடுத்த முறை இடம்பெற்றால் நான் நிச்சயமாகப் பங்கேற்பேன். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிக்காகத் தயாராகி வருவேன். அதில் நிச்சயம் பதக்கம் வெல்வேன். யோகாசனக் கலையை மற்றவர்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும். யோகாசன ஆசிரியையாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை'' என்கிறார் சிரித்தபடி நிஹாரிகா.
படங்கள்: க. ஸ்ரீ. பாரத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...