வாள் முனையில் வெற்றி !
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் "விஷ்..விஷ்' என வாள்வீச்சு சத்தம் பழங்கால எம்ஜிஆர், நம்பியார் படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. அற்புதமாக வாள் சுழற்றுவது யார் என்று பார்த்தபோது மாநில அளவில் பலமுறை


சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் "விஷ்..விஷ்' என வாள்வீச்சு சத்தம் பழங்கால எம்ஜிஆர், நம்பியார் படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. அற்புதமாக வாள் சுழற்றுவது யார் என்று பார்த்தபோது மாநில அளவில் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள தனுஷ் நம்பியார் என்று தெரிந்துகொண்டோம்.
வாள்வீச்சுப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். 2 முறை தேசியப் போட்டிகளிலும் பங்கேற்ற பெருமைக்குரியவர்.
வாள்வீச்சு மட்டுமல்லாமல் சிலம்பப் போட்டியிலும் பல பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். வாள்வீச்சும், சிலம்பமும்தான் இவரது முழுமூச்சாக உள்ளது. பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நம்பியாரின் மகன்தான் அஸ்வின் நம்பியார். கேரளத்தைச் சேர்ந்த பாரம்பரியமிக்க பழஸிராஜா பரம்பரையைச் சேர்ந்தவர் தனுஷ்.
வரவிருக்கும் தேசியப் போட்டிக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த தனுஷ் நம்பியாருடன் பேசினோம்...
எந்த வயதில் வாள்வீச்சுப் பயிற்சியைத் துவங்கினீர்கள்? ஆர்வம் வந்தது எப்படி?
நான் 8 வயதாக இருக்கும்போதே வாள்வீச்சுப் பயிற்சியைத் துவங்கிவிட்டேன். பள்ளியில் வாள்வீச்சுப் பயிற்சி அளித்து வந்தனர். அதைப் பார்த்ததும் சிறிதளவு ஆர்வம் வந்தது. மேலும் எனது தந்தை தனுஷ் நடிகர் என்பதால், அவரின் ஆலோசனையினாலும் வாள்வீச்சுப் பயிற்சியைத் துவங்கினேன்.
இதுவரை பங்கேற்ற போட்டிகள்....
2 தேசியப் போட்டிகள், 10-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான போட்டிகள், ஏராளமானமாவட்ட வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
பெற்ற வெற்றிகள்...
வாள்வீச்சுப் போட்டிகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்துள்ளேன். இதில் 4 தங்கப் பதக்கங்களும் அடக்கம். சண்டீகர் மற்றும் நாசிக்கில் நடந்த தேசிய வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்றதை மறக்க முடியாது. தேசியப் போட்டிகளில் பதக்கத்தை இதுவரை வெல்லவில்லையென்றாலும் வரவிருக்கும் போட்டிகளில் பதக்கத்தைக் கைப்பற்றுவேன். மாவட்ட, மாநில வாள்வீச்சுப் போட்டிகளில் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறேன்.
ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்வீர்கள்?
காலையில் 2 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் பயிற்சி எடுத்து வருகிறேன். தற்போது பயிற்சியாளர் முனிநாதனிடம் வாள்வீச்சுப் பயிற்சி பெற்று வருகிறேன். பல்வேறு வாள்வீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.
வெற்றி பெறும்போது உங்களின் குடும்பத்திலிருந்து முதல் பாராட்டு யாரிடமிருந்து கிடைக்கும்?
தந்தை தனுஷ் நம்பியாரிடமிருந்து முதலில் பாராட்டு கிடைக்கும். பின்னர் தாய் ராஜேஸ்வரி, அக்கா ஐஸ்வர்யா, தங்கை அஸ்வதியிடமிருந்தும் ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். மேலும் தமிழக வாள்வீச்சு சங்கத்தின் நிர்வாகிகள் ஜான் நிக்கல்சன், நாகப்பன் ஆகியோரும் தொடர்புகொண்டு பாராட்டுவர்.
வாள்வீச்சில் உங்களைக் கவர்ந்தவர்கள்...
சர்வதேச வாள்வீச்சுப் போட்டிகளை டி.வி.யில் பார்த்து நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வேன். சர்வதேச வீரர்கள் அனைவருமே எனக்கு முன்மாதிரிதான்.
வாள்வீச்சு எப்படியோ அதேபோலத்தான் எனக்கு சிலம்பமும். சிலம்பத்தையும் கடந்த 5 வருடங்களாகக் கற்று வருகிறேன். மாஸ்டர் "டைகர்' ஜாஃபரிடம் சிலம்பம் கற்று வருகிறேன். தமிழகத்தில் நடந்த பல்வேறு மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்துகொண்டு 15 பதக்கங்களை வென்றுள்ளேன். "கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்' என்பது போல பங்கேற்ற அனைத்து சிலம்பப் போட்டிகளிலும் பதக்கங்களை வாங்கி வந்துள்ளேன்.
வாள்வீச்சு, சிலம்பம் தவிர உங்களுக்கு வேறு
என்னென்ன விளையாட்டுகள் பிடிக்கும்?
பாட்மிண்டன் அதிகம் பிடிக்கும். கூடவே கிரிக்கெட்டும். இதுதவிர கீபோர்டு வாசிப்பேன். கீபோர்டைப் போலவே தபேலா வாசிப்பதும் பிடிக்கும். தபேலாவை முறையாகப் பயின்று வருகிறேன். தபேலா கலைஞர் தபேலா மணியிடம் பயின்று வருகிறேன். தபேலாவில் இந்துஸ்தானி முறையில் பயின்று வருகிறேன். தமிழ்ப் பாடல்களுக்கும் தபேலா வாசிப்பது பிடிக்கும்.
குறிப்பாக "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை', "பெண்ணொன்று கண்டேன்', "ஒரு நாள் இரவு...பகல் போல் கனவு' ஆகிய பாடல்களுக்கு வாசிப்பது மிகவும் பிடித்தமான விஷயம்.
எதிர்காலத் திட்டம்?
வாள்வீச்சில் தேசிய அளவில் பரிமளித்து
2016-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவேண்டும். இதற்காக அனைத்து விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். வாள்வீச்சில் இதுவரை எந்த இந்தியரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதில்லை. தாய்நாட்டுக்காக இதைச் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
படங்கள்: ஏ.எஸ். கணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...