வெற்றி பவானி!
இந்திய வாள்வீச்சு வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்பவர் சி.ஏ. பவானிதேவி. குறுகிய காலத்தில் பல சர்வதேச போட்டிகள், தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து வருபவர் இவர். சமீபத


இந்திய வாள்வீச்சு வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்பவர் சி.ஏ. பவானிதேவி. குறுகிய காலத்தில் பல சர்வதேச போட்டிகள், தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து வருபவர் இவர். சமீபத்தில் லண்டனிலுள்ள ஜெர்ஸி நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி இந்தியா திரும்பியுள்ளார்.
அவருடன் பேசியதிலிருந்து...
உங்கள் குடும்பம் பற்றி?
நான் சென்னையைச் சேர்ந்தவள். பள்ளிப் படிப்பு முடித்தது எல்லாம் சென்னையில்தான். தந்தை ஆனந்த சுந்தரராமன். புரோகிதம்தான் தொழில். தாயார் ரமணி. எனது வெற்றிக்கு தாய், தந்தை இருவரும்தான் காரணம். இந்த ஏழ்மை நிலையிலும் என்னை வெற்றி வீராங்கனையாக்கி அழகு பார்த்த பெருமை அவர்களுக்குத்தான்.
இதுவரை பெற்ற வெற்றிகள்...
2008-ம் ஆண்டு முதல் பல்வேறு மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். 2008-09-ல் தேசியப் போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினேன். அதே ஆண்டில் கொரியாவில் நடந்த ஆசிய ஜூனியர் கேடட் பிரிவு போட்டியில் பங்கேற்றேன். ஆனால் பதக்கம் பெற முடியவில்லை.
2009-10-ல் தேசிய கேடட் பிரிவில் 2 தங்கம், 2 வெள்ளியை வென்றேன். அதே ஆண்டில் 2-வது காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்று அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றேன். 2010-11-ல் தேசியப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெள்ளி தேடி வந்தது.
தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓபன் வாள்வீச்சுப் போட்டியில் 3-வது இடம் பெற்று வெண்கலம் வென்றேன். பிலிப்பின்ஸில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் கேடட் பிரிவு போட்டியில் அணிப் பிரிவில் 3-வது இடத்தைப் பெற்றேன்.
2011-12-ல் தேசியப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெண்கலம் வென்றேன். தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
சமீபத்தில் லண்டனில் பெற்ற வெற்றி குறித்து...
லண்டனின் ஜெர்ஸி நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான வீராங்கனைகளை வீழ்த்தினேன். முடிவில் ஒரு வெள்ளி உள்பட 2 பதக்கங்களைப் பெற்றேன். இந்த வெற்றியை மறக்கவே முடியாது. மேலும் ஃபாயில் பிரிவில் 4-வது இடமும் கிடைத்தது.
சென்னையைச் சேர்ந்த நீங்கள் கேரளத்தில் பயிற்சி பெறுவது ஏன்?
வாள்வீச்சுப் போட்டிக்கான "சாய் பயிற்சி மையம்' கேரளத்தில்தான் இருக்கிறது. எனவேதான் கேரளத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறேன். அங்குள்ள அரசு கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கேரளத்தைப் போன்ற கட்டமைப்பு வசதியை தமிழகத்தில் ஏற்படுத்தினால் என் போன்ற வாள்வீச்சு வீராங்கனைகளுக்கு வசதியாக இருக்கும். மேலும் பல வாள்வீச்சு வீராங்கனைகள் இந்தியாவில் உருவாவார்கள்.
அதுமட்டுமல்லாமல் தேசிய வாள்வீச்சு சங்கம் ஏற்பாடு செய்யும் வெளிநாட்டு பயிற்சி முகாம்களிலும் கலந்துகொண்டு வந்துள்ளேன். இதுபோன்ற முகாம்களில் பங்கேற்கும்போது வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் தொழில்முறை உத்தி, உபயோகமான டிப்ஸ்கள் கிடைக்கும். இதை நான் தவறவிடுவதில்லை. இதைப் போலவே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் (எஸ்டிஏடி) அவ்வப்போது எனக்கு உதவி செய்து வருகிறது. சமீபத்தில்கூட ரூ.30 ஆயிரம் பணஉதவி செய்தனர்.
ஆனாலும் நிரந்தர ஸ்பான்ஸர் இல்லாததால் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது சிரமமாகி விடுகிறது. இந்திய வாள்வீச்சு சங்கம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றால், அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நாம் தனியாக பங்கேற்கும் போட்டிகளுக்கு நாம்தான் செலவு செய்யவேண்டும். இதுபோன்ற நேரங்களில் எனக்குச் சிக்கலாகி விடுகிறது. இதனால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
உங்களது அடுத்த இலக்கு...
அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜப்பானில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிக்காக என்னைத் தயார் செய்து வருகிறேன். அந்தப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயம் லண்டன் ஒலிம்பிக்கிலும் வெற்றி பவனி வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...