இந்தியாவை சுற்றும் இளம் தம்பதி

ஒரு நாட்டின் வளத்திற்கு ஆதாரமாக விளங்குவது நீர்வளம். "நீரின்றி அமையாது உலகு' என்று நீரின் பெருமையைப் பேசுகிறார் திருவள்ளுவர். ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவை நமக்கு நீர் வளத்தைத் தருகின்றன. 
இந்தியாவை சுற்றும் இளம் தம்பதி
Updated on
2 min read

கரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைந்து கிடைப்பதற்குப் பதிலாக... இந்தியாவை காரில் சுற்றிப்பார்த்தால் என்ன? என்று ஹரி கிருஷ்ணன்- லட்சுமி கிருஷ்ணா தம்பதிக்குத் தோன்றவே, கரோனா பொதுமுடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டதும் காரில் இந்தியா சுற்றிவரக் கிளம்பினர்.

ஒரு நாடு... ஒரு கார்... ஒரு ஜோடி என்று கிளம்பிய தம்பதி இதுவரைக்கும் சுமார் 12 ஆயிரம் கி.மீ பயணித்துள்ளனர். ஹரிகிருஷ்ணன் தொடர்கிறார்:

"நாங்கள் கேரளத்தில் திருச்சூரைச் சேர்ந்தவர்கள். நான் சென்னையில் படித்தேன். கோவையில் லட்சுமி படித்தார். எனக்கு 31 வயதாகிறது. லட்சுமிக்கு 23. எங்களுக்கு வேலை பெங்களூருவில் கிடைத்தது.

2019-இல் . திருமண நிச்சயம் ஆனதும் போன் மூலம் பேச ஆரம்பித்தோம். பேச்சில் அதிகம் சுற்றுலா போவது குறித்துதான் பேசுவோம். திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காகத் தாய்லாந்து சென்று வந்தோம். அத்துடன் சுற்றுலா ஆர்வம் எங்களைத் தொற்றிக் கொண்டது. அவ்வப்போது இந்தியாவைச் சுற்றி வந்தோம். யூடியூபில் "டின்பின் கதைகள்' என்று சானலை நிர்வகிக்கிறோம். எங்கள் பயணங்களை நெட்டிசன்களுக்காக வெளியிட்டு வந்தோம்.

கரோனா பொதுமுடக்கம் எங்கள் பயணங்களுக்குத் தடை போட்டது. தளர்வு வந்ததும் "சுற்றுலா வேதாளம்' எங்களை மீண்டும் தொத்திக் கொண்டது. பார்த்து வந்த வேலையை உதறினோம். எங்களிடமிருந்த காரின் பின்புற இருக்கைகளை கொஞ்சம் மாற்றம் செய்து படுக்கை ஆக்கினோம். ஒரு கேஸ் அடுப்பு, 5 கிலோ கேஸ் சிலிண்டரையும் சில பாத்திரங்களையும் பவர் பேங்க் , மடிக்கணினி போன்ற அத்தியாவசிய பொருள்களுடன் சென்ற ஆண்டு அக்டோபர் 28-இல் கேரளவிலிருந்து கிளம்பினோம்.

கோவை சேலம் வழியாக கர்நாடகத்திலில் நுழைந்து கோவா. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று சுற்றி வந்தோம்.

காரில் புறப்பட்டதற்குக் காரணம் பயணச் செலவை மிச்சப்படுத்தத்தான். தவிர, காரில் நமது விருப்பம் போல ஊர்களை ஆற அமர சுற்றி பார்க்கலாம்.

பயணத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். அவசரம் அவசரமாக ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு ஓடவேண்டாம். பெரும்பாலும் இரவு வேளைகளில் அந்தந்த ஊர்களில் பெட்ரோல் பங்குகளுக்கு அருகில் காரை நிறுத்தி உறங்குவோம். பங்கில் இருக்கும் கழிவறைகள்... குளிக்கும் அறைகளை பயன்படுத்திக்கொள்வோம். சில இடங்களில் மட்டும் வாடகைக்கு அறை எடுப்போம். நாங்கள் கடக்கும் நகரங்களில் சொந்தக்காரர்கள் யாராவது இருந்தால் அவர்கள் வீட்டிலும் தங்குவோம்.

ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாதுகாப்புக்காக லாட்ஜுகளில் தங்கினோம். வழியில் கார் பயணத்தில் எங்களுக்குப் பிறரால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. சிறு சிறு கிராமங்களில் உள்ளூர் மக்கள் எங்களை விரும்பி உபசரித்தார்கள். தங்க இடம் தந்தார்கள். நாங்களும் எங்கள் பயணத்தின் போது எடுத்த காணொலிகளை பதிவிடுவோம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். பயணக் காணொலிகளைத் தொகுப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். பயணச் செலவு இரண்டரை லட்சம் ஆகும் என்று கணக்கு போட்டோம். குறைவாகத்தான் செலவாகியுள்ளது. நடுநடுவே... காரில் ஏற்படும் குறைகளைச் சரி செய்து கொண்டோம். பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் செய்ததால்.... போராட்டங்களுக்கு ஏற்றவாறு பயண நேரங்களை மாற்றிக் கொண்டோம். பஞ்சாப் விவசாயிகள் எங்களுக்கு ரொட்டி, லஸ்ஸி கொடுத்து
உபசரித்தார்கள்.

பயணத்தின் போது மதிய உணவை சாலை ஓரத்தில் இருக்கும் மர நிழலில் சமைத்துக் கொள்வோம். இரவு பெரும்பாலும் உணவுவிடுதிகளில், தாபாக்களில் சாப்பிடுவோம். வேலையை விட்டுவிட்டதால், யூடியூபில் எங்கள் நிகழ்ச்சிகள் மூலமாக வரும் வருவாய்தான் கை கொடுக்கிறது. சுமார் 80 ஆயிரம் நெட்டிசன்கள் எங்கள் காணொலிகளைப் பார்க்கிறார்கள்.

பாகிஸ்தான் - இந்தியா எல்லை பகுதிகள் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ளன. சிக்கிம் பகுதியில் சீன எல்லைகள் பல உள்ளன. அந்தப் பகுதிகளுக்குச் சென்று வந்தோம். அமிர்தசரஸில் பொற்கோவில் தரிசித்தோம். அங்கே இலவசமாக வழங்கப்படும்.

அவுரங்காபாத்தில் இருக்கும் "லொனார்' ஏரி நீரில் அதிக அளவு காரம் இருப்பதால் மீன்கள் இல்லாத ஏரி என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த ஏரிக்கு மூன்று அருவிகளிலிருந்து நீர் வந்து சேர்ந்தாலும், அருவி நீர் இந்த ஏரியில் கலந்ததும் காரத்தன்மை உள்ளதாக மாறிவிடுகிறது. இந்த ஏரியில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ந்தால் ரசாயன மாற்றத்தால் மஞ்சள் விழுந்த பகுதியில் நீர் சிவப்பாக மாறிவிடும்.

லடாக் பகுதியில் "லே'க்குச் சென்ற போது ஆச்சரியமான விஷயம் தெரிய வந்தது. "லே' யின் அருகில் அமைந்திருக்கும் "தா', "ஹனு' , "கார்கோன்' , "தற்சிக்' கிராமம் உலகப் புகழ் பெற்றவை. அதற்கான காரணத்தை அறிந்தால் அதிசயப்படுவீர்கள்.

இரண்டு மாதத்தில் ஊர் திரும்பலாம் என்று தான் பயணத்தைக் தொடங்கினோம். ஆனால் ஓராண்டு ஆகியும் பயணம் தொடர்கிறது. ஏப்ரல் மாதம் கேரளம் திரும்ப முடிவு செய்துள்ளோம். பல மாநிலங்கள்.. பல ஊர்கள்... பலவகை மக்களைச் சந்தித்தாலும், எங்களுக்கு கரோனா தொற்று ஏற்படாதது ஒரு வரம். 12 மாதங்களுக்கு மேலாக நானும் மனைவியும் தனியாக இந்தியாவின் பல மாநிலங்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். இந்தியா சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல எங்களைவிட சரியான எடுத்துக்காட்டு யாராக இருக்க முடியும்' என்கிறார் ஹரிகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com