நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

செயல்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன !

""வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா.  எப்போதுமே ஆச்சரியம்.  அது ஒரு  மாயமான். எல்லாவற்றையும் செய்து விட்டு, ஓடி ஒளிந்து கொள்ளும்.  மனிதனும் அப்படித்தான்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

""வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா. எப்போதுமே ஆச்சரியம். அது ஒரு மாயமான். எல்லாவற்றையும் செய்து விட்டு, ஓடி ஒளிந்துகொள்ளும். மனிதனும் அப்படித்தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன? இவை எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். வாழ்க்கையின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இதமான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் துவாரக் ராஜா. ஏற்கெனவே "காதல் கசக்குதய்யா' படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இப்போது "பரோல்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

"பரோல்'.... ஆக்ஷன், த்ரில்லர் பாணி தலைப்பு?

அதுதான் நோக்கமாக இருந்தது. புரிந்துணர்வுக்கு நன்றி. முதல் படத்துக்குப் பின் நிறைய ஆய்வுகள் இருந்தன. பயணங்கள் இருந்தன. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையைக் காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூடத் தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்பப் புள்ளி. காமெடி, கமர்ஷியல் என எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படியாக நீங்கள் சொன்ன ஆக்ஷன் த்ரில்லருக்குள் வந்து சேர்ந்தது. இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. "பரோல்' என்பது எத்தனை பொருத்தமான தலைப்பு என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிய வரும்.

திரைக்கதை வடிவம் பற்றி?

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறிவிடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு ஆக்ஷன் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

வட சென்னைதான் களம் என்ற பேச்சும் இருக்கிறதே?

வட சென்னையும் ஒரு களம். சென்னை, திருச்சி, மதுரை என போகும் கதை இறுதியில் சென்னையில் முடிவடையும். ஒரு அண்ணன், தம்பி கதை. அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை கடத்துகிற திரைக்கதை. வழக்குக்காக சிறையில் இருக்கும் அண்ணனை அவரின் தம்பி பரோலில் எடுக்க நினைக்கிறார். அதில் உள்ள சிக்கல்களை கடந்து அவர் எப்படி பரோல் எடுத்தார்.அதன் பின் நடந்தவை என்ன என்று கதை போகும். வாழ்வதற்கு எந்த தத்துவமும் தேவையில்லை. ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவைகளுக்காக அறிவோடு ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைதான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம்.

சரி... கலைஞர்களின் பங்களிப்பு எப்படி?

ஆர்.எஸ். கார்த்திக் ஏற்கெனவே "பீச்சாங்கை' படத்தில் கவனம் பெற்றவர். அவருக்கு ஓர் இடம். "சேதுபதி', "சிந்துபாத்' படங்களில் நடித்த லிங்காவுக்கு இன்னொரு இடம். இருவரும்தான் கதையின் பிரதானம். மோனிஷா, கல்பிக்கா இருவரும் கதாநாயகிகள். வினோதினி, ஜானகி சுரேஷ், இப்படி தன் பங்கை ஆழமாக செய்யும் கலைஞர்கள் முன் வந்தார்கள். எல்லோருக்கும் நன்றிகள். தொழில்நுட்பக்கலைஞர்களின் பங்கு மகத்தானது. மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு. ஓர் ஆக்ஷன் படத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை பொறுப்பாக செய்து தந்தார். இசைக்கு ராஜ்குமார் அமல். அவரின் இசை அடுத்தக் கட்டத்துக்கு இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறது. முனீஸ் படத்தொகுப்பு. இப்படி எல்லாமே கை சேர்ந்ததில் மகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.