வட்ட வடிவில் உருண்டோடும் சக்கரங்கள்தான் வாகனங்களைப் பிறக்கச் செய்தன. இதனாலேயே வெகுதூரப் பயணங்களும் சாத்தியமானது. ஆரம்பத்தில் சரக்குகளைக் கொண்டு செல்லவே வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
பொறியியல் வளர்ச்சியின் அடுத்ததாக, கார்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற மோட்டார் வாகனங்கள் பிறந்தபோது, உலகை வலம் வர மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன. அது புதிய பயணங்களால் மக்களின் வாழ்க்கைக்குப் புத்துயிர் ஊட்டியது.
சக்கரங்களும் வாகனங்களும் நவீன உலகின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. வாகனங்களின் பரிணாம வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கட்டமைக்கப்பட்டது. அந்த முன்னேற்றத்தை வரலாறாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார் தர்மஸ்தலா மடத்தின் தலைமை அறங்காவலர் டாக்டர் வீரேந்திர ஹெக்டே.
இவர் பழையன கழிக்காமல், புதியன தழுவும் மோட்டார் வாகனங்களின் அழகியலை அருங்காட்சியக ஓவியமாக வரைந்துள்ளார்.
கார்கள் மீதான காதலை மறைக்க விரும்பாத வீரேந்திர ஹெக்டே ஐம்பது ஆண்டுகளாகச் சேகரித்து வைத்திருந்த அழியா வரலாற்றுத் தடத்தை மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பெங்களூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவைக் கடந்து மைசூரை தொடுவதற்கு முன் தொட்டுவிடும் தூரத்தில் "பயணா' பழங்கார் அருங்காட்சியகம் ஏப். 1- முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டுள்ளது. பழமையான அழகு ததும்பும் இந்த அருங்காட்சியகம் 23 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கிறது.
காரின் டயர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் மாமன்னர்கள் பயன்படுத்திய தேர் முதல் நவீன செல்வந்தர்கள் பயன்படுத்திய எழில் கொஞ்சும் கார்கள் வரை காண்போரின் புருவங்களை உயர்த்துகின்றன.
பல்வேறு நாடுகளில் இருந்துத் திரட்டப்பட்ட பழம்பெரும் கார்கள், வரலாற்றுத் தடத்தைக் கண் முன் கொண்டு வருகின்றன. புகைப்படக் கலை, பழைய கார்கள் மீது வீரேந்திர ஹெக்டேவுக்கு இருந்த அலாதியான ஈர்ப்பு, தர்மஸ்தலாவை தொடர்ந்து ஸ்ரீரங்கப்பட்டணாவில் பழைய கார்களின் இரண்டாவது அருங்காட்சியகத்தை அமைக்கத் தூண்டியுள்ளது.
கம்பீரமான தேர்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய ஜீப்புகள், லாரிகள், நவீன வடிவமைப்பில் உருவான அழகிய கார்கள் அணிவகுத்து காட்சி அளிக்கின்றன.
1925 முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான பல்வகை கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1925இல் தயாரிக்கப்பட்ட ஃபியட் 501, 1926இல் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ், 1928இல் வெளிவந்த ஃபியட் 621 கார்கள் வரலாற்றின் ஆடம்பரத்தை எடுத்துக் காட்டுகின்றன.
மோரீஸ்15/6 (1934ஆம் ஆண்டு மாடல்), ஃபோர்ட் பெர்ஃபெக்ட் இ93ஏ (1946), பக் சீரிஸ் 50 சூப்பட் எயிட்(1947), சிட்ரோயென் டிராக்ஷன் அவன்ட் 11சிவி (1947), ஷெர்லெ இம்பாலா(1947), ஸ்டூட்டி பேக்கர் சாம்பியன்(1947), மாரீஸ் எயிட் சீரிஸ் இ(1948), டைம்லர் டி26(1949), ஆஸ்டின் ஏ40 சோமர்செட்(1952),காஸ் 69(1953) ஷெர்லெ
பெல் ஏர்(1955), வில்லிஸ் டிரக் 475(1958), ஹிந்துஸ்தான் லேன்ட் மாஸ்டர்(1956), ஸ்டான்டர்டு ஹெரால்டு(1962). ஸ்டேய்ர் ஹேஃப்லிங்கர்(1962), டொயோட்டா கொரோல்லா 1.6ஜிஎல்(1990) போன்ற கார்கள், அழகியல், தொழில்நுட்பம், பொறியியல் புதுமை, புத்தாக்கங்களால் வியப்பில் ஆழ்த்துகின்றன.
சக்கரங்களைத் தாங்கி நிற்கும் கார்கள் மட்டுமல்லாது, அதன் தொழில்நுட்பங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பொறியியல் பயிலும் மாணவர்கள் மட்டுமல்ல; அனைத்துத் தரப்பினரும் கண்டுரசிக்க கார்களின் புகைப்படக் கண்காட்சி, திறந்தநிலை திரையரங்கம், உணவரங்கம், விளையாட்டுப் பகுதி ஆகியன இருக்கின்றன.
எதிர்காலத்தில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பழமையின் புதுமையை பாதுகாத்து, புதிய தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டுமென்ற வேட்கையோடு அருங்காட்சியகம் அமைத்தது குறித்து விவரிக்கிறார், வீரேந்திரா ஹெக்டே:
அவரிடம் பேசியபோது:
""தானியங்கி வாகனங்கள் மீது தணியாத ஈர்ப்பு உண்டு. இளம்வயதில் இருந்தே கார் என்ஜினின் இயக்கவியல் என்னை வியப்படைய செய்யும். அடுத்தடுத்து கார்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, வடிவமைப்பு போன்றவை கவர்ந்தன.
கார்கள் மீதுள்ள காதல், அழிவில் இருக்கும் பழங்கார்களைப் பாதுகாக்க தூண்டியது. இதை இளம் தலைமுறைக்குக் கொண்டு செல்லவே அருங்காட்சியகத்தை அமைத்தேன். காலம் கடந்து நிற்கும் கார்கள், இளையவர்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். இந்த அருங்காட்சியகம் கார்களின் வரலாறு மட்டுமல்ல, காலத்தே நேர்ந்துள்ள புத்தாக்கங்கள், கலைநுணுக்கம், அழகியல் மீதான நாட்டம், சுகவாழ்வு மீதான வேட்கை ஆகியவற்றையும் நுகர முடியும்.
அழகியலின் உச்சநிலையில் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணித்து வருபவர்கள், கார்களின் முடியாத பயணத்தை கண்டு உணர முடியும். காலத்தை விஞ்சி நிற்கும் கார்களின் மூலம் வரலாற்றை கொண்டாடுவோம். மனிதனின் கடந்தகால அறிவுநுட்பம், பொறியியல் நேர்த்தி, கைவண்ணம் பலரையும் கவரும்'' என்கிறார் வீரேந்திர ஹெக்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.