வையாபுரிப் பிள்ளை தாள் வாழ்க!

பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையை, திராவிட இயக்கத்தினரும் தனித்தமிழ் ஆர்வலர்களும் விமர்சிப்பதும் குற்றப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.
வையாபுரிப் பிள்ளை தாள் வாழ்க!

பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையை, திராவிட இயக்கத்தினரும் தனித்தமிழ் ஆர்வலர்களும் விமர்சிப்பதும் குற்றப்படுத்துவதும் வேதனையளிக்கிறது. அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பில் ஒரு விழுக்காடு கூட பங்களிக்காதவர்கள்தான் அவரை விமர்சிக்கிறார்கள் என்பதுதான் அதைவிட வேதனை. இன்றைய தலைமுறையும் அவரது விமர்சகர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு வையாபுரிப் பிள்ளையினுடையது என்பதால்தான் இந்தப் பதிவு.

20-ஆம் நூற்றாண்டில் கா.சு.பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் சட்டத்துறையில் பயின்று பயிற்சி பெற்றிருந்தும், வழக்குரைஞராகவே தம் வாழ்நாளைக் கழித்துவிடாமல், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்திருப்பது போலவே பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையும் சட்டம் பயின்றிருந்தும் தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்.

வையாபுரிப் பிள்ளை தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் பெரும்புலமை பெற்றிருந்தார். எந்தவொரு பொருள் பற்றியும் விருப்பு வெறுப்பற்று ஆராய்தல் வேண்டும் என்னும் கொள்கையை இவர் தமது வாழ்நாளின் இறுதிவரைக் கடைப்பிடித்தார். தனது முன்முடிவுகளுக்கேற்ப தரவுகளைத் திரித்துக்கூறும் இயல்பினரல்லர் இவர்.

வையாபுரிப் பிள்ளை வாழ்ந்த காலகட்டத்தில் ஏட்டிலிருந்த எல்லா நூல்களும் அச்சில் வரவில்லை. தொல்காப்பிய ஆய்வுகூட முழுமை பெறவில்லை. தமிழ்த் தேசியம் என்ற சொல்லாட்சி உருவான நேரம் அது. சம்ஸ்கிருதத்தின் மீது பகை வளர்க்கப்பட்டது.

வையாபுரிப் பிள்ளை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது பழந்தமிழ் இலக்கியங்கள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டது. அங்கு அவருடைய ஆசிரியராக மறைமலையடிகள் இருந்தபோதும் வையாபுரிப் பிள்ளைக்கு தனித்தமிழ் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. இவர் பின்னர் சட்டக் கல்லூரியில் பயின்றபோது உடன் பயின்றவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். அப்போதுதான் கம்பன்மீது வையாபுரிப் பிள்ளைக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று.

வையாபுரிப் பிள்ளை சட்டம் பயின்று முடித்தபின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டு, 1914 முதல் 1922 வரை அங்கு வழக்குரைஞராகப் பணியாற்றினார். அப்போது "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார் (வையாபுரிப் பிள்ளையும் கவிமணியும் சேர்ந்தே சம்ஸ்கிருதம் பயின்றார்கள்). வையாபுரிப் பிள்ளை மகாகவி பாரதியாரைச் சந்தித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்(1918). பாரதி பற்றிய பதிவுகளிலேயே மிகைப்படுத்தப்படாததும் நம்பகத்தன்மை மிக்கதுமான பதிவு இதுவே.

திருவனந்தபுரத்தில் இருந்தபோது புறநானூறு 13-ஆவது பாடல் குறித்து "செந்தமிழ்' இதழில் ஒரு கட்டுரை எழுதினார். இங்கிருந்தபோதுதான் "மனோன்மணியம்' நாடகத்தைப் பதிப்பித்தார் (1922). பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து அங்கு வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். அங்கு அவர் இருந்த மூன்று ஆண்டுகளிலும் முழுக்க முழுக்கத் தமிழ் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார்.

அப்போது இவருடைய பள்ளித் தோழரான கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். ரா. ராகவையங்கார் திருநெல்வேலிக் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். இக்காலகட்டத்தில்தான் சென்னைப் பல்கலைக்கழகம் அகராதிப் பணிக்கென வையாபுரிப் பிள்ளையை அழைத்தது.

முன்னதாக சென்னையில் அகராதிப் பணிக்கென ஜே.எஸ். சாண்டிலர் தலைமையில் 1911-இல் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர் 1921-இல் பதவி விலகியதும் அனவரத விநாயகம், வேங்கட்ராம ஐயர் போன்ற சிலர் அகராதித் தயாரிப்பில் பொறுப்பு வகித்தனர்.

1911 முதல் 1926 வரையிலான 15 ஆண்டுகளில் சேகரித்த சொற்கள் 21327; இவை 796 பக்கங்கள். இது முதல் தொகுதியாக வெளிவந்தது.

பின்னர் வையாபுரிப் பிள்ளை 1926லிருந்து 13 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி ஏழு தொகுதிகள் (பிற்சேர்க்கையும் சேர்த்து) வெளியிட்டார். இவை எல்லாமாக 4351 பக்கங்கள்; 11762 சொற்கள். வையாபுரிப் பிள்ளை பசி நோக்காது கண் துஞ்சாது பாடுபட்டதற்கான பலன் இது.

திராவிட மொழிகளிலேயே முதல் அகராதி தமிழில்தான் வந்தது. அதற்காக வையாபுரிப் பிள்ளைக்கு "ராவ் சாகிப்' பட்டம் கொடுக்கப்பட்டது. வடமொழி தமிழுக்கு நற்றாய் எனப் பல தமிழறிஞர்களே கூறியபோது அதனை மறுத்து "தமிழுக்கு வடமொழி செவிலித்தாயே' என நிறுவியவர் வையாபுரிப் பிள்ளை. பிற திராவிட மொழிகளின் முதல் இலக்கியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் வடமொழி சார்பு கொண்டு தோன்றின. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் தமக்கென்றே அமைந்த சிறப்புக் கோட்பாடுகளுடன் தோன்றியுள்ள செய்தியும் அவை தமிழின் ஆசிரியம் முதலிய நான்கு வகைப் பாக்களை ஒட்டி அமைந்திருக்கும் திறனும் தமிழுக்கு வடமொழி நற்றாய் ஆதல் இயலாது; செவிலித்தாயே ஆகும் என விளக்கியுள்ளார்.

தொல்காப்பியப் பாயிரத்திலுள்ள "அதங்கோடு' என்ற ஊர் கேரளத்திலுள்ள திருவனந்தபுரமே என்பதைக் காரணத்தோடு (திருவனந்தபுரத்தின் பழைய பெயர் திருவதாங்கோடு - திரு நீக்கப்பட்டால் அதாங்கோடு அல்லது அதங்கோடு) வெளிப்படுத்தினார்.

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் தொல்காப்பியனாரைப் படிமையோன் என்று கூறுகிறது. அகத்திணை இயல் உரையில் இளம்பூரணர் படிமை என்ற சொல்லுக்கு "தவ ஒழுக்கத்தை உடையோன்' என்று பொருள் குறித்துள்ளார். ஆனால், நச்சினார்க்கினியர் "படிமை' என்ற சொல்லுக்கு "விரதம்' என்று பொருள் செய்துள்ளார். வையாபுரிப் பிள்ளை ""படிமை என்ற சொல் "விரதம்' என்ற பொருளில் இந்து சமய நூல்கள் எதிலும் வழங்கப்படவில்லை. சமண சமய நூல்களில் வீடுபேற்றை விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய தவ ஒழுக்கத்தையே படிமம் எனக் குறிப்பிடுகின்றனர். எனவே, இளம்பூரணர் குறிப்பிடும் தவ ஒழுக்கத்தை உடையோன் என்ற பொருளே சரியானது'' என்று நிறுவினார்.

வையாபுரிப் பிள்ளை பல்கலைக்கழக அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே "நாமதீப நிகண்டு'(1930), "அரும்பொருள் விளக்க நிகண்டு'(1931), "பொதிகை நிகண்டு'( 1934), "பிங்கலந்தை நிகண்டு'(1935) ஆகிய நிகண்டுகளைப் பதிப்பித்திருக்கிறார். "களவியல் காரிகை', "தொல்காப்பியம் பொருள் இலக்கணம்' போன்ற சில இலக்கண நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். 1926க்கும் 1936க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் 21 நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.

65 வயது வரை வாழ்ந்த இவர் 45 ஆண்டுகள் முழுநேர ஆய்வாளராக இருந்திருக்கிறார். இலக்கியம், மொழி, பதிப்பு, அகராதி ஆகிய நான்கு துறைகளில் அரும்பணி ஆற்றியிருக்கிறார். இவர் எழுதியுள்ள ஆய்வு நூல்கள் 21. இவற்றில் இவர் மறைவுக்குப் பின் தொகுக்கப்பட்டு வந்தவை 8. ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு நாவலும்கூட வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கிய வரலாற்றையும் திராவிட மொழிகள் குறித்த ஓர் ஆய்வு நூலையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.

இவர் பதிப்பித்தவை 45 நூல்கள். முதன் முதலாகப் பதிப்பித்தது "மனோன்மணியம்'(1922), இறுதியாகப் பதிப்பித்தது "திவ்யப் பிரபந்த முதலாயிரம்'(1956). ஆக இவர் எழுதியவை, பதிப்பித்தவை எல்லாம் சேர்த்து 61 நூல்கள். 11600 பக்கங்கள். இவர் எழுதிய சில கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் இன்னும் நூல் வடிவம் பெறவில்லை. இவர் பதிப்பித்த 45 நூல்களில் இலக்கியம் மற்றும் இலக்கணம் தொடர்பானவை, சிற்றிலக்கியங்கள், நிகண்டுகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை அடங்கும்.

வையாபுரிப் பிள்ளைக்கு சொந்தமான நூற்களும் அவர் தொகுத்த ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளும் நாட்குறிப்புகளும் தற்போது கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ளன. அவரது நாட்குறிப்புகளேனும் அச்சில் வந்தால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க கால இலக்கிய முயற்சிகள் பற்றி நாம் அறிய முடியும்.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பன்மொழிகளைப் பயின்றிருந்தாலும் அவரது இலக்கியப் பங்களிப்பு முழுமையும் தமிழ் மொழிக்கு மட்டும் உரித்தானதேயன்றி வடமொழிக்கோ வேற்று மொழிகளுக்கோ அன்று என்பதைக் காய்தல் உவத்தலற்று அவரது தமிழ்ப் பணியைக் கண்ணுறுவோர் உணர்வர். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தாள் வாழ்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com