இந்த வாரம் கலாரசிகன் - (13-2-2022)

கோவைக்குப் போனால் விஜயா பதிப்பகம், மதுரைக்குப் போனால் சர்வோதயா புத்தகப் பண்ணை, திருச்சிக்குப் போனால் தெப்பக் குளத்துக்கு அருகிலிருக்கும் பழனியப்பா பிரதர்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களில் ஒரு எட்டு
இந்த வாரம் கலாரசிகன் - (13-2-2022)

கோவைக்குப் போனால் விஜயா பதிப்பகம், மதுரைக்குப் போனால் சர்வோதயா புத்தகப் பண்ணை, திருச்சிக்குப் போனால் தெப்பக் குளத்துக்கு அருகிலிருக்கும் பழனியப்பா பிரதர்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களில் ஒரு எட்டு எட்டிப் பார்த்து, புதிதாக என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்வதில் எனக்கு அதீத ஆர்வமுண்டு. அதேபோல, சென்னையில் பாண்டி பஜாருக்குப் போனால் வானதி பதிப்பகத்துக்கும், மயிலாப்பூர் சென்றால் அல்லயன்ஸ் நிறுவனத்துக்கும் போவது என்பதையும் வழக்கமாகக் கொண்டவன் நான்.

கடந்த சனிக்கிழமையன்று, "தினமணி' முதன்மை உதவி ஆசிரியர் ராஜ்கண்ணனின் மகள் சந்தியா திருமண வரவேற்புக்கு மயிலாப்பூர் சென்றிருந்தேன். அதுவரை போய், அல்லயன்ஸூக்குப் போகாமல் இருப்பேனா? நான் விடைபெறும்போது, "இதைப் படித்துப் பாருங்கோ' என்றபடி என்னிடம் ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார் ஸ்ரீநிவாஸன்.

அப்போது, வரவேற்புக்குப் போகும் அவசரத்தில் அந்தப் புத்தகத்தின் அருமை எனக்குத் தெரியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து சற்று காலதாமதமாக எடுத்துப் புரட்டியபோது, நான் அதிர்ந்து போனேன். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அதாவது 1920-இல் முதல் பதிப்பு கண்ட புத்தகம் அது. நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் நிறுவனத்திலிருந்து மறுபதிப்பாக வெளிவந்திருக்கும், நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட அந்தப் புத்தகம் ஓர் அலாதியான படைப்பு.

பாலகவி பெ.சூ.பாலராஜன், தூசி. ராஜகோபாலன் பூபதி இருவராலும் இணைந்து எழுதப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா? "பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை!!! ஏமாறாதீர்கள்...' என்பதுதான் அதன் நீண்ட தலைப்பு. அந்தத் தலைப்பு, புத்தகத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்று உங்களை ஊகிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகில் எத்தனைவிதமான ஏமாற்றுக்கள், மோசடிகள் இருக்கின்றனவோ அவை அத்தனையையும் கதை சொல்வதுபோல பட்டியலிட்டிருக்கிறார் பாலகவி பெ.சூ.பாலராஜன். அதுவும் எப்போது? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால். இப்போதும் அதில் காணப்படும் பெரும்பாலான மோசடிகளும், ஏமாற்றுக்களும் நமது சமூகத்தில் தங்கு தடையில்லாமல் தொடர்கின்றன என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

அன்றைய (இன்றைய) சமுதாயத்தில் காணப்படும் மோசடிகள் இரண்டு பாகங்களாகப் பிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜவுளி, அரிசி, காய்கறி, உணவு விடுதி முதலிய வியாபாரத் தலங்களில் நடத்தப்படும் மோசடிகள்; பிச்சைக்காரர்கள், விலைமாதர்கள், ஈட்டிக்காரர்கள், ஜட்கா வண்டிக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் உள்ளிட்டோரின் மோசடி; ஜோதிடத்தில் தொடங்கி பல்வேறு விதமான நூதன மோசடிகள்; மை போட்டு நிகழ்வைக் கண்டுபிடிப்பது, விளக்கு வைத்துப் பார்ப்பது, இரசவாதம் செய்வது, வைத்திய விளம்பரம் போன்ற மோசடிகள் ஆகியவை முதலாவது பகுதி.

அதுபோன்ற 141 மோசடிகளைப் படித்து வயிறு குலுங்கச் சிரித்துவிட்டு அடுத்த பகுதிக்கு வந்தால், அடுத்தாற்போல இருக்கின்றன மேலும் 107 மோசடிகள். இவை பெரும்பாலும் தனிநபர்கள் பரவலாகச் செய்யும் மோசடிகள். உத்தியோகஸ்தர்கள், புரோகிதர்கள், தவசுப் பிள்ளைகள், வைத்தியர்கள், வக்கீல்கள் உள்ளிட்டவர்களின் சாமர்த்தியமான ஏமாற்றுதல்கள் குறித்த கதைகள் அவை.

"சிரித்துச் சிரித்து வயிறு வலித்தது' என்பது மிகைப்படுத்தப்படும் சொல்லாடல் என்று யாராவது நினைத்தால், இந்தப் புத்தகத்தைப் படித்தால் அது நிஜம்தான் என்று உணர முடியும். காவல் துறையினர், புனைவு எழுத்தாளர்கள், திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதி எழுதுபவர்கள் இந்தப் புத்தகத்தின் மூலம் எப்படியெல்லாம் மதிமோசம் செய்து மோசடியாளர்கள் பிழைக்கிறார்கள் என்கிற பூலோக ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

நூறு ஆண்டுகள் கடந்தும் இதில் காணப்படும் 248 மோசடிகளில் குறைந்தது 150 மோசடிகள் இப்போதும் தொடர்கின்றன என்றால் என்ன பொருள்? பரவலாகக் கல்வியறிவு ஏற்பட்டும்கூட சமுதாயம் மாறவில்லை என்பதைத்தானே அவை உணர்த்துகின்றன!

-----------------------------------------------------

புராண இதிகாசக் கதைகள் இந்தியாவில் மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். நம்மைவிட அதிகமான புராண, இதிகாசக் கதைகள் கிரேக்கர்கள், பாரசீகர்கள், சீனர்கள், ஜப்பானியர்களுக்கு உண்டு. வேடிக்கை என்னவென்றால், அவற்றுள் பல கதைகள் ஒன்றையொன்று ஒட்டியவையாக இருப்பவை. பல கதாபாத்திரங்களில் ஒருசில ஒற்றுமைகளை நாம் பார்க்க முடியும்.

நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கும் கிரேக்க இதிகாசக் கதாபாத்திரங்கள் யூரேனஸ், ஸீயஸ், அத்தீனா, அப்பல்லோ, ஹெர்க்குலீஸ் (ஹர்குலஸ்), ஹெலன் ஆகியோர்தான். ஆனால், இன்னும் ஏராளமான கிரேக்க இதிகாசக் கதைகளும், கதாபாத்திரங்களும் உண்டு. சீன, ஜப்பானியக் கதைகள் அளவுக்கு அவை தமிழகத்தில் வரவில்லை அவ்வளவே.

ஏவி.எம். நஸீமுத்தீன் எழுதியிருக்கும் புத்தகம் "கிரேக்க இதிகாசக் கதைகள்'. ""நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற எத்தனையோ சொற்பதங்களுக்கு மூலமாய் அமைந்திருப்பவை கிரேக்கர்களின் தொன்மக் கதைப் பாத்திரங்களே. அட்லஸ், அமேசான், பெல்லுனா, க்யுபிட், எக்கோ, ஹீரா, ஏரியன், வல்கன், டைட்டன், ஹெர்க்குலீஸ், ஓரியன், ஒலிம்பிக், ஒராக்கில், அப்பல்லோ என்ற பெயர்கள் கிரேக்கக் கதாபாத்திரங்களின் பெயர்கள்'' என்கிறார் நஸீமுத்தீன்.

அவர் கூறுவதுபோல, பல சுவாரசியமான கிரேக்கக் கதைகளில் நம் நாட்டுத் தொன்மக் கதைகளின் அம்சங்களை, அடையாளங்களை, ஏன் கதை நிகழ்வுகளைக்கூட நாம் காணலாம். 38 இதிகாசக் கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் நஸீமுத்தீன். அவற்றைப் படிக்கும்போது, நான் மனத்தளவில் பள்ளிச் சிறுவனாக என்னை மாற்றிக் கொண்டேன். தவறு, அந்தக் கதைகள் மாற்றிவிட்டன. பசி எடுப்பதுகூடத் தெரியாமல், சுவாரசியமாகப் படித்து முடித்தேன் என்பதுதான் நிஜம்.

-----------------------------------------------------

கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டிருந்தது கவிஞர் வீ.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதை. இதுதான் இந்த வாரத்துக்கான கவிதை - வாசத்தோடு
படைத்த இறைவனை
சபித்திருக்குமோ
வெட்டப்பட்டபோது
சந்தன மரம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com