இந்த வாரம் கலாரசிகன் - 02-07-2023

தமிழில் மிக அதிகமான ஆய்வுகளும், தெளிவுரைகளும் எழுதப்படும் நூல் திருக்குறளாக மட்டுமே இருக்கும்.
இந்த வாரம் கலாரசிகன் - 02-07-2023

தமிழில் மிக அதிகமான ஆய்வுகளும், தெளிவுரைகளும் எழுதப்படும் நூல் திருக்குறளாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு தமிழறிஞரும் தனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது திருக்குறளுக்கு உரை எழுதுவது அல்லது திருக்குறளை ஆய்வு செய்வது அல்லது இரண்டுமே ஆகியவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும். திருக்குறளுக்கு உரை எழுதியவர்களைவிட, உரை எழுதாத தமிழறிஞர்களைப் பட்டியலிடுவது எளிது எனுமளவுக்கு திருக்குறளுக்கு உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

நான் முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்தது போல, பரிமேலழகரை அடியொற்றியோ அவரது கருத்தில் சில இடங்களில் மாறுபட்டோ எழுதப்பட்டவைதான் அனைத்து உரைகளும். அனைவருக்கும் புரியும்படி எந்த அளவுக்கு எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான், திருக்குறள் தெளிவுரையின் வெற்றியாக இருக்கும். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினரும், திருச்சி பெரியார் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராக இருந்தவருமான முனைவர் கே. லெட்சுமணன் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் முனைவர் ப. சுப்பிரமணியன். அவர் எழுதிய திருக்குறள் தெளிவுரையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் நண்பர் லெட்சுமணன்.

அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தெளிவுரை எழுதப்பட்டிருக்கும் அந்தக் கையடக்கப் புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் சில தகவல்கள், தமிழறிஞர்களுக்கும், குறள் ஆர்வலர்களுக்கும் மட்டுமே தெரியும். சாமானிய வாசகர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு திருவள்ளுவரைக் குறிக்கும் பெயர்கள்  செந்நாப் புலவர், பொய்யில் புலவர், செந்நாப் போதார், மாதாநுபங்கியார், தெய்வப் புலவர், முதற் பாலவர், வள்ளுவ தேவன், வள்ளுவர்.

திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்  உத்தரவேதம், பொய்யா மொழி, எழுதுண்டமறை, பொருளுரை, தமிழ்மறை, முதுமொழி, திருவள்ளுவப் பயன், முப்பால், வள்ளுவம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, பொதுமறை.

திருக்குறள் இடம்பெறும் விளக்க நூல்கள்  இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, சினேந்திர வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, திருக்குறள் குமரேச வெண்பா, திருக்குறள் விளக்க வெண்பா, திருக்குறள் வேங்கடேச வெண்பா, திருத்தொண்டர் வெண்பா, திருப்புல்லாணி மாலை, திருமலை வெண்பா, தினகர வெண்பா, பழைய விருத்த நூல், முதுமொழி மேல் வைப்பு, முருகேசர் முதுநெறி வெண்பா, வடமலை வெண்பா, வள்ளுவர் நேரிசை.

------------------------------------------------------

"யாரோடும்  பகை இலன்' என்று கம்பர் சொல்வார். அதற்கு இன்றைய எடுத்துக்காட்டு வெ. இறையன்பு.

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் சேர்ந்து, வெற்றிகரமாக செயல்பட்டு, மாநில அரசுப் பணியில் மிக உயர்ந்த பதவியான தலைமைச் செயலாளராகக் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக இருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறார் வெ. இறையன்பு. அவர் தலைமைச் செயலராக இருந்தபோது அவரை ஒருமுறைகூட சந்திக்க முடியவில்லை என்பதில் எனக்கு நிறையவே வருத்தம் உண்டு.

நாங்கள் இடையில் ஒரேயொரு முறை பார்த்துக் கொண்டோம். அதுவும் எப்படி? முன்றில் அமைப்பின் ம. அரங்கநாதன் விருது வழங்கும் விழா ராணி சீதை அரங்கத்தில் நடந்தபோது, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த அவருக்கு அருகில், இருட்டில் தட்டுத் தடுமாறிப்போய் நான் அமர்ந்தபோது!

தொலைபேசியில் நாங்கள் பேசிக்கொள்ளாமல் இல்லை. பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினாலோ, தகவல் தெரிவித்தாலோ தவறாமல் தொடர்பு கொண்டு விடுவார். கடந்த இரண்டாண்டுகளாக நேரில் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் எங்கள் இருவருக்கும் இடையேயான பரஸ்பர நட்பும் மரியாதையும் குறைந்ததில்லை.

அரசு நிர்வாகம் அவரை விட்டுவிடும் என்று தோன்றவில்லை. அப்படி நேர்ந்தால் அது நிர்வாகத்துக்கும் தமிழகத்துக்கும் பேரிழப்பு. அடுத்த பதவி அவரைத் தேடி வருவதற்குள் சந்தித்துவிட வேண்டும் என்று விழைகிறேன். அவரிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன்.

இறையன்பு எழுதிய "நட்பெனும் நந்தவனம்' புத்தகம் படித்திருக்கிறீர்களா? படிக்கவில்லை என்றால், ஒவ்வோர் இளைஞனும் கட்டாயம் படித்தாக வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அது ஒரு வழிகாட்டி.

டேல் கார்னகி என்றொரு அமெரிக்க எழுத்தாளர் உண்டு. இன்றைய சுய முன்னேற்றம், கார்ப்பரேட் பயிற்சி, திறன் மேம்பாடு இவற்றுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். 1936இல் அவர் எழுதிய "ஹெள டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளுயன்ஸ் பீப்பிள்' (நட்பை வளர்த்து, நமது செல்வாக்கை அதிகரிப்பது எப்படி?) என்கிற புத்தகமும், 1948இல் எழுதிய "ஹெள டு ஸ்டாப் வொரியிங் அண்ட் ஸ்டார்ட் லிவிங்' (கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்து வாழத் தொடங்குவது எப்படி?) என்கிற புத்தகமும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள். அந்த வரிசையில் இடம்பெற வேண்டிய புத்தகம் "நட்பெனும் நந்தவனம்'. 

முழுக்க முழுக்க தன்னைப் பற்றியே அலசும் முதல் தமிழ் நூல் இதுவாகவே இருக்க முடியும் என்பது இறையன்புவின் அனுமானம் மட்டுமல்ல, என்னுடைய கணிப்பும் அதுதான். மூன்று ஆண்டுகளாக "நட்பு' குறித்து அவர் சேகரித்த தகவல்களுடன், தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களையும் இணைத்து எழுதப்பட்டிருக்கும் "நட்பு' குறித்த அற்புதப் பதிவு இந்நூல். 

கவிஞர் மா.உ. ஞானவடிவேலின் "இதயக்கடல்' கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதில் இடம் பெற்றிருந்தது இந்தக் கவிதை 
பதவியின் போதும் சரி
பறிபோன போதும் சரி
காவலர் புடைசூழ
ஊழல் அமைச்சர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com