இந்த வாரம் கலாரசிகன் - 09-07-2023

யாரையும் சிறுமைப்படுத்தவோ, குறை கூறவோ இந்தப் பதிவை நான் செய்யவில்லை. எனது மன வேதனையைப் பகிர்ந்து கொண்டால்தான் எனது மனம் ஆறும்.
இந்த வாரம் கலாரசிகன் - 09-07-2023

யாரையும் சிறுமைப்படுத்தவோ, குறை கூறவோ இந்தப் பதிவை நான் செய்யவில்லை. எனது மன வேதனையைப் பகிர்ந்து கொண்டால்தான் எனது மனம் ஆறும்.

சங்க காலம் தொட்டு தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் தர்க்கத்தில் ஈடுபடுவது உண்டு. அவர்களது கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும், ஏன் விளக்கங்களும்கூட தமிழ் மொழி சார்ந்தவையாக இருந்திருக்கின்றனவே தவிர, போட்டி மனப்பான்மையினாலும், தங்களது தனிப்பட்ட ஆளுமைத்தனத்தை முன்னிறுத்தவும் மேற்கொள்ளப்பட்டதில்லை.

இன்று தமிழ் உலகளாவிய நிலையில் பரவி இருக்கிறது. அதன் விளைவாக மொழி வளர்ந்திருக்க வேண்டும். தமிழர்களின் ஒற்றுமை மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லையே...

மிக உன்னதமான தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்மொழி ஆய்வுகளை சர்வதேச அளவில் மேற்கொள்ள, இன அடிப்படையில் மட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலும் அனைவரையும் இணைக்கும் எண்ணத்துடன் தோற்றுவிக்கப்பட்டதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு 1964இல் தில்லியில் நடந்தபோது, அதில் பங்குபெறச் சென்றிருந்த தமிழறிஞர்களான சேவியர் தனிநாயகம் அடிகள், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், வ.ஐ. சுப்பிரமணியம் உள்ளிட்டோரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜுன்பிலயோசா, ஸ்காட்லாந்தின் ஆர்.இ. ஆஷெர் உள்ளிட்ட பிற நாட்டுத் தமிழறிஞர்களும் இணைந்து தமிழ் ஆராய்ச்சிக்காக ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். 

1966இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. 

அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ.சி. உள்ளிட்ட ஏனைய தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர்.  

1968இல் சென்னையில் இரண்டாவது மாநாடு கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து பாரீஸ் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), போர்ட் லூயிஸ் (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிகாகோ (2019) என்று மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் 2010 இல் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்தப்பட்டது.

இந்த மாநாடுகள் எல்லாமே, தமிழறிஞர்கள் பலர் ஒன்றுகூடி, அவரவர் ஆய்வுகளைப் பதிவு செய்யவும், தமிழ்மொழியின் வளர்ச்சியை முன்னிறுத்தும் கருத்துகளை முன்மொழியவும் வாய்ப்பளித்தன. யாரும் இதுவரை போட்டி மாநாடு நடத்த முற்பட்டதில்லை. இப்போது அது நடந்திருக்கிறது. 

ஒருபுறம் தமிழர்களை ஒருங்கிணைக்கிறோம் என்று பேசுவதும், தங்களை முன்னிறுத்தத் தமிழை பயன்படுத்தி அதை பலவீனப்படுத்துவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

உலகமே வியந்து பார்க்கும்வண்ணம் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்களும், பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்களும் ஒன்றுகூடி பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டிய உலகத் தமிழ் மாநாடு, இலக்கியக் கூட்டம் நடத்தப்படுவதுபோல நடத்தப்படுவது எந்த வகையிலும் தமிழுக்கோ, தமிழின் வளர்ச்சிக்கோ பெருமை சேர்க்காது. 

சென்னையில் ஜூலை 7, 8, 9 தேதிகளில் ஒரு குழுவினரும், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22, 23 தேதிகளில் இன்னொரு குழுவினரும் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துகிறார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது இலச்சினையில் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? இரண்டு மாநாடுகளையும் தவிர்ப்பது என்று நான் மட்டுமல்ல, தமிழிலும் தமிழர் நலனிலும் அக்கறையுள்ள பலரும் ஒதுங்கிய நிலையில், ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். மகாகவி பாரதியார் சொன்னதுபோல "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே'.

---------------------------------------------------------------------

மதுரை தியாகராயர் கல்லூரியில் உதவித் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் த. முத்தமிழ் படைத்திருக்கும் "அறுவகை இலக்கணச் சிறப்புகள்' நூல் விமர்சனத்துக்கு வந்திருந்தது. தமிழில் மட்டும்தான் சம்ஸ்கிருதம் குறித்து எனக்குத் தெரியாது  இலக்கியம் குறித்து எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அதே அளவிலான ஆய்வுகள் இலக்கணம் குறித்தும்  மேற்கொள்ளப்படுகின்றன. 

திருக்குறள், கம்பகாதைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான ஆய்வுகளும், தெளிவுரைகளும், கட்டுரைகளும் தொல்காப்பியம் பற்றியதாக இருக்கின்றன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூவகை இலக்கணங்களுடன் நின்று விடுகிறது. அதை அறுவகை இலக்கணமாக விரிவுபடுத்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை என்று விரிவுபடுகிறது. அவை ஒவ்வொன்றும் குறித்து, நுணுக்கமாகவும் விரிவாகவும் மட்டுமல்ல, சாமானிய ஆர்வலர்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையாகவும் வழங்கி இருப்பதுதான் முனைவர் த. முத்தமிழின் "அறுவகை இலக்கணச் சிறப்புகள்' புத்தகத்தின் தனிச்சிறப்பு.

தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரரால் எழுதப்பட்ட ஐந்திலக்கண நூல் "வீரசோழியம்', 17ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது "இலக்கண விளக்கம்'. அதே காலகட்டத்தில் வீரமாமுனிவரால் எழுதப்பட்ட ஐந்திலக்கண நூல் "தொன்னூல் விளக்கம்'. 19ஆம் நூற்றாண்டில் முத்துவீரிய உபாத்தியாயர் என்பவரால் எழுதப்பட்ட ஐந்திலக்கண நூல் "முத்துவீரியம்'. அதே காலகட்டத்தில் சுவாமி கவிராயரால் இயற்றப்பட்ட ஐந்திலக்கண நூல் "சாமிநாதம்'.

இவையல்லாமல் இன்னும் ஏராளமான இலக்கண நூல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஐந்திலக்கணத்துடன் புலமையையும் இணைத்து, இலக்கணம் படைத்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். அது மட்டுமல்லாது, புணர்ச்சி என்பதை முதன்மைப்படுத்தி இவர் ஏழாம் இலக்கணமும் படைத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

-----------------------------------------------------


விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் காரை பார்த்திபனின் "முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை' கவிதைத் தொகுப்பு. கவிஞர் அரசுப் பணியாளர் என்று அவரது தன்னுரை தெரிவிக்கிறது. இதுதான் அவரது முதல் கவிதைத் தொகுப்பு என்பதையும் தெரிவித்திருக்கிறார். அதில் இருந்த, நான் ரசித்த கவிதை இது 
அறத்துப்பால்
அஸ்தமித்து
யாண்டு பலவாயிற்று
இப்போது
பொருட்பாலுக்கும்
காமத்துப்பாலுக்கும்தான்
கடும் போட்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com