ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்த வாரம் கலாரசிகன் - 07-05-2023

கண்ணை மூடித் திறப்பதற்குள் டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண விளக்கம் நூறு வகுப்புகள் கடந்துவிட்டன.

News image
Updated On :7 மே 2023, 3:24 pm

DIN


கண்ணை மூடித் திறப்பதற்குள் டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண விளக்கம் நூறு வகுப்புகள் கடந்துவிட்டன. கரதூடனரின் வதத்துடன் தனது நூறாவது வகுப்பை எட்டியிருக்கும் அவருக்கு நமது வாழ்த்துகள்.

சாஸ்த்ரா சத்சங்கத்தின் சார்பில் யூடியூப் மூலம் நடத்தப்படும் டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண வகுப்புகள் அனைத்தையும் தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டுதான். அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம்; யூடியூபில்தானே இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாமே என்கிற சோம்பேறித்தனம் இன்னொரு காரணம். ஆனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணத்தின்போது, இரவில் திடீரென்று விழிப்பு வரும்போது என்று  அவ்வப்போது அதை நான் பார்க்காமலும் இல்லை.

அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை, திருமந்திரம், பெரியபுராணம், சிவபுராணம், திருப்புகழ் போல கம்பராமாயணமும் தொடர் உரைகளாகவும், தொடர் வகுப்புகளாகவும் தமிழறிஞர்களால் நடத்தப்பட்டு வந்தது. கோவை கம்பன் கழகம் சார்பில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் நடத்திய கம்பராமாயணத் தொடர் உரையைக் கேட்பதற்காக, எனக்குத் தெரிந்த ஒருவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலிருந்து கோயம்புத்தூர் வரை சென்று, அந்த உரை முடியும் வரை அங்கேயே தங்கி இருந்தார். அதுபோல, ஏனைய கம்பன் கழகங்களிலும் பலர் உரை நிகழ்த்தி இருக்கக்கூடும். அவை புத்தக வடிவம் பெறாமல் போனது நமது இழப்பு. 

டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண வகுப்புகள், யூடியூபில் பதிவாகி, எப்போது வேண்டுமானாலும் கேட்க முடியும் என்கிற வாய்ப்பைத் தொழில்நுட்பம் இன்று ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதற்கு, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழிவகை செய்திருக்கிறது. அவர்களுக்குத்தான் நாம் முதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

பொறுமையாக ஒவ்வொரு பாடலையும் எடுத்துக்கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி விளக்கம் தந்து கம்பகாதையை நகர்த்திச் செல்லும் டாக்டர் சுதா சேஷய்யனின் பாணி அலாதியானது. உடற்கூறியல் மருத்துவப் பேராசிரியரான அவருக்கு, இலக்கியமும் ஆன்மிகமும் ரத்தத்தில் ஊறியவை. கம்பனுடன் நின்றுவிடாமல் அவர் ஆங்காங்கே எடுத்தியம்பும் மேற்கோள்கள் பல, அவரது பாணியின் சிறப்பம்சங்கள்.

நேற்று மாலை வடபழனியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண நூறாவது வகுப்பு கொண்டாடப்பட்டது. விழாத் தலைமை யார் தெரியுமா? உச்சநீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்.

கல்லூரி மாணவர்களாக இருந்த நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன், டாக்டர் சுதா சேஷய்யன், வழக்குரைஞர்கள் ராமலிங்கம், சுமதி, சுகி சிவம் ஆகியோர் சென்னை கம்பன் கழகத்தின் மூலம் தங்களை தகவமைத்துக் கொண்டவர்கள். நீதிபதி எம்.எம். இஸ்மாயில், அ.ச. ஞானசம்பந்தன் ஆகியோரால் கம்பகாதைக்கு ஈர்க்கப்பட்டவர்கள்.

சாஸ்த்ரா சத்சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள். டாக்டர் சுதா சேஷய்யனின் வகுப்பு நிறைவு பெற்றதும், அடுத்ததாக நீதிபதி ராமசுப்பிரமணியனின் கம்பராமாயண வகுப்பு தொடங்கப்பட வேண்டும். கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்க்கும் சாஸ்த்ராவின் பணி தொடர வேண்டும்!

--------------------------------

ராஜீவ் காந்தியின் படுகொலையைப் போலவே, இன்றுவரை மிகப் பெரிய புதிராகவும், விவாதப் பொருளாகவும் தொடர்கிறது பத்மநாபா படுகொலை. அந்தப் படுகொலைக்கும் விடுதலைப் புலிகள்தான் குற்றம்சாட்டப்படுகிறார்கள். சென்னை கோடம்பாக்கத்தில் 1990 ஜூன் 19ஆம் தேதி நடந்த படுகொலையின் நீட்சிதான் 1991 ஜனவரி மாதம், கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசின் ஆட்சிக் கலைப்பு என்றுகூடச் சொல்லலாம்.

எந்தவொரு நிகழ்வுக்கும் இரண்டு மாறுபட்ட கோணங்கள் உண்டு. பத்மநாபாவையும், அவரது தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தையும் அழித்துவிட்டது அன்றைய படுகொலை சம்பவம் என்பது மறுக்க முடியாத உண்மை. கோடம்பாக்கம் ஜக்கரியா காலனியில் ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து, பட்டப்பகலில் 14 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, வந்த சுவடு தெரியாமல் தப்பிச் செல்ல முடிந்தது என்பது தமிழக காவல்துறையின் வரலாற்றில் நிரந்தரமாக ஏற்பட்டுவிட்ட கரும்புள்ளி என்கிற வாதத்தைப் புறந்தள்ள முடியாது.

ஜெ. ராமகிருஷ்ணன் என்கிற ஜெ. ராம்கி எழுதி இருக்கும் "பத்மநாபா படுகொலை'  என்கிற புத்தகம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான பார்வையையும், அவர்களது இன்னொரு பக்கத்தையும் பதிவு செய்கிறது. "பத்ம
நாபா கொலையாளிகளைத் தப்பவிடாமல் தமிழக காவல்துறை தடுத்திருந்தாலோ, அவர்களைத் தேடிப் பிடித்திருந்தாலோ ராஜீவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம்' என்பது ஜெ. ராம்கியின் வாதம்.
"ஆயுதமேந்தித்தான் போராடினார் என்றாலும், பத்மநாபாவின் கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. எந்தவொரு சாதாரண வழக்கிலும்கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள் என அனைத்துத் தமிழர்களின் ஆதரவும் பத்மநாபாவின் இயக்கத்துக்கு இருந்திருக்கிறது. தனி ஈழம் சாத்தியமில்லை என்கிற எதார்த்தத்தை உணர்ந்துகொண்ட தொலைநோக்கு சிந்தனையாளரான பத்மநாபா இருந்திருந்தால், உள்நாட்டுப் போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்பது ராம்கியின் கருத்து.

பத்மநாபா படுகொலை தொடர்பான பின்னணியையும், அந்த நிகழ்வையும், அதன் தொடர் விளைவுகளையும் தனது பார்வையில் பதிவு செய்திருக்கிறார் ஜெ. ராம்கி. ஈழ விடுதலைப் போர் குறித்துத் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகமும் ஓர் ஆவணம்.

--------------------------------

"தபசி கவிதைகளை வாசிப்பது, இன்னொருவரின் இதயத்தைச் சுமப்பது போன்ற அனுபவத்தைத் தருவது' என்பது கரிகாலனின் பதிவு. தபசியின் ஒன்பதாவது கவிதைத் தொகுப்பான "ஜடாயு வதம்' விமர்சனத்துக்கு வந்திருந்தது. பேர் சொல்லும் பிள்ளை என்பதுபோல, 
தபசியின் பெயர் சொல்லும் கவிதைகள். அவற்றிலிருந்து ஒன்று  
கவனமாக இரு
படிப்படியாக முன்னேறு
எதிர்த்து நில்
விட்டுக் கொடு
காத்திரு
காலம் அறிந்து செய்
எவ்வளவோ சொல்லிக்கொடுக்கிறது
செஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.