இந்த வாரம் கலாரசிகன் - 08-10-2023

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி சமுதாயப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் முனைவர் வைர.ந. தினகரன் கடந்த 20 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தியை, காந்தியத் திருவிழாவாக நடத்தி வருகிறார்.
இந்த வாரம் கலாரசிகன் - 08-10-2023

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி சமுதாயப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் முனைவர் வைர.ந. தினகரன் கடந்த 20 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தியை, காந்தியத் திருவிழாவாக நடத்தி வருகிறார். அவரது காந்தியப் பணியில் என்னுடைய பங்களிப்பாக, இயன்றால் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். திங்கள்கிழமை அதற்காக புதுக்கோட்டை சென்றிருந்தேன்.

அவசர அவசரமாக புதுக்கோட்டை சென்று, மீண்டும் சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், "ஞானாலயா' சென்று பெரியவர் கிருஷ்ணமூர்த்தியையும், அவரது மனைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தியையும் சந்திக்க முடியாமல் போனதில் எனக்கு நிரம்பவே வருத்தமுண்டு. அதற்காகவே இன்னொரு முறை புதுக்கோட்டை செல்ல வேண்டும். "ஞானாலயா' என்கிற அந்த அற்புத நூலகம் தமிழ் இதழியலின் ஆவணக் காப்பகம் என்பதை யார்தான் மறுக்க முடியும்?

"ஞானாலயா' குறித்த ஆவணப்படம் இயக்குநர் அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை (10.10.2023) அன்று புதுக்கோட்டை பெஸ்ட் திரையரங்கில் அந்த ஆவணப்படம் திரையிடப்படும் என்கிற தகவலைக் கவிஞர் தங்கம் மூர்த்தி தெரிவித்தார். அதன் அழைப்பிதழையும் தந்தார். "ஞானாலயா' நூலகத்துக்கு ரூ.1,000 நன்கொடை செலுத்தி, அந்த ஆவணப்படத்தின் "பென் டிரைவ்'-ஐப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்தித்தபோது, எங்களது முந்தைய சந்திப்பின்போது அவர் என்னிடம் தந்த "புதுக்கோட்டை (சமஸ்தான) வரலாறு' புத்தகத்தின் ஒளிநகல் நினைவுக்கு வந்தது. ஆசிரியர் சிரஞ்சீவி எழுதி 1980 ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பு கண்ட அந்தப் புத்தகம், அடுத்த ஆண்டிலேயே இரண்டாவது பதிப்பையும் கண்டது. அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாறு தமிழகத்தின் வரலாற்றில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆவுடைராயத் தொண்டைமானில் தொடங்குகிறது அந்த வம்சாவளி. ரகுநாதராயத் தொண்டைமானால் 1686இல்  நிறுவப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம், 1951இல் அதன் அரசரான ராஜ ராஜகோபால தொண்டைமான் இந்திய யூனியனில் இணைந்தது வரை, பல ஏற்ற இறக்கங்களையும், மாற்றங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நின்றது. ஏனைய சமஸ்தானங்கள் சிதறியபோதும்கூட, புதுக்கோட்டை சமஸ்தானம் தொடர முடிந்தது என்பதே அதன் சிறப்புக்குக் கட்டியம் கூறுகிறது.

தொண்டைமான்களின் தொன்மை குறித்த பதிவில் தொடங்குகிறது, ஆசிரியர் சிரஞ்சீவியின் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு. அந்தப் பரம்பரையினர் திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வந்து, தங்களது ஆட்சியை நிறுவியது முதல் அவர்கள் சந்தித்த சோதனைகள், படையெடுப்புகள், சாதனைகள் என்று மிகவும் சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டுச் செல்கிறது அந்த வரலாற்று ஆவணம்.

புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்த பதிவில், பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட பின்னணி முக்கியத்துவம் பெறாமல் இருக்க முடியாது. பாளையப் போர்கள் குறித்தும், ஆங்கிலேய கும்பனியாருக்கும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கும் இடையே நடந்த முதலாம் பாளையப் போர் குறித்தும் விவரமாகவே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் சிரஞ்சீவி.

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பியோடிய வீரபாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு உட்பட்ட களப்பூர் என்னும் கிராமத்தை ஒட்டியிருந்த காட்டில் ஒளிந்திருந்தார். கட்டபொம்மனுடன் ஊமைத்துரையும், கட்டபொம்மனின் இரு மைத்துனர்களும், ஒரு அடைப்பக்காரனும், இரண்டு மெய்க்காப்பாளர்களும் அந்தக் காட்டில் பதுங்கி இருந்தனர். அவர்கள் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜ விஜய ரகுநாத தொண்டைமானால், ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்கப்படவில்லை, கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர் என்கிறார் சிரஞ்சீவி.

புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்தும், அதை ஆண்ட தொண்டைமான் பரம்பரையினர் குறித்தும் விவரமாகத் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் எனக்கு வாய்ப்பாக அமைந்தது. "ஒளிநகல்' அச்சுவாகனம் ஏறிவிட்டதா என்று கவிஞர் தங்கம் மூர்த்தியிடம் கேட்க மறந்துவிட்டேன். புத்தகம் வடிவம் பெற்றிருந்தால், எனக்கு அதன் பிரதி கட்டாயம் வேண்டும்.

-----------------------------------------------------

நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாகித்திய அகாதெமியின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அது வெளிக்கொணரும் ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், சிறுகதைத் தொகுப்புகளும் மிகப் பெரிய வரப்பிரசாதம். தொடர்ந்து பல சிறுகதைத் தொகுப்புகள் சாகித்திய அகாதெமியால் வெளிக்கொணரப்படுகின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டில், சாகித்திய அகாதெமி வெளிக்கொணர்ந்திருக்கும், பாரதிபாலன் தொகுத்திருக்கும் "தமிழ்ச் சிறுகதைகள்' சற்று வித்தியாசமானது. தமிழினத்தின் பண்பாட்டுக் கூறுகளை ஏதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்தும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் பாரதிபாலன். தமிழில் குறிப்பிடத்தக்க புனைவு எழுத்தாளர்கள் என்று அறியப்படும் பெரும்பாலானவர்களின் கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

கு.ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி என்று தொடங்கும் வரிசையில் 34 எழுத்தாளுமைகளின் கதைகள், ஒன்றை மற்றொன்று விஞ்சும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், சோ. தர்மன், பாவண்ணன், எஸ். ராமகிருஷ்ணன் என்று இன்றைய பிரபலங்களும் இடம் பெறுகிறார்கள்.

இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, சிறுகதை இலக்கியத்தில் காலந்தோறும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாம் காண முடிகிறது. 1938 முதல் 2020 வரையிலான சிறுகதை இலக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கிறது பாரதிபாலனின் "தமிழ்ச் சிறுகதைகள்'.

புதுக்கோட்டை செல்வதற்காக "வந்தே பாரத்' ரயிலில் மதுரைக்குப் பயணித்துத் திரும்பியபோது, நான் துணைக்கு எடுத்துச் சென்ற புத்தகம் இது!

-----------------------------------------------------


கவிஞர் வானதி சந்திரசேகரனின் "பெண்ணில் குளிர்ந்த மழை' தொகுப்பில் இருந்து சில வரிகள்  

தூக்கி வாரிப் போட்ட
வீட்டுக் குப்பைகளுடன்
அவர்கள் விட்டுச் சென்ற
சொற்களில் சிலவற்றையும்
சேர்த்துப் போட்டதில்
நீர்க்குமிழி போலப்
பட்டென
உடைந்து மறைந்தது
கணங்களின் கடுமை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com