இந்த வாரம் கலாரசிகன் - 29-10-2023

குளிர் தொடங்க இருக்கும் நிலையில் தலைநகர் தில்லிக்கு வந்திருப்பது உற்சாகமாக இருக்கிறது. தில்லி குளிரை ரசிப்பவன் என்பது மட்டுமேயல்ல, அந்த உற்சாகத்துக்குக் காரணம்.
இந்த வாரம் கலாரசிகன் - 29-10-2023

குளிர் தொடங்க இருக்கும் நிலையில் தலைநகர் தில்லிக்கு வந்திருப்பது உற்சாகமாக இருக்கிறது. தில்லி குளிரை ரசிப்பவன் என்பது மட்டுமேயல்ல, அந்த உற்சாகத்துக்குக் காரணம். தில்லியிலும் கம்பன் கழகம் தொடங்கப்படுகிறது என்பதுதான் அதைவிட முக்கியமான காரணம்.

இத்தனை ஆண்டுகளாக தில்லியில் ஏன் கம்பன் கழகம் தொடங்கப்படவில்லை என்கிற நியாயமான கேள்வி எழலாம். தில்லித் தமிழ்ச் சங்கமே பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வந்ததால், அதற்கான தேவையில்லை என்று அவர்கள் கருதி இருக்கலாம். இன்று சூழல் மாறிவிட்டது. எத்தனைக்கெத்தனை புதிய இலக்கிய அமைப்புகள் உருவாகின்றனவோ, அத்தனைக்கத்தனை தமிழ் வலுப்பெறும் என்பதுதான் எனது கருத்து.

தில்லியில் தமிழ்ச் சங்கமும், முத்தமிழ்ப் பேரவை என்கிற அமைப்பும் மட்டுமல்லாமல், கர்நாடக சங்கீத சபை, சண்முகானந்த சபை போன்ற அமைப்புகளும் அதனதன் வழியில் தமிழ் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய, பாராட்ட வேண்டிய ஓர் அம்சம் இருக்கிறது. அதுதான் தில்லியை வேறுபடுத்திக் காட்டுகிறது.

தில்லியில் பல்வேறு அமைப்புகள் இயங்கினாலும், அதை நடத்துபவர்கள் ஏனைய அமைப்புகளிலும் உறுப்பினர்களாகவோ, தொடர்புடையவர்களாகவோ இருக்கின்றனர். ஒருவர் நடத்தும் நிகழ்ச்சியில் மற்றவர்கள் கலந்து கொள்வது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வெ. ராமசுப்பிரமணியனால் தொடங்கி வைக்கப்பட்ட தில்லிக் கம்பன் கழகத்தின் நிகழ்ச்சிகள், தில்லித் தமிழ்ச் சங்க அரங்கில்தான் நேற்றும் இன்றும் நடைபெறுகின்றன. ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தில்லிக் கம்பன் கழக மேடையேறி, புதிதாக உருவாக இருக்கும் தில்லியின் மற்றொரு இலக்கிய அமைப்பை வாழ்த்தி வரவேற்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட மனமாச்சரியங்களை தமிழுக்காக அகற்றி வைக்கிறார்கள். இப்படியொரு புரிதல்தான் தில்லிவாழ் தமிழர்களின் சிறப்பு.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் முகுந்தன், "சக்தி' பெருமாள், ராகவ நாயுடு ஆகியோருடன் கே.வி.கே. பெருமாளும் சேர்ந்து, தில்லியில் நடத்தி இருக்கும் இலக்கிய நிகழ்வுகள் ஏராளம். இவர்கள் மட்டுமல்லாமல், தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் கெளரவச் செயலாளராக இருக்கும் ராஜு ராமசாமி அவரது வழியில் தமிழ்ப் பணியாற்றி வருகிறார். நான் குறிப்பிட்டிருப்பது ஒருசிலரைத்தான். அனைவரது பெயர்களையும் குறிப்பிடுவதாக இருந்தால், பட்டியல் நீண்டுவிடும். தலைநகரில் தமிழ் ஒலிக்கக் காரணமாக இருக்கும் அனைவருமே நமது பாராட்டுக்குரியவர்கள். 

தில்லிக் கம்பன் கழக நிகழ்ச்சியை முன்னின்று நடத்திக் கொடுக்க, கொழும்பிலிருந்து வந்திருக்கும் "கம்பவாரிதி' ஜெயராஜின் வழிகாட்டுதல் கிடைத்திருக்கும்போது, தில்லிக் கம்பன் கழகத்தின் வெற்றி குறித்தும், வருங்காலம் குறித்தும் சொல்ல வேண்டுமா என்ன? அட்டகாசமாக, ஆரவாரமாகத் தொடங்கி இருக்கிறது தில்லிக் கம்பன் கழகம். அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கே.வி.கே. பெருமாள்.

தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவர் கே.வி.கே. பெருமாள் நாடறிந்த கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தபோது, அவரது தனிச் செயலராகப் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

---------------------------------------------------------------

ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் அவசியம். "தினமணி' விழுப்புரம் பதிப்பின் மூத்த பக்க வடிவமைப்பாளர் சுந்தரபாண்டியன், எழுத்தாளர் ஜெயகாந்தனின் "ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தபோது, "ஏற்கெனவே படித்திருக்கிறேனே...' என்றபடி வாங்கி வைத்துக் கொண்டேன்.

கடந்த வாரம் பெங்களூரு சென்றபோது, நான் அந்தப் புத்தகத்தை வாசிக்க எடுத்துச் சென்றிருந்தேன். எடுத்துப் பிரித்தபோதுதான், அதில் இதுவரை வெளிவராத பல புதிய  கட்டுரைகள் இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகன் ஜெயசிம்மனும், கோ. எழில்முத்தும் தொகுத்திருக்கும் புதிய வார்ப்பில், ஜெயகாந்தனின் பேட்டிகள், ஜேகே குறித்து அவருடன் நெருங்கிப் பழகிய திரையுலகக் கலைஞர்கள் சிலரின் பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நவீன தமிழ்ப் படைப்பிலக்கியத்தை ஜெயகாந்தனை அகற்றி நிறுத்தி எழுதிவிட முடியாது. அவரது எழுத்துக்கு இணையாக இன்னொருவர் எழுத்தை ஒப்பிடவும் முடியாது. ஜெயகாந்தனுடன் மிகவும் நெருங்கமாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் அவர் குறித்து கூறியிருப்பது உண்மையிலும் உண்மை.

"பலரும் அவரை ஒரு முரட்டுத்தனமான ஆளாகத்தான் கற்பனை செய்வார்கள். ஆனால், என் முப்பது வருடப் பழக்கத்தில், பழகுவதற்கு அவரைப்போல் இன்னொருவரை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் சத்தமாகத்தான் பேசுவார். அது வெறும் சத்தமல்ல, சத்தியம்!'

---------------------------------------------------------------

அகவை தொண்ணூறை எட்டியிருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், நூறாண்டுகளைத் தாண்டியும் தொடர்ந்து கவிதை புனைந்து கொண்டிருக்கத் தமிழ்த்தாய் அருள்புரிவாராக!

கவிஞர் ஈரோடு தமிழன்பனைத் தங்களது ஞான குருவாகவும், வழிகாட்டியாகவும் கருதிப் போற்றும் புதுவைக் கலைமாமணி தி. அமிர்தகணேசன், முனைவர் வ. ஜெயதேவன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவர் முனைவர் ய. மணிகண்டன் ஆகியோருக்கு அவர் அவ்வப்போது செல்பேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பிய கவிதைகள், "வேறு எப்படிச் சொல்ல?' என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெளிவந்திருக்கும் கவிதைகளையும் சேர்த்தால் அச்சு வாகனம் ஏறிய கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதைகளின் எண்ணிக்கை 5,100.

"வேறு எப்படிச் சொல்ல?' கவிதைத் தொகுப்பில் "உயரங்கள் மலைகளை எப்படித் தாலாட்டும்?' என்றொரு கவிதை. அதில் கவிதை குறித்துக் கவிஞர் எழுதியிருக்கும் வரிகள் இவை  
நட்சத்திரங்கள்
வானத்திடம் எதைப் பேசும்?
அதைக்
கவிஞனிடம் பேசப்
பிறந்தது கவிதை!
கிழக்கு 
எப்போது விடியலால் கிழிபடும்?
அப்போது
கழுவியெடுத்து உலகைக்
கட்டித்
தழுவுவதும் கவிதை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com