
ஸ்ரீ இராமாநுசர் காலத்தை (கி.பி.1017-1137) ஒட்டியும் அதன் பின்னர் நம்பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை ஆகியோரின் காலத்தை அடுத்தும் வருகின்ற பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை "வைணவ உரையாசிரியர்கள் காலம்' என வரையறுக்கலாம்.
எவ்வகை இலக்கியமாயினும் அது தோன்றிய காலத்து சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (562)
என்னும் குறளில் கொடுங்கோல்
அரசன் வரி வாங்குவது வழிப்பறிக்கொள்ளைக்கு ஒப்பானது என்கிறார் திருவள்ளுவர். அவர் காலத்திலும் கள்வர் பயம் இருந்ததைத் தானே இது காட்டுகிறது!
சங்க நூல்களில் வழிப்பறி செய்வோர் ஆறுஅலைகள்வர் என்றே குறிக்கப்பட்டுள்ளனர். இக்கள்வர்களின் கண்வட்டத்திற்குத் தப்பிக் கைப்பொருளைப் பறிகொடுக்காமல் கொண்டு சென்றவர்கள் அடையும் மகிழ்ச்சியை ஈட்டுரை பதிவு செய்துள்ளது.
"வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் மகிழ்ச்சியடைவது போன்று' (ஈட்டின் தமிழாக்கம் இரண்டாம் பத்து, ப.208) என்பது
அவ்வுரைக்குறிப்பு. கைப்பொருளுடன் பயணித்தோர் வலியவர் (மிடுக்கர்)
துணையோடு காட்டுவழியைக் கடந்ததாகவும் ஈட்டுரை. (ஈட்டின் தமிழாக்கம், தொகுதி 10, பக்.39) கூறுகிறது. கள்வரால் பொருள் இழந்தோர் அரசனின் வாயிலில் சென்று முறையிட்டதையும் (தமிழாக்கம், 2-ஆம் தொகுதி, பக்.87) காண்கிறோம். வேறு சிலரோ சீரிய தனங்களை விழுங்கிப் பிறகு வெளிப்பட விட்டுக் கையகப்படுத்திக் கொண்டதாகவும் உரைக் குறிப்புகள் உள்ளன. இன்றும் சுங்கத்துறையினருக்குத் தெரியாமல்
தங்கம் முதலியவற்றைக் கடத்துவோர் இதே முறையைக் கையாண்டு, சிக்கிக் கொள்வதையும் பத்திரிகை செய்திகளில் பார்க்கிறோம்.
"பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்' என்பது பாவேந்தரின் பாடல். மனித இயல்பு என்றைக்கும் மாறாதல்லவா? பண்டும் இந்நிலை இருந்ததை ஈட்டுரை காட்சிப்படுத்துகிறது.
"கொண்டாட்டும் குலம்புனைவும் தமர்உற்றார்
விழுநிதியும்
வண்டார்பூங் குழலாளும் மனையொழிய
உயிர் மாய்தல்
கண்டாற்றேன் உலகியற்கை...'
என்னும் திருவாய்மொழிக்கு (4-9- 4) ஈட்டுரைகாரர் நம்பிள்ளை பின்வருமாறு விளக்கம் தருகிறார்.
முதியவனான பெருஞ்செல்வன் ஒருவன் வண்டார் குழலாளாகிய இளம் பெண்ணை மணந்தான். அவள் திறத்து இவனால் ஆவது ஒன்றுமில்லை. அவள்குழலில் சூடிய பூவின் செவ்வியை வண்டுதான் நுகர்ந்து செல்லும் என்று ஏளனம் செய்கிறார்.
இன்பத்துக்குத் தகுதியில்லாத பருவத்தில் செய்யும் மணத்தால் ஏற்படும் இழிவையே உரைகாரர் இங்ஙனம் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் கீதை கற்றவனைக் காட்டிலும் திருவாய்மொழி அறியக்கற்று வல்லவனுக்குப் பெருமதிப்பு இருந்ததாகப் பேசுகிறது ஈட்டுரை.
கீதை கற்றவன் ஒருவன் தம் ஊருக்கு வந்தால் உழக்கு அரிசியைக் கொடுத்து அனுப்பிவிடுவார்களாம். ஆனால் திருவாய்மொழி கற்றவன் வந்தால் சர்வேசுவரனை முன்னிட்டுக் கொண்டு கிராமத்தார் அனைவரும் அவனை எதிர்கொண்டு வரவேற்றுச் சிறப்புச் செய்வார்களாம். இதனை, "என் சொல்லி நிற்பன்'; (7 -1 - 2) என்னும் திருவாய்மொழி உரையில் காட்டும் நம்பிள்ளை, பின்னரும், "நண்ணா அசுரர் நலிவெய்த' என்னும் திருவாய்மொழியிலும் (10 - 7 - 5) மீண்டும் இதே செய்தியைக் குறிப்பிடுகிறார். திருவாய்மொழி கொண்டாடப்பட்டதை ஒருமுறைக்கு இருமுறை அவர் வாயாரச் சொல்லி மகிழும் இடங்கள் இவை.
குடிமக்களோடு நாடாண்ட அரசர்கள் பற்றிய செய்திகளும் உண்டு. அரசர்கள் கறுப்புடுத்து (மாறுவேடத்தில்) நகர சோதனைக்குச் சென்றபோது, அவர்களுக்குப் பாதுகாவலாகப் பிறர் அறியாதவாறு "அந்தரங்க சேவகர்' சிலர் சென்றதையும் ஈட்டுரையில் காணலாம். கூனும் குறளும் அரசர் சந்நிதியில் பணிபுரிந்ததை, 'ஓடும் புள்ளேறி' (தி.வா.மொ 1-8-1) என்னும் திருவாய்மொழி உரையால் அறியலாம். இச்செய்தி,
கூனும் குறளும் ஊமும் கூடிய
குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர
என்னும் சிலப்பதிகார (வழக்குரை காதை) அடிகளாலும் உறுதிப்படுகின்றது.
இனி, ""அமரர் எல்லாம் தொழ நிற்கவந்து இறைவன் எனது உச்சியுள்ளான்''என்னும் திருவாய்மொழிக்கு (1-10-10) விளக்கம் தருகையில் இன்றும் உலக வாழ்க்கையில் காணப்படும் பொருத்தமான உவமையை எடுத்தாள்கிறார் நம்பிள்ளை அரசன் அந்தப்புரத்தில் ஓரிடம் விட்டு அவனுக்கு உகந்த மற்றொருத்தியின் இருப்பிடம் நோக்கிச் செல்கையில், "அந்தரங்கராய் (அணுக்கராய்) இருப்போர் தம் முகம் காட்டிக் காரியம் கொள்வது போல' என்று ஓர் உவமை கூறுகிறார் சிலப்பதிகாரத்தில் வரும் பொற்கொல்லன் தன் களவை மறைத்துத் தப்பிக்கும் பொருட்டுக் கோவலன் மீது பழி சுமத்தி, அவனைக் கொல்வதற்கு அரசனின் அனுமதி பெற்றது இத்தகைய சூழலில் தானே!
வறுமைப்பட்டவர்களுக்கு வாழ்வு வந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்பெறுவதை ஈட்டுரை எடுத்துக்காட்டும் அழகைப் பாருங்கள்!
சாத்தன், கூத்தன் என்னும் பெயர்களில் எளிய வாழ்க்கை நடத்தியவர்கள் எல்லாம், வாழ்வு வந்தவுடன் அச்சிறுபெயர்களைத் தவிர்த்துச் சோழக் கோனார், தொண்டைமானார் என்று பட்டப் பெயர் பெற்று வாழ்ந்தார்களாம்.
"நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்' என்னும் திருவாய்மொழியில் (5-4-3) ஓர்இரவு, ஊழியாய் நீண்டதற்கு நம்பிள்ளை எடுத்துக் காட்டும் உவமை இது.
இப்படி வைணவ உரைகளிற் கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் பல. அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்து ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு, ஆராய்ச்சியாளர்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.