தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நதி வலம் வருவோம்!

நம் தமிழகத்தில் திருவண்ணாமலை கிரிவலம் எப்படி பிரபலமான ஒன்றோ, அதே போன்று வட இந்தியாவில் பிரபலமான ஒன்று நதி வலம். 

News image
Updated On :9 அக்டோபர் 2020, 10:59 am

அபிராமி மைந்தன்


நம் தமிழகத்தில் திருவண்ணாமலை கிரிவலம் எப்படி பிரபலமான ஒன்றோ, அதே போன்று வட இந்தியாவில் பிரபலமான ஒன்று நதி வலம்.

தென்னிந்தியாவில் நதியை வலம் வருவது என்ற வழக்கம் இல்லை. ஆனால் வட இந்தியாவில் ஒரே ஒரு நதியை மட்டும் மக்கள் மிகுந்த பக்தியோடு தொன்றுதொட்டு வலம் வருகிறார்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற புனித நதிதான் நர்மதை. நர்மதைக்கு மட்டும் ஏன் இந்த பெருமை?

ஆலகால விஷம் உண்ட சிவபெருமானுக்கு அதன் வெப்ப தாக்கத்தால் நெற்றி வியர்க்க அந்த வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றியவளே நர்மதை தேவி என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் நர்மதை சிவனின் மகளாகக் கருதப்படுகிறாள். ஜடாபுத்ரி என்றும் அழைப்பர்.

தன் தந்தையாகிய சிவபெருமானை என்றும் தன்னருகிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் அவ்வாறே சம்மதித்து நர்மதையின் அருகிலேயே இருப்பதாகவும், அதனால் இன்று வரை நர்மதை "ஓம்' என்ற சப்தத்துடன் பாய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நதியைத் துதித்து ஆதி சங்கரர் "நர்மதாஷ்டகம்' என்ற தோத்திரத்தை எழுதியுள்ளார். காஞ்சி மஹா சுவாமிகளும் நர்மதாவின் சிறப்பை அவருடைய அருளுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கங்கை யமுனை சரஸ்வதியை விட நர்மதையைத்தான் நம் முன்னோர்கள் புனிதமாகக் கருதியுள்ளார்கள். "ஏழு தினங்கள் யமுனையிலும், மூன்று தினங்கள் சரஸ்வதியிலும், ஒருமுறை கங்கையிலும் நீராடினால் நம் பாவங்கள் நீங்கும். ஆனால் நர்மதை நதியை ஒரு முறை தரிசித்தாலே போதும்; அந்தப் பலன்கள் கிட்டும்' எனக் கூறி இருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை எப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சமயம் நாகங்களுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த உதவியவள் நர்மதாதேவி என்பதால் நாக தேவதைகள் நர்மதாதேவியை வணங்குவோருக்கு அருள் செய்வர். இதனைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நித்ய கர்ம அனுஷ்டானங்களில் ஒன்றான சந்தியாவந்தனம் என்ற சடங்கில் அந்தணர்களில் ஒரு பிரிவினர் இன்றைக்கும் நர்மதா தேவியை காலையிலும், நிசியிலும் வந்தனம் சொல்லி, தங்களை சர்ப்ப பயத்திலிருந்து ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.

பக்தர்களின் பாவங்களைப் போக்கியதால் தன்னிடத்தில் தேங்கியுள்ள பாவங்களை எங்கே போய் நீக்கிக்கொள்வது என்று சிவபெருமானிடம் கங்காதேவி ஒரு சமயம் கேட்டபோது, அவர் நர்மதைக்குச் சென்று நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். அதன்படி கங்கையும் நர்மதையில் நீராடி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டாள் என்பதும் புராண வரலாறுதான்.

சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது ஏற்பட்ட சாம்பலின் ஒரு பகுதி கயிலை மலையில் விழுந்தது. மற்றொரு பகுதியை சிவன் தன் மேனியில் பூசிக் கொள்கிறார். மூன்றாவது பகுதி சாம்பல் முழுவதும் நர்மதை நதியில் விழ அதன் துகள்கள் ஒவ்வொன்றும் பாண லிங்கங்களாக உருவெடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தான் இன்று வரை பாண லிங்கங்கள் இயற்கையாகவே இந்த நதியில் கிடைக்கின்றன.

விந்திய சாத்புரா மலைத் தொடருக்கு நடுவே மூவாயிரம் அடி உயரத்தில் அமர்கண்ட் என்னுமிடத்தில்தான் நர்மதை உற்பத்தியாகிறாள்.

தீர்த்தாடனங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அளவுக்கு அமர்கண்ட் சிறப்புப் பெற்றது. நர்மதை மட்டுமல்ல. சோன் நதி, ஜோஹிலா போன்றவையும் அமர்கண்ட்டில்தான் உற்பத்தியாகின்றன.

வற்றாத இந்த நதியின் இரு கரைகளிலும் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் போன்ற சிவாலயங்கள் உள்ளன. ஜோதிர் லிங்கத் தலங்களில் சிலவும் இருக்கின்றன.

எந்த ஒரு நதி உற்பத்தியாகும் இடத்திலும் ஒரு கோயில் நிச்சயம் இருக்கும். அதேபோல் நர்மதையின் உற்பத்தி ஸ்தானமான அமர்கண்ட்டிலும் "நர்மதேஸ்வரர் ஆலயம்' அமைந்துள்ளது. காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியிலும் காவிரிக்கு ஒரு சிறு கோயில் உள்ளது.

இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே கூட ஒரு நதியை வலம் வரும் அதிசயம் நர்மதை நதி வலம்தான்.

"நர்மதா பரிக்ரமா'என்கிற இந்த நதி வல யாத்திரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் மிகச் சிறப்பானது. நர்மதா நதி உற்பத்தியாகிற மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்ட்டில் நீர் எடுத்துச் சென்று நர்மதை அரபிக் கடலில் கலக்கும் இடமான குஜராத் மாநிலம், பரூச் மாவட்டம் விமலேஷ்வர் வரை 1300 கி.மீ. நர்மதை நதியின் இடது கரை ஓரமாக நடந்து வந்து அது அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் அந்த நீரில் கொஞ்சம் கடலில் விட்டு விட்டு, அங்கு கடல் நீரை சிறிது பிடித்துக்கொண்டு வந்து நர்மதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதைத்தான் "நர்மதா பரிக்ரமா' என்று சொல்கிறார்கள். இது நமது காசி - ராமேஸ்வரம் யாத்திரையை ஒத்தது.

மிக மிகப் புனிதமானவளாகக் கருதப்படும் நர்மதை நதியை முதன் முதலில் வலம் வந்து நர்மதா பரிக்ரமாவை ஆரம்பித்தவர் மார்க்கண்டேய மகரிஷியாவார்.

இத்தகைய சிறப்புப் பெற்ற நர்மதை நதியை மரபுப்படி வலம் வரவேண்டுமென்றால் மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள், பதிமூன்று நாள்களாகும். இப்போதும் கூட பல பக்தர்கள் மூன்றாண்டு, மூன்று மாதங்கள், பதிமூன்று நாள்களில் பாத யாத்திரையாக இதைப் பரிக்ரமா செய்வதுண்டு. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் நான்கு முதல் ஆறு மாதங்களில் பாத யாத்திரையாக இதை வலம் வருகிறார்கள். இதுவும் முடியாதவர்கள் 15 நாள்களில் பேருந்து மூலம் நதியை வலம் வருகிறார்கள். மொத்தம் நதிவலம் 3400 கி.மீ. ஆகும்.

முறையாக வலம் வருபவர்கள் தங்கள் கைகளில் பணம் வைத்திருக்க மாட்டார்கள். உணவுகள் அனைத்தும் யாசித்துப் பெற்று தான்
உண்ணுவார்கள்.

அடுத்த வேளை உணவை சேமித்து வைக்க மாட்டார்கள். நினைத்த இடத்தில் உறக்கம். கைகளில் ஊன்றுகோல் மற்றும் கமண்டலம் மட்டுமே வைத்திருப்பார்கள். காலில் செருப்பு அணியமாட்டார்கள். இந்த யாத்திரை மேற்கொள்வது என்பது உறுதியான மனம் படைத்தோருக்கும், நர்மதா தேவியின் அருள் பெற்றோருக்கும் மட்டுமே வாய்க்கும். ஆயுளில் ஒரு முறையாவது இந்த யாத்திரையை வடநாட்டில் பலர் மேற்கொள்கிறார்கள். மனத்தூய்மையோடு சென்றால் பலன் கிடைக்கும்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த யாத்திரை பாக்கியம் வாய்க்குமென்று தோன்றவில்லை. ஆனால் ஒரு முறையாவது நர்மதைக்குச் சென்று அந்த நதியில் நீராடி நம் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.