ஏற்றம் பெறவேண்டும் ஏரிவாய் பெருமாள் கோயில்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் ஐயன்பேட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
ஏற்றம் பெறவேண்டும் ஏரிவாய் பெருமாள் கோயில்!
Updated on
2 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் ஐயன்பேட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிவசங்கரபுரம். முன்பு பாலாற்றிலிருந்து நீர்வரத்து ஒரு ஏரியில் நிரம்பி, இவ்வூருக்கு கால்வாய் வழியாக வந்து வளப்படுத்தியதால், "ஏரிவாய்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின்போது பாரிவேட்டையாக பழைய சீவரத்திற்கு வந்து திரும்புங்கால், இக்கிராமத்திற்கும் விஜயம் செய்யும் வழக்கம் உண்டு.

இக்கிராமத்தின் வடகிழக்கு மூலையில் காசி விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பிற தெய்வங்களுக்கும், கோஷ்ட மூர்த்தங்களுக்கும் சந்நிதிகள் அமையப்பெற்று ஓர் அழகிய சிறிய சிவாலயமாகத் திகழ்கிறது. இங்கு மூலவரைப் பார்த்தவாறு மேற்கு நோக்கி சனீஸ்வர பகவான் தனிசந்நிதி கொண்டுள்ளது சிறப்பு. 

சிவன் கோயிலுக்கு மேற்கில் ஸ்ரீகமல வல்லித்தாயார் சமேத ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் பெருமாள் நின்ற கோலத்தில் அழகிய திருக்கோலம் கொண்டு, அருகிலேயே தாயார் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கக் காட்சி தருவது கண்களுக்கு விருந்து. இந்த திவ்ய தம்பதிகளை ஒரு சேர வழிபட, நம் எண்ணங்கள் நிறைவேறும் எனக் கூறுகின்றனர்.

பெருமாள் எழுந்தருளியிருக்கும் கருவறைக்கு மேலே விமானம் இல்லை. முன் மண்டபம் 16 கால் மண்டபமாக இருந்திருக்கிறது. மண்டபத் தூண்களில் ஜெய, விஜயர்கள், நரசிம்மர், அனுமன், மண்டபத்தை கட்டிய மன்னரின் வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக காட்சியளிக்கிறது. சிற்ப வடிவங்களைக் காணும் பொழுது 16}ஆம் நூற்றாண்டு கால விஜயநகர கலைப்பணியாகக் கருதலாம்.

ஒரு காலத்தின் விழாக்கோலம் பூண்டு, வழிபாட்டுச் சிறப்புடன் அழகுற விளங்கிய பெருமாள் கோயிலின் இன்றைய நிலை மாறுபட்டுள்ளது. இடிபாடுகளுடன் சிதிலமடைந்த மொட்டைக்கோபுரம், எங்கும் செடிகொடிகள், மர வேர்கள் கட்டடத்தின் மேல் ஆக்கிரமிப்பு, மடப்பள்ளி தூண்கள், கீழே சிதறிக் கிடக்கும் சிலைகள், உடைந்த ஸ்ரீதேவி, பூதேவி சிற்பவடிவங்கள், பயனற்ற தீர்த்தக் கிணறு இதுபோன்று காண்போரை கண் கலங்கச் செய்யும் அவல நிலைகளுடன் காணப்படுகிறது. 

பெயரிலேயே அழகைக் கொண்டிருக்கும் அழகிய மணவாளப்பெருமாள் ஆலயம் மேலும் பாழடைவதைத் தடுத்து, உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டியது திருமால் அடியார்களின் தலையாய கடமையாகும். இதன் முதல் கட்டமாக கடந்த 7}ஆம் தேதியன்று சென்னை, கே.கே.நகர் அண்ணாமலையார் அறப்பணிக்குழு சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 

தகவல் தொடர்புக்கு: சுகுமார் - 9677300562. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com