சுபிட்சம் தரும் சுப்பிரமணியர்
கோம்பாக்' மாவட்டத்தில் "பத்து மலை முருகன்' கோயில் அமைந்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வட திசையில் சுமார் 13 கி.மீ. தொலைவில் "கோம்பாக்' மாவட்டத்தில் "பத்து மலை முருகன்' கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் பட்டு ஆறு ஓடுகிறது.
அதிலிருந்துதான் பத்து மலை என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இந்த மலையை "தெமுவான்' எனும் பழங்குடியினர் புனிதத் தலமாகப் பாவித்து வந்துள்ளனர்.
1860 -ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் சீனர்கள் காய்கறிகளைப் பயிரிட்டு வந்தனர். உரத்துக்காகக் குகைகளில் இருக்கும் வெüவால் கழிவுகளை தோண்டி எடுத்துப் பயன்படுத்தினர்.
சுண்ணாம்புக் குன்றுகளை ஆராய்ச்சி செய்த அமெரிக்கத் தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர், 1878}ஆம் ஆண்டில் பத்து மலை பற்றி அறிமுகப்படுத்த, அதன் புகழ் ஓங்கியது.
18 , 19}ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து மலாயா (தற்போது மலேசியா) நாட்டுக்குக் குடியேறியவர்கள், மகா மாரியம்மன் கோயிலை 1873}ஆம் ஆண்டில் நிறுவினர். இந்தக் கோயிலை நிறுவிய தமிழ்நாட்டைச் சார்ந்த தம்புசாமிப் பிள்ளையை வேல் வடிவில் இருந்த பத்துமலை நுழைவு
வாயில் மிகவும் கவர்ந்தது.
சூரபத்மனை அழிக்க அன்னை பார்வதி தேவியிடம் வேல் வாங்கிச் செல்லும் முருகனும், வேலாயுதமும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தது. எனவே அங்கு சுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்தார்.1892}ஆம் ஆண்டு முதன்முதலில் தைப்பூசத் திருவிழா இங்கு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
ஆரம்ப காலத்தில் ஒற்றையடிப் பாதை மூலம் கோயிலை அடைய முடியும் என்ற நிலை இருந்தது. பின்னர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மரக்கட்டைகளில் 272 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. படிகளைக் கடந்து சில படிக்கட்டுகள் கீழே இறங்கினால், பெரிய பரப்பளவு உள்ள சமதளம் உள்ளது. இடது புறம் உள்ள ஒரு சிறிய குகையில் சுப்பிரமணிய சுவாமியையும், அவர் முன்னே உள்ள வேலாயுதத்தையும் தரிசிக்கலாம்.
பூஜைகள் வேலாயுதத்துக்கு மட்டும்தான் நடைபெறும். மூலவர் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 40 படிக்கட்டுகள் மேல் நோக்கி ஏறிச் சென்றால் முன் மண்டபம், கருவறை, விமானத்துடன் கூடிய சந்நிதியில் வள்ளி } தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்கலாம். இச்சந்நிதியைச் சுற்றி வரும் அளவுக்கு விசாலமான இடவசதி உண்டு. இந்தச் சந்நிதியை 1991} ஆம் ஆண்டு நிறுவியுள்ளனர்.
நாளடைவில் 16 படிகளை அடுத்து ஒரு சமதளம் என 17 அடுக்குகள் கொண்ட 272 படிகளை மூன்று வரிசைகளாக அமைத்தனர். இடதுபுறம் மலை ஏறவும், வலது புறம் கீழே இறங்கவும், மத்தியில் இருக்கும் வரிசையில் காவடிகளை மேலே எடுத்துச் செல்லவும் பயன்படுத்துகின்றனர். பத்து மலை முருகனை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், குடும்பப் பிரச்னை தீரும், சுபிட்சம் மற்றும் மனநிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பத்து மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஆறு நாள்கள் யாக பூஜைகள், அலங்கார ஆராதனைகளுடன் விமரிசையாக நடைபெறுகிறது. வரும் நவம்பர் 15}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி மலைமேல் உள்ள வளாகத்தில் நடைபெற இருக்கிறது. முருகனுக்கு அரோகரா முழக்கம் எழுப்பி, இதை ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பது கண்கொள்ளாக் காட்சி.
மேலும் கிருத்திகை, சஷ்டி என முருகனுக்குரிய விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச வைபவம்தான் பெருந்திருவிழாவாகும்.
தைப்பூசத்தையொட்டி, 21 அடி உயரம் உள்ள வெள்ளித் தேர் திருவீதியுலா சிறப்புமிக்கதாகும். பக்தர்கள் மயில் காவடி, பால்குடங்களைச் சுமந்து வந்து வேலுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை இங்கு விசேஷம்.
தைப்பூச காலங்களில் மூன்று நாள்கள் இடைவெளி இல்லாமல் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெறுவது இத்தலத்துக்கு மட்டுமே உரிய பெருமையாகும். இங்கு அபிஷேகம் செய்த பால் எங்கே செல்கிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.
பத்து மலை அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ள 141 அடி உயரமுள்ள முருகன் சிலை உலக அளவில் பெயர் பெற்றது. 15 சிற்பிகள் இணைந்து மூன்றாண்டுகளில் இந்தச் சிலையை உருவாக்கினர். 1550 கன மீட்டர் கான்கிரீட், 250 டன் எடையுள்ள எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரத்யேகமாக தாய்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை சிலையின் மீது பூசப்பட்டுள்ளது. இச்சிலையின் கட்டுமானச் செலவு 25 லட்சம் மலேசிய ரிங்கிட் ஆகும்.
2006 - ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற திறப்பு விழாவின்போது, 15 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது.
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்பதோடு, மலேசியா என்றாலே இந்த முருகன் சிலையை அடையாளப்படுத்தும் வண்ணம் புகழ்பெற்று விட்டது. இந்தச் சிலையை உருவாக்கியவர் திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர். தியாகராஜன்.
தரிசனத்துக்காக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பத்து மலை முருகன் கோயில் திறந்திருக்கும்.
- செந்தில் குமரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

