ரஷிய டாங்கிகளை அழிக்க உதவிய சிறுவன்: ஹீரோவாகக் கொண்டாடும் உக்ரைன்

தனது டிரோன் கேமரா மூலமாகக் கண்டறிந்து, அவற்றை சுக்குநூறாக அழித்தொழிக்க உதவிய 15 வயது சிறுவனை உக்ரைன் படையினர் ஹீரோவாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ரஷிய டாங்கிகளை அழிக்க உதவிய சிறுவன்: ஹீரோவாகக் கொண்டாடும் உக்ரைன்
ரஷிய டாங்கிகளை அழிக்க உதவிய சிறுவன்: ஹீரோவாகக் கொண்டாடும் உக்ரைன்

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷியாவின் டாங்கிகள் கீவ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அணிவகுத்து வந்து கொண்டிருந்ததை, தனது டிரோன் கேமரா மூலமாகக் கண்டறிந்து, அவற்றை சுக்குநூறாக அழித்தொழிக்க உதவிய 15 வயது சிறுவனை உக்ரைன் படையினர் ஹீரோவாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பிப்ரவரி மாதத்தில் நடந்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஆன்ட்ரி பொக்ரசா பற்றிய செய்திகள் தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது.

கீவ் நகரை ரஷிய படைகள் முற்றுகையிட்டு போர்த் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது, தனது டிரோன் மூலம் எடுக்கப்படும் படங்களை உடனடியாக உக்ரைன் படையினருக்கு அனுப்பி, அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்துள்ளார் ஆன்ட்ரி பொக்ரசா.

அவர் உண்மையிலேயே ஹீரோ, உக்ரைனின் ஹீரோ என்று உக்ரைனின் ராணுவ தளபதி யூரி காஸ்ஜனோவ் கூறுகிறார். அந்த மாகாணத்தில், டிரோன்களை இயக்கும் அனுபவம் கொண்டவராக அவர் மட்டுமே இருந்தார். அவரது உதவி அந்த வேளையில் பெரிய இழப்புகளைத் தவிர்க்க உதவியது என்கிறார்கள்.

தற்போதைய நிலவரம் என்ன?
கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் போரிடுவதற்காக கூடுதல் படையினரை ரஷியா அனுப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சியெவெரோடொனட்க்ஸ் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியா மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இதற்காக சண்டையிட்டு வரும் தங்கள் நாட்டுப் படையினருக்கு உதவுவதற்காக, கூடுதல் படையினரை ரஷியா அனுப்பி படைபலத்தை அதிகரித்துள்ளது.

சியெவெரோடொனட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான ரஷியாவின் முயற்சியை முறியடிக்க, உக்ரைன் படையினா் போரிட்டு வருகின்றனா். இதன் காரணமாக, அந்த நகர வீதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

இதில், சில இடங்களில் நல்ல வெற்றியும் சில இடங்களில் மிதமான வெற்றியும் உக்ரைன் படையினருக்கு கிடைத்து வருகிறது.

சியெவெரோடொனட்ஸ்க் நகரில் கட்டுப்பாட்டு நிலவரங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தாலும், ரஷியப் படையினரை முன்னேற விடாமல் அவா்களது தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் உக்ரைன் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மற்றொரு நகரான லிசிசான்ஸ்கிலும் ரஷியப் படையினா் தீவிரமாக குண்டுமழை பொழிந்து வருகின்றனா். ரஷியா நடத்திய தாக்குதலில் சந்தைப் பகுதியும், பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களும் சேதமடைந்தன; 3 போ் காயமடைந்தனா்.

அந்த நகரை முழுமையாக அழிக்கும் நடவடிக்கையில் ரஷியப் படையினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் அவா்களது தாக்குதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்றாா் சொ்ஹீ ஹாய்டாய்.

போர்க் காரணம்?
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷிய ஆதரவு அதிபரான விக்டா் யானுகோவிச்சின் ஆட்சியை மேற்கத்திய ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி கவிழ்த்தனா். அதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ‘டான்பாஸ்’ என்று பொதுவாக அழைக்கப்படும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா்.

ரஷியாவும், உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக, அந்தப் பகுதியில் ரஷியப் படையினா் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனா்.

அந்தப் பகுதியில் முக்கிய ரயில்வழித்தடங்களின் மையமாகத் திகவும் லிமான் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, லுஹான்ஸ்க் பகுதியியில் அரசுப் படை வசம் கடையிசாக உள்ள பெரிய நகரமான சியெவெரோடொனட்ஸ்க் நகரைக் கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com