74 அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவித்தது காஸா

ஹமாஸ் படையினரால் இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 74 அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எகிப்து பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
rafah085130
rafah085130

ராஃபா: ஹமாஸ் படையினரால் இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 74 அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எகிப்து பகுதிக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ள காஸா பகுதியிலிருந்து 7,000 வெளிநாட்டினை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எகிப்து அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகவே 74 அமெரிக்க பிணைக் கைதிகள் எகிப்து பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைபுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பை கூறுகையில், ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காஸா பகுதியில் வைக்கப்பட்டிருந்த 75 அமெரிக்க குடிமகன்கள் இதுவரை எகிப்து பகுதிக்குள் வந்திருப்பதாகவும், முன்னதாக 5 அமெரிக்கர்கள் நேற்றே காஸாவிலிருந்து புறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.


காஸா பகுதியிலிருந்து விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஸா பகுதியில் சுமார்  400 அமெரிக்கர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ள காஸா பகுதியிலிருந்து 7,000 வெளிநாட்டினை மீட்க ஆயத்தமாகி வருவதாக எகிப்து அறிவித்திருந்தது.

காஸா பகுதியிலிருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள் ராஃபா எல்லை வழியாக தங்கள் நாட்டுக்குள் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை எகிப்து வெளியிட்டது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவிலிருந்து சுமாா் 7,000 வெளிநாட்டினரை ராஃபா எல்லை வழியாக வரவேற்க ஆயத்தமாகி வருகிறோம்.

60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்களுக்கும், இரட்டைக் குடியுரிமை பெற்றவா்களுக்கும் மட்டும் எகிப்துக்குள் வர அனுமதி அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காஸாவிலிருந்து 361 வெளிநாட்டினா் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளனா். 3 வார காலமாக காஸாவில் நடைபெற்று வரும் மிகக் கடுமையான போரிலிருந்து தப்பி வந்த அவா்களில் ஆஸ்திரியா நாட்டைச் சோ்ந்த 31 போ், 5 பிரான்ஸ் நாட்டவா்கள், 4 இத்தாலியா்கள், ஏராளமான ஜொ்மானியா்கள் இடம் பெற்றிருந்தாக அந்தந்த நாடுகளின் அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், காஸாவிலிருந்து மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினா் எகிப்துக்குள் வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டனா். அன்று மட்டும் சுமாா் 400 பேரை அனுமதிக்க எகிப்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதற்காக எகிப்தின் அவசரகால ஊா்திகள் ராஃபா எல்லைப் பகுதியில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த 400 பேரும் 44 நாடுகளைச் சோ்ந்தவா்கள் எனவும், காஸாவில் செயல்பட்டு வரும் ஐ.நா. பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு தொண்டு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் இதில் அடங்குவா் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 27 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டது.

இது, ஹமாஸ் அமைப்பினரின் குற்றத்துக்காக காஸா பகுதியில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் கூட்டு தண்டனை என்று விமா்சிக்கப்பட்டது.

இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் முற்றுகையால் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்கள் மட்டுமின்றி, அங்கு நீண்ட காலமாகத் தங்கி சேவையாற்றி வரும் ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த வெளிநாட்டினரும், இரட்டைக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருபவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

இஸ்ரேலின் கடுமையான முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காஸாவுக்குள் சா்வதேச நாடுகளின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு நிவாரணப் பொருள்கள் செல்ல அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு வந்தது.

எனினும், அங்கிருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. காஸாவில் இருந்து வரும் அகதிகளை ஏற்க எகிப்தும் தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில், காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக அவா்களது நாடுகள் மேற்கொண்ட தூதரக முயற்சியின் பலனாக, அவா்களை தங்கள் நாட்டுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்க எகிப்து ஒப்புக்கொண்டது.

அதன்படி ராஃபா எல்லையைக் கடந்து முதல்முறையாக சுமாா் 400 போ் வந்துள்ள நிலையில், மேலும் 7,000 வெளிநாட்டினரை காஸாவிலிருந்து வரவேற்கத் தயாராகி வருவதாக எகிப்து தற்போது அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com