
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிற அதே வேளையில் காஸாவின் மீதான குண்டுவீச்சும் தொடர்ந்து வருகிறது. கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். 40 பேர் காயமுற்றுள்ளனர்.
ஜோர்தான் சந்திப்பு ரத்து
காஸாவிலுள்ள மருத்துவமனை மீதான தாக்குதலின் விளைவாக விளைவாக ஜோர்தானில் அரபு தலைவர்களுடன் ஜோ பைடன் கலந்து கொள்ளவிருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு
அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு
ஜோ பைடன், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய உதவிகளை அமெரிக்கா அளிக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
இந்த நிலைப்பாடு தெரிந்தது தான் எனினும் மருத்துவமனை தகர்ப்புக்குப் பிறகு மேற்கு கரை(வெஸ்ட் பேங்க்) பகுதிகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. அங்கு அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது: இஸ்ரேலில் ஜோ பைடன்
சீனா கண்டனம்
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் சீனாவும் இணைகிறது.
“சீனா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடும் உயிர்ப்பலியை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. உடனடியான போர் நிறுத்தத்தை சீனா வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவின் நிலை
காஸாவில் ஒரு லிட்டர் எரிபொருள் இருந்தாலும் சில உயிர்களைக் காக்க இயலும் என்கிற நிலை தான் உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மூடப்படுள்ள நிலையில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளிலும் பல பகுதிகள் மின்சாரப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.
ஒரு லிட்டர் எரிபொருள் இருந்தால் கூட எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் எனப் பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காஸா சுகாதார அமைச்சகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.