பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் பயங்கரவாதிகளைக் கொன்று பயணிகளை மீட்ட ராணுவம்!

பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.
பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம்AP
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.

ரயில் சிறைப்பிடிப்பு:

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.

குவெட்டாவில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கூடலர் மற்றும் பிரு குன்றி மலைகளுக்கு இடையிலான சுரங்கத்தில் ரயில் நுழைந்தபோது ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பலூச் அமைப்பினர், தண்டவாளத்தை வெடிபொருள் வைத்து தகர்த்து ரயிலை சிறைப்பிடித்தனர்.

இந்த ரயிலின் 9 பெட்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர்.

இதனைத் தொடார்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட மீட்புப் பணியின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இருதரப்பிலும் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து முதல்கட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 155 பேர் மீட்கப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பயணிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டதாகவும், 50 பேர் கொல்லப்பட்டதாகவும் பலூச் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல எனத் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் முயற்சியால் பயங்கரவாதிகள் 33 பேர் கொல்லப்பட்டனர்.

மீட்புப் பணிகள் நிறைவு:

அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், ரயிலில் சிக்கியிருந்த 346 பயணிகளும் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்:

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்,”ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குறித்து முதல்வர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான சம்பவத்தில் அப்பாவி உயிர்களை இழந்த நம் நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் உறுதியை அசைக்க முடியாது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com