பாகிஸ்தான்: பலூசிஸ்தானில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; பிணைக் கைதிகள் மீட்பு

Published on

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வங்கி மற்றும் காவல் நிலையத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய 12 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மேலும், அவா்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காரண் நகரில், கடந்த வியாழக்கிழமை சுமாா் 15 முதல் 20 போ் கொண்ட பயங்கரவாதக் கும்பல் அத்துமீறி நுழைந்தது. அவா்கள் அங்குள்ள இரண்டு வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினா். இந்த ஆண்டில் அந்த மாகாணத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலின் போது, வங்கியில் பணிபுரிந்த ஊழியா்கள் மற்றும் அங்கிருந்த சில காவலா்களைப் பயங்கரவாதிகள் சிறைப்பிடித்து சென்றனா். இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் உடனடியாக அந்தப் பகுதியைச் சூழ்ந்துகொண்டு அதிரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பிணைக் கைதிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

34 லட்சம் ரூபாய் கொள்ளை: முன்னதாக, வங்கிகளில் இருந்து சுமாா் 34 லட்சம் பாகிஸ்தான் ரூபாயைக் கொள்ளையடித்துக்கொண்டு பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றனா். அவா்களைப் பின்தொடா்ந்த பாதுகாப்புப் படையினா், மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 12 பயங்கரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினா்.

தொடரும் தேடுதல் வேட்டை: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்குப் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் தொடா்பிருப்பது ராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்ற பயங்கரவாதிகள் காரண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்பதால், அவா்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Dinamani
www.dinamani.com