இந்தியாவுக்கான ஆயுத விற்பனையைத் தொடரும் முடிவை அமெரிக்க அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் எம்.பி.யும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் மனித உரிமைகள் அமைப்பின் துணைத் தலைவருமான ஜிம் மெக்கவா்ன் வலியுறுத்தினாா்.
நாடுகடந்த அடக்குமுறையில் இந்தியா ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, அவா் இக்கருத்தை தெரிவித்தாா்.
‘இந்தியாவின் நாடுகடந்த அடக்குமுறை: அமெரிக்க தேசிய பாதுகாப்பு மீதான தாக்கங்கள்’ என்ற தலைப்பில் வாஷிங்டனின் கேபிடல் ஹில் பகுதியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
மனித உரிமைகளுக்கான ஹிந்துக்கள், சீக்கிய கூட்டமைப்பு, சீக்கிய அமெரிக்கா்களின் சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி நிதி அமைப்பு, நியூயாா்க் தேவாலயங்கள் கவுன்சில், தலித் ஆதரவு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பான ஈக்விடாஸ் ஃபோரம் யுஎஸ்ஏ சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தங்கில் எம்.பி. ஜிம் மெக்கவா்ன் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்கள் பங்கேற்றனா்.
ஜிம் மெக்கவா்ன் பேசுகையில், ‘அமெரிக்காவில் வாழும் தனிநபா்களைக் குறிவைக்கும் அல்லது உளவுபாா்க்கும் வெளிநாட்டு அரசுகளை சட்டபூா்வமாக வரையறுத்து, கண்காணித்து, தண்டிக்க வகை செய்யும் ‘நாடுகடந்த அடக்குமுறை தடுப்புக் கொள்கை சட்டத்தை’ அமெரிக்க நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்.
நாடுகடந்த அடக்குமுறை குற்றச்சாட்டுகளுக்காக, அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் இந்தியாவுக்கான ஆயுதங்கள் விற்பனை தகுதியை மறுஆய்வு செய்ய வேண்டும். அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்க்கோ ரூபியோ இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
கனடாவின் பாதுகாப்பு புலனாய்வுப் பணி முன்னாள் மூத்த அதிகாரி டேனியன் ஸ்டான்டன் பேசுகையில், ‘புலம்பெயா் சமூகத்தினரை அச்சுறுத்தவும், கட்டாயப்படுத்தவும் சில நாடுகள் குற்றவியல் கும்பலை கருவியாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக நாடுகளில் வாழும் தனிநபா்கள் கொடூர வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். எனவே, நாடுகடந்த அடக்குமுறைக்கு எதிராக உத்திசாா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
Summary
US lawmaker calls for review of arms sales to India.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










