/

கத்தார் பரிசளித்த விமானம், வானில் பறக்கும் வெள்ளை மாளிகை! டிரம்ப் புகழாரம்!

கத்தார் பரிசளித்த புதிதாக புதுப்பிக்கப்பட்ட புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம் குறித்து...

News image

கத்தார் பரிசளித்த விமானம் "வானில் பறக்கும் வெள்ளை மாளிகை" - எக்ஸ்

Updated On :20 ஜூன் 2026, 3:19 pm IST

வாஷிங்டன்: கத்தார் பரிசளித்த புதிதாக புதுப்பிக்கப்பட்ட புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இது உலகிலேயே மிகவும் ஆடம்பரமான "வானில் பறக்கும் வெள்ளை மாளிகை" என்று புகழாரம் சூட்டினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் அரச குடும்பம் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு பரிசளித்த சொகுசு வசதிகள் கொண்ட ஏர் ஃபோர்ஸ் ஒன் 747 ரக விமானத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் டிரம்ப் நிர்வாகம், இதனை செப்டம்பர் முதல் டெக்சாஸில் உள்ள அமெரிக்க விமானப்படை பாதுகாப்பு மையத்தால் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்த விமானத்தை பார்வையிட்ட டிரம்ப், அதில் கையெழுத்திட்டு நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதை, "வானில் பறக்கும் வெள்ளை மாளிகை" என்றும், அமெரிக்கா இதுவரை இயக்கிய மிக நவீன விமானங்களில் ஒன்று என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

அமெரிக்க அதிபரின் விமானப் பிரிவுக்கான முக்கியத் தளமான மேரிலாந்த் 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்' நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய ட்ரம்ப், மிகக் குறுகிய காலத்தில் அதுவும் வெறும் 10 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியவர், விமானத்தின் மாற்றங்கள் மற்றும் திறன்களை பாராட்டினார்.

மேலும், இந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் அதன் பெரிய அளவே என்றும், உலகிலேயே மிகவும் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 'வானில் பறக்கும் வெள்ளை மாளிகையாக' மாற்றப்பட்டுள்ளது. இது முந்தைய அனைத்து 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானங்களை விடவும் அதிக தொலைவு மற்றும் வேகத்தில் பறக்கக்கூடியது; விமானப்படை இயக்கக்கூடிய மிக அழகான விமானங்களில் இதுவும் ஒன்று என்று டிரம்ப் கூறினார்.

இந்த புதிய ஆடம்பர 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம் அமெரிக்க சுதந்திரத்தின் 250-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஜூலை 4-ஆம் தேதி 'நேஷனல் மாலில்' நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வான்வழி அணிவகுப்பில் பங்கேற்கும், துருக்கியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் செல்ல இந்த விமானத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விமானத்தைப் பரிசளித்ததற்காக கத்தார் அமீருக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப், விமானத்தில் மேம்படுத்தப்பட்ட உட்புறம் மற்றும் அதன் திறன்களைப் பார்வையிட்டார்.

ஆடம்பர வசதிகள் கொண்ட இந்த போயிங் 747 விமானம், கடந்த ஆண்டு அதிபரின் விமானத்திற்கு மாற்றாக கத்தார் அரசால் வழங்கப்பட்டபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அரசாங்கம் பெற்ற மிகப்பெரிய வெளிநாட்டுப் பரிசுகளில் ஒன்றாக இது கருதப்பட்டதால், இது சட்டம் மற்றும் தார்மீக ரீதியான கவலை அளிப்பதாக பேசப்பட்டது.

அப்போது, அத்தகைய சலுகையை ஏற்க மறுப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் என்று கூறி தனது முடிவை நியாயப்படுத்தினார் டிரம்ப்.

தொழிற்துறை அமைப்புகளின் தகவல்படி, இந்த விமானத்தின் மதிப்பு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Summary

unveiled a new presidential aircraft, a modified Boeing 747 gifted by Qatar, describing it as a "flying White House" and one of the most advanced aircraft ever operated by the United States...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.