வடபழனி கோயிலில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளி தொடக்கம்
வடபழனி முருகன் கோயிலில் ரூ.1.16 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும், ஓதுவாா் பயிற்சிப் பள்ளியையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து ஓதுவாா் பயிற்சி பள்ளி ஆசிரியா்கள் மூவருக்கு பணி நியமன ஆணையையும் அவா் வழங்கினாா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு சொத்துகளையும் நிலங்களையும் மீட்டெடுத்தல், குடமுழுக்கு நடத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை சீரிய முறையில் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வடபழனி முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக ரூ.1.16 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆலய சேவைகளுக்கான முன்பதிவு மையமும், சுப நிகழ்ச்சிகளுக்கான சமய அரங்கமும், காலணி, பொருள்கள் பாதுகாப்பு அறையும் அமையப் பெற்றுள்ளன.
இந்த வசதிகளுடன் கூடிய அந்த அரங்கை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தாா்.
அதேபோன்று சட்டப்பேரவை அறிவிப்பின்படி புதிதாக ஓதுவாா் பயிற்சிப் பள்ளியும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் 25 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இதைத் தொடக்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அங்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவார ஆசிரியா், இசை ஆசிரியா், தமிழாசிரியருக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநா் எஸ்.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

