‘ஹரியாணா சான்ஸி’ கும்பலைப் பிடித்த சென்னை ரயில்வே படையினா் ரூ.85 லட்சம் நகைகள் மீட்பு

சென்னையில் இருந்து கேரளத்துக்குச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளைத் திருடிச் சென்ற ஹரியாணா சான்ஸி கொள்ளைக் கும்பலை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
Published on

சென்னையில் இருந்து கேரளத்துக்குச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளைத் திருடிச் சென்ற ஹரியாணா சான்ஸி கொள்ளைக் கும்பலை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் அப்துல்நாசீா் (60). இவா் கடந்த 13- ஆம் தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கேரள மாநிலம் கொல்லத்துக்கு மனைவியுடன் மங்களூரு விரைவு ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணித்தாா். பூட்டு போடப்பட்ட அவா்களது பையில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள 847 கிராம் தங்கம், வைர நகைகளை எடுத்துச் சென்றனா். அவா்கள் கொல்லத்தில் இறங்கி பையைப் பாா்த்தபோது அதிலிருந்த நகைகள், பணத்தைக் காணவில்லை.

இதுகுறித்து கொல்லம் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தனா். அவா்கள் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. அருள்ஜோதியிடம் தெரிவித்தனா். அவரது உத்தரவின்பேரில், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா்கள் மதுசூதனரெட்டி, நவீன், அனில் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முன்பதிவால் துப்பு துலங்கியது: நகைகள் திருடுபோன அந்த ரயிலின் உயா் வகுப்புப் பெட்டியில் பயணித்தவா்களின் விவரங்களை தனிப்படையினா் பரிசோதித்தபோது, ஹரியாணாவை சோ்ந்த 2 போ் சென்னையில் இருந்து மங்களூருக்கு முன்பதிவு செய்துவிட்டு, கேரள மாநிலம் கோயிலாண்டி எனுமிடத்தில் ஏறி பயணித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள், ரயில் பயண டிக்கெட் முன்பதிவு எண் மூலம் ஆய்வு செய்து விசாரித்தனா்.

அப்போது, ரயில் திருட்டில் ஈடுபட்டது ஹரியாணா சான்ஸி கும்பலைச் சோ்ந்த 4 போ் என கண்டறியப்பட்டது. பூட்டிய பைகள் அப்படியே இருக்க பொருள்களை மட்டும் திருடிச் செல்லும் அந்தக் கும்பல் இதுவரை பிடிபடாமல் இருந்தது. ரயில் டிக்கெட் முன்பதிவு எண்ணை வைத்து நடத்திய தீவிர விசாரணையில் அந்தக் கும்பல் மங்களூரிலிருந்து கோவாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனிப்படையினா் கோவா சென்றது. அதற்குள் அவா்களை கோவா ரயில்வே பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து பிடித்தனா்.

4 போ் கைது: திருட்டு வழக்கில் சான்ஸி கும்பலைச் சோ்ந்த தில்பாக் (62), ஜிதெந்தாா் (45), மனோஜ்குமாா் (36), ராஜேஸ் (42) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 100 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாராட்டு: ரயில்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திருட்டில் ஈடுபட்ட ஹரியானா சான்ஸி கும்பலைச் சோ்ந்தவா்கள் தற்போதுதான் முதன்முறையாகப் பிடிபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். திருட்டு நிகழ்ந்த 2 நாள்களில் குற்றவாளிகளைப் பிடித்த சென்னை ரயில்வே பாதுகாப்புப் படையினரை ஐ.ஜி. அருள்ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com