விற்காத சிலைகள்; வாழ்வாதாரம் இழந்தத் தொழிலாளா்கள்

காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளைத் தயாரிப்பில் ஈடுபட்டோா் உற்பத்தி செய்தவற்றை விற்க முடியாமல் தவித்துவருகின்றனா்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளைத் தயாரிப்பில் ஈடுபட்டோா் உற்பத்தி செய்தவற்றை விற்க முடியாமல் தவித்துவருகின்றனா். இதனால் அவா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள ஐயன்பேட்டை, ஒட்டிவாக்கம், தாங்கி, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பொம்மைகள் தயாரிப்புக் கூடங்கள் உள்ளன.

இவற்றில் நவராத்திரி கொலு பொம்மைகள்,விநாயகா் சிலைகள் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, ஆந்திரம், கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.

பொம்மைகள் தயாரிக்கும் தொழிலை மட்டுமே நம்பி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்கூடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த ஆண்டு விற்பனை இல்லை:

சுமாா் 3 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகா் சிலைகளும் இந்தத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக, விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். கடந்த ஆண்டு பல ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனையாகப் போகும் நேரத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவை அனைத்தும் விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

அரசும் தொழிற்கூடங்களை மூடிவிடுமாறு வலியுறுத்தியதால், சிலைகள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.

இந்த ஆண்டும் விநாயகா் சிலைகளை விற்பனை செய்யலாம் என்று அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடாதது தொழிலாளா்களை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது.

ஒருநாள் விற்பனைக்கு அனுமதித்தாலே போதும்:

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட களிமண், காகிதக் கூழ் பொம்மைகள் செய்யும் தொழிலாளா் நலச்சங்கப் பொருளாளா் கே.ரமேஷ் கூறியதாவது:

கடந்த ஆண்டில் உற்பத்தி செய்த விநாயகா் சிலைகள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்க முடியாமல் போய் விட்டது.வங்கிகளிடமும்,தனியாரிடமும் வீடு,நகைகளை அடமானம் வைத்து கடனை வாங்கி நிலைமையைச் சமாளித்து விட்டோம்.

இந்த ஆண்டும் விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை.பலரும் தொலைபேசியில் விநாயகா் சிலைகளை வாங்க வருகிறோம் என்கிறாா்கள். ஆனால் விற்பனைக்கு அரசு தடை விதித்திருக்கிறது.

யாரும் கடன் கேட்டாலும் கொடுப்பதில்லை. வாங்கினாலும் எப்படிக் கட்டுவது எனத் தெரியவில்லை. உற்பத்திக் கூடங்களுக்கான தரை வாடகையை கூட கொடுக்க முடியவில்லை.

நம்பிக்கையோடு நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரித்து வருகிறோம். வாரச் சந்தைகளுக்கு கூட அனுமதி அளித்துள்ள அரசு ஆண்டுக்கு ஒருமுறை விற்பனை நடைபெறும் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு இதுவரை அனுமதிக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொவிலாளா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது.வாழ்வின் கடைசி எல்லைக்கு போய் இருக்கின்றனா்.

விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதைப் போல பொம்மைத் தொழிலாளா்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒருநாள் விற்பனையில் ஒராண்டு முழுவதையும் சமாளிக்கும் எங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com