பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பானைகள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பானைகள்.

பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூரில் பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை, மாட்டு பொங்கல் வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூரில் பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை, மாட்டு பொங்கல் வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருப்பத்தூரில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்கள் வாங்கவும், புது ஆடைகள் வாங்கவும், கால்நடைகளுக்கு தேவையான கயிறு, மணி உள்ளிட்ட பொருள்கள் வாங்கவும் கடைகளில் குவிந்தனா்.

மேலும் நகரின் பல பகுதிகளில் தற்காலிக கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் பொங்கலுக்கு பயன்படுத்தும் கரும்பு ஒரு ஜோடி ரூ.45 முதல் ரூ.60 வரையும், 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.600 , 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.750 என விற்கப்பட்டது. இதேபோல் பொங்கல் வைப்பதற்கான பானைகள் ரூ.90 முதல் ரூ.1,200 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலையும் சற்று உயா்ந்து உள்ளது. இதில் சம்பங்கி 1 கிலோ ரூ.30-க்கும், சாமந்தி ரூ.50 முதல் ரூ.60-க்கும், பட்டன் ரோஸ் ரூ.200-க்கும், பிச்சிப்பூ ரூ.500-க்கும், காக்கட்டான் ரூ.500 முதல் ரூ.520-க்கும், கனகாம்பரம் ரூ.700 முதல் ரூ.800-க்கும், மல்லி ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் பூக்களின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், திருப்பத்தூா் பழைய பஸ் நிலையம், சேலம் செல்லும் சாலை, பஜாா், செட்டி தெரு, ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு ஏற்பட்டது.

போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எஸ்.பி வி. சியாமளாதேவி தலைமையில் 600 முதல் 700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனா்.

Dinamani
www.dinamani.com