ஊனமுற்றோருக்கான அரசு உதவி மனநோயாளியாகும் பெற்றோர்!

ஈரோடு,ஆக. 6: வருமான உச்சவரம்பு காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஊனமுற்றோர், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஊனமுற்றோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவ
Updated on
1 min read

ஈரோடு,ஆக. 6: வருமான உச்சவரம்பு காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஊனமுற்றோர், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 ஊனமுற்றோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. மூன்று சக்கர சைக்கிள்கள், நடைப் பயிற்சி உபகரணங்கள், காதுகேட்கும் கருவிகள், பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச உதவிகளை அரசு வழங்குகிறது.

 மூன்று சக்கர சைக்கிள் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.35 ஆயிரம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.12 ஆயிரம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.24 ஆயிரம், பஸ் பாஸ் பெற ரூ.12 ஆயிரம் என்று உதவிகளைப் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இந்த வருமானத்தை வைத்து உடல் ஆரோக்கியத்துடன் உள்ள குடும்பத்தினரும் சாதாரண கிராமத்தில் வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழ்நிலையில் எளிதானதல்ல. ஊனமுற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த குறைவான ஆண்டு வருமானத்தில் வாழ்க்கை நடத்துவது சிரமமே.

 வாய் பேச முடியாத, காது கேளாதோருக்கு, தொழில் துவங்க வங்கிக் கடன் உதவியும், இலவச பஸ் பாஸ் மட்டுமே அரசு வழங்குகிறது. இந்த உதவிகளைப் பெறுவதற்கும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், வசதியுள்ளவர்களாக இருந்தால், தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து பராமரிக்கின்றனர். அரசு வழங்கும் இதுபோன்ற உதவிகளையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அரசு விதிகள் ஓரளவு பொருந்தினாலும், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அதிகாரிகள் இந்த உதவிகளை பெற்றுத்தருகின்றனர்.

 நடுத்தர குடும்பத்தில் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால் இந்த பெற்றோர்களின் நிலை மிகவும் பரிதாபமானதே. குடும்பச்செலவுகளை சமாளிப்பதே, மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், ஊனமுற்ற குழந்தையைப் பராமரிப்பது மற்றும் அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை குறித்த சிந்தனை போன்றவற்றால், இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் படிப்படியாக மனநோயாளிகளாகி விடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

 வருமான உச்சவரம்பின்றி ஊனமுற்றோர் அனைவருக்கும் திருமண உதவித்தொகையாக தற்போது ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுபோல், வருமான உச்சவரம்பின்றி ஊனமுற்றோர் அனைவரும் அரசு வழங்கும் உதவிகளைப் பெறலாம் என்று அரசு அறிவித்தால், மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கும் பெரும்பாலான ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு மருந்தாக அமையும்.

 ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இலவச பஸ் பாஸ் வழங்கும் தமிழக அரசு, ஊனமுற்றோருக்கு பஸ் பாஸ் வழங்க மட்டும் ஏன் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். ஊனமுற்றோர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் கட்டுப்பாடின்றி இலவச பஸ் பாஸ் வழங்கினால், ஊனமுற்றோர் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் இருக்காது. அரசு சிந்திக்குமா?.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com