காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைக்கழிவுகள்!: தடுப்புச்சுவர் கட்டியும் பலனில்லை

ஈரோடு, ஜன. 4: காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க, ரூ. 12 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்டியும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு துணைக் கால்வாய் அமைக்கப்படாததால், காலிங்கராயன்
Updated on
2 min read

ஈரோடு, ஜன. 4: காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க, ரூ. 12 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்டியும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு துணைக் கால்வாய் அமைக்கப்படாததால், காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் நேரடியாகக் கலந்து விளைநிலங்களை மாசுபடுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் கால்வாய்

பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது. பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், ஈரோடு, வெண்டிபாளையம், சாவடிபாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி வழியாகச் செல்லும் இந்த வாய்க்காலை நம்பி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

சுமார் 125 கி.மீ. நீளமுள்ள இவ் வாய்க்காலில் மறவாபாளையம், ஆர்.என்.புதூர், பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பகுதிகளில் இயங்கிவரும் சாய ஆலைகள் மற்றும் தோல் ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் கலப்பதால் நீர் மாசுபட்டு விவசாய நிலங்கள் விஷ பூமியாக மாறிவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ. 12 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது; பழுதடைந்த மதகுகளை மாற்றும் பணி கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது.

வாய்க்காலின் வலது கரையில் 6 கி.மீ. தூரத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதன் மூலம் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தடுப்புச்சுவரை ஒட்டி துணைக் கால்வாய் வெட்டி காலிங்கராயன் வாய்க்காலின் வலது கரையிலுள்ள, சூரியம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம் பேரூராட்சிகள், வீரப்பன்சத்திரம் நகராட்சி, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டுக் கழிவுநீர் மற்றும் சாய, தோல் கழிவுநீரை பிச்சைக்காரன்பள்ளம் ஓடை வழியே கொண்டுசென்று சுத்திகரித்து காவிரி ஆற்றில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காலிங்கராயன் வாய்க்காலின் பராமரிப்புப் பணிகள் முடிந்து 15 நாள்களில் துணைக் கால்வாய் வெட்டி, வாய்க்காலில் கழிவு நீர் கலக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

ஆனால் அதன்படி துணைக் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் முழுவதும் வலதுகரையில் தேங்கி, வழிந்தோட வழியின்றி தடுப்புச்சுவரையும் மீறி வாய்க்காலில் நேரடியாகக் கலக்கிறது.

கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நோக்கத்திற்காக ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரால் பலன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவரின் ஓரத்தில் கழிவுநீர் முழுவதும் வழிந்தோட வழியில்லாமல் தேங்கியுள்ளதால், வாய்க்கால் கரையிலுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீரும் மாசுபட்டு விட்டது. கழிவுநீர் தேங்கியிருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் பெருகுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக வெளியேற்றவும், கழிவுநீர் வழிந்தோடும் வகையில் மாற்று நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விவசாயிகள், மற்றும் கால்வாய் அருகில் குடியிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com