

கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பெண்கள் குழந்தைகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ன. அந்தவகையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மைக்கேல் தேவாலயமும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலி ஜொலித்தது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது புனித மைக்கேல் தேவாலயத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக தேவாலயங்களில் நடைபெற்று வரும் கிருஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகளில் தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மைக்கேல் தேவாலயத்தில் 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை தொடங்கியது.
இதில் 500க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை பாடல்களை பாடினர். இதனைத் தொடர்ந்து 12 மணிக்கு தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் குழந்தை இயேசு பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், கரோனா வைரஸ் முற்றிலுமாக உலகைவிட்டு அகலவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஊழியர்களுடன் ஆலயத்தை சுற்றி வந்து குழந்தை இயேசுவின் வரலாறு மற்றும் நற்செய்தி அறிவித்தார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் குழந்தை இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.