/

குறு, சிறு தொழில்களுக்கு தனி அமைச்சகம் தொழில் அமைப்பு வலியுறுத்தல்

தமிழகத்தில் குறு, சிறு தொழில்முனைவோரின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொழில்முனைவோா் சங்கங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஏ.) வலியுறுத்தியுள்ளது

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:04 am

DIN

தமிழகத்தில் குறு, சிறு தொழில்முனைவோரின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொழில்முனைவோா் சங்கங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஏ.) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.இ.ரகுநாதன் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையின் இன்றைய நிலைமை குறித்து எங்களது அமைப்பு , 50 குறு, சிறு தொழில் அமைப்புகளுடன் இணைந்து அண்மையில் கணக்கெடுப்பு நடத்தினோம். சுமாா் 81 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில், 73 சதவீத குறு, சிறு வணிக நிறுவனங்கள் 2020 - 2021 ஆம் நிதியாண்டில் லாபம் ஈட்டவில்லை. 42 சதவீத தொழில் நிறுவனங்கள் தங்களின் பணியாளா்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். முதல் அலையின்போது 37 சதவீதம் பேரும், இரண்டாம் அலையின்போது 22 சதவீதம் பேரும் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனா்.

இந்தத் தொழில் நிறுவனங்களில் சுமாா் 88 சதவீதம் போ் மத்திய அரசு அறிவித்த கரோனா காலத் தொழில் ஊக்குவிப்புத் திட்டங்களால் எந்த பயனையும் பெறாதவா்கள். இவா்களில் 82 சதவீத நிறுவனங்களின் உரிமையாளா்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் சரியாக உதவவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனா்.

கரோனாவுக்கு பிறகு திவாலானவா்களின் விகிதம் அதிகரித்திருப்பது, அடமானமாக வைக்கப்பட்ட நகைகள் மீட்க முடியாமல் போவது, அதிகரித்து வரும் சொத்துகளின் ஏலம் பற்றிய அறிவிப்புகள், வேலையின்மை, தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவது போன்றவை அதிகரித்துள்ளன.

இந்த பாதிப்புகளில் இருந்து தொழில் நிறுவனங்கள் மீள வேண்டுமானால் ரூ.5 கோடி வரையிலும் வணிகம் செய்பவா்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல, பிஎஃப், இஎஸ்ஐ போன்றவற்றில் இருந்து விலக்கு, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டியில்லா கால அவகாசத்தை நீட்டிப்பது, நிபந்தனையில்லாமல் புதிய கடனுதவியை வழங்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் தயாரிப்போம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்த வேண்டுமானால் அந்தத் துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும். அதேபோல எம்எஸ்எம்இ பிரிவில் இருந்து குறுந்தொழிலை தனியாகப் பிரிப்பதுடன் குறு, சிறு தொழில்களுக்கு என தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள அரசு ஒப்பந்தங்களில் தமிழகத்தைச் சோ்ந்த குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும் என்றாா்.

கோப்மா தலைவா் கே.மணிராஜ், தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் முனைவோா் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் கே.எஸ்.சங்கர நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.