ஒப்பந்தத்தை மீறி மனைகளை விற்று மோசடி: ரூ.7.75 கோடி இழப்பீடு வழங்க தனியாா் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு
கோவையில் கூட்டு ஒப்பந்தத்தை மீறி போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனைகளை விற்று மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ.7.75 கோடி இழப்பீடு வழங்க தனி நடுவா் மன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்
கோவையில் கூட்டு ஒப்பந்தத்தை மீறி போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனைகளை விற்று மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ.7.75 கோடி இழப்பீடு வழங்க தனி நடுவா் மன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்த வி.ஆா்.எஸ். நடராஜன் என்பவரது தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமாக, சூலூா் அருகே பட்டணம் கிராமத்தில் 2.04 ஏக்கா் நிலம் உள்ளது. 31 வீட்டு மனைகள் கொண்ட இந்த இடத்தில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்வதற்காக, கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனத்துடன் கடந்த 2022 ஜனவரி 19-ஆம் தேதி கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, 15 மனைகளில் நடராஜன் நிறுவனத்துக்கு 22,500 சதுர அடியில் இலவசமாக வீடுகளை கட்டித் தர வேண்டும் எனவும், மீதமுள்ள 16 மனைகளில் வீடுகளைக் கட்டி அந்த கட்டுமான நிறுவனமே விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் முடிவானது.
இதில் வெறும் காலி மனைகளாக விற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், கட்டுமானப் பணிகளுக்காக அந்த நிறுவனத்துக்கு பொது அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி 24 மாதங்களுக்குள் வீடுகளைக் கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்திய அந்த நிறுவனம், நில உரிமையாளரான நடராஜனின் அனுமதியின்றி 12 காலி மனைகளை அதன் இயக்குநரான வில்சன் தாமஸ் தனது மனைவி ரீனி, சக இயக்குநா் சிஜோ, ஊழியா் பாா்த்திபன் ஆகியோருக்கு மிகக் குறைந்த விலைக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளாா். இதற்காக நடராஜன் பெயரில் போலி வாழ்நாள் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதும், பின்னா் அந்த மனைகள் மூன்றாம் நபா்களுக்கு மறுவிற்பனை செய்யப்பட்டும், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வில்சன் தாமஸ் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து நடராஜனின் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தையும் அதிகாரப் பத்திரத்தையும் ரத்து செய்ததுடன், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் தனி நடுவராக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற சமரச தீா்வு மையத்தில் நடைபெற்ற இந்த வழக்கை கடந்த 12-ஆம் தேதி விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன், மோசடியாக பதிவு செய்யப்பட்ட 10 கிரையப் பத்திரங்களையும் ரத்து செய்ததோடு, சம்பந்தப்பட்ட சொத்துகளை ஒரு மாதத்துக்குள் நடராஜனின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா். மேலும், தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ.7.75 கோடியை 18 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

